நீராதாரத்தை மீட்கப் போராடும் பெண்மணி


நீராதாரத்தை மீட்கப் போராடும் பெண்மணி
x
தினத்தந்தி 6 Dec 2021 11:00 AM IST (Updated: 4 Dec 2021 4:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழக நீர் ஆதாரங்கள் பாதுகாப்புக் குழுவை ஏற்படுத்தி, அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். எங்கள் குழுவுக்கு உறுப்பினர்கள், ஆலோசகர்கள், ஆயுள் உறுப்பினர்கள் என யாரும் இல்லை. நான் எந்த ஊரில் ஏரி, குளம், குட்டைகளை மீட்பதற்குச் செல்கிறேனோ, அந்த ஊர் மக்களிடம் பேசுவேன்.

“நான் சிறுமியாக இருந்தபோது, நண்பர்களோடு சேர்ந்து ஓடையில் மீன் பிடித்து, அதை கண்ணாடிக் குடுவையில் இருந்த தண்ணீரில் நீந்தவிட்டு விளையாடினேன். இப்பொழுது அந்த ஓடையையே காணவில்லை” என்கிறார் சியாமளா நாகராஜன்.

42 வயதாகும் சியாமளாவின் சொந்த ஊர் ஆண்டிப்பட்டி. தற்போது தேனி மாவட்டத்தில் மின்சாரத்துறை அலுவலராக பணியாற்றுகிறார். கணவர் நாகராஜன் பேராசிரியர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தனது வேலை, குடும்பம் என ஒரு வட்டத்துக்குள்ளே வாழாமல் சமூகத்துக்கும், இயற்கைக்கும் உதவும் சேவையை செய்து வருகிறார் சியாமளா. ஓடைகள், கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நதிகள் என நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் வறண்டுபோன நீராதாரங்களைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டெடுக்கிறார். அங்கு வாழும் மக்களுடன் சேர்ந்து அவற்றை வளப்படுத்துகிறார். இதன் மூலம் பல போராட்டங்களையும், பிரச்சினைகளையும் சந்தித்தாலும் அவற்றை எண்ணி வருந்தாமல், தொடர்ந்து தனது லட்சியப் பாதையில் தைரியத்தோடு பயணித்து வருகிறார்.

தனது செயல்பாடுகளை பற்றி சியாமளா நாகராஜன் கூறுவது…
“சிறுவயதில் நண்பர்களோடு சேர்ந்து விளையாடி மகிழ்ந்த ஓடைகள் தற்போது இல்லை. ஏரிகள், குளங்கள் போன்ற பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாக, விவசாய நிலங்களாக மாறியுள்ளன. 
‘இயற்கையை தனக்கு மட்டும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்ற சுயநலப்போக்கு அதிகரித்துவிட்டது. காடுகள், காட்டு விலங்குகள், பறவைகள் என அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறோம்.

மனிதனுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்த ஆற்றுப்படுகைகளை அழித்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை பணம்கொடுத்து வாங்குகிறோம். நதிகள், ஆறுகள், ஏரிகளை வரைபடத்தில் மட்டும் பார்க்கும் நிலையை உருவாக்கியுள்ளோம். ஏ.சி. அறையில் அமர்ந்துகொண்டு புவி வெப்பமயமாதல் குறித்து பேசுகிறோம்.

நீராதாரங்கள் அழிந்ததால் பிழைப்புக்காக கிராமத்தை விட்டு நகரத்துக்கு வரும் மக்கள், அங்கு தினக்கூலிகளாக வேலை செய்கிறார்கள். ‘எங்கள் நிலத்திற்குத் தண்ணீர் இருந்திருந்தால், நான் ஏன் நகரத்துக்கு வரப்போகிறேன்?’ என புலம்புபவர்கள் பலர் உண்டு. இந்த வேதனைகளைப் போக்க நம்மால் என்ன செய்ய முடியும் என நினைத்தேன். அதனால் நான் நீராதாரங்களை மீட்க வேண்டும் என்று எண்ணினேன்.

தமிழக நீர் ஆதாரங்கள் பாதுகாப்புக் குழுவை ஏற்படுத்தி, அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். எங்கள் குழுவுக்கு உறுப்பினர்கள், ஆலோசகர்கள், ஆயுள் உறுப்பினர்கள் என யாரும் இல்லை.  நான் எந்த ஊரில் ஏரி, குளம், குட்டைகளை மீட்பதற்குச் செல்கிறேனோ, அந்த ஊர் மக்களிடம் பேசுவேன். அந்தப் பகுதிக்கான அதிகாரிகளை நாடி உதவி கேட்பேன். 

அங்கு வாழும் மக்களுடன் பேசி, அவர்களையே  சீரமைக்கும் பணிகளில் பங்கேற்கச் செய்வேன். அப்போது தான் எதிர்காலத்திலும் நீர் நிலைகளைக் கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்வார்கள் என்பது எனது எண்ணம். அந்தப் பணியில் ஆர்வமுடன் பங்கெடுக்க முன்வருபவர்களே எங்கள் உறுப்பினர்கள். அந்தந்த கிராம மக்களை நேரடியாகத் தலையிட வைத்துப் பணி செய்வதால், அந்த நீராதாரத்தை அவர்கள் நேரடியாகப் பாதுகாக்கிறார்கள்.

இவ்வாறு பிச்சம்பட்டி கண்மாய், அதிகாரி கண்மாய், ராமர் கல் ஓடை‌ (மூன்றரை கிலோமீட்டர் நீளம் 45 அடி அகலம்) மற்றும் அதன் தொடரான குமரிக்கல் ஓடை, கிளை நீர்‌வழித்தடங்கள் மீட்கப்பட்டன.



புளியமரத்துக் கண்மாய்‌ சீர்‌ செய்யப்பட்டது. அதிகாரி கண்மாய் 180 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதன் வழித்தடங்கள் பெறப்பட்டன. மயிலாடும்பாறை‌ பெரிய குளம் கண்மாய் 116 ஏக்கர் முழுமையாக ஆக்கிரமிப்பில் இருந்து மீண்டு அதன் முழு வடிவம் பெற்றது. அதன் தொடர்ச்சியாகச் சிறுகுளம் கண்மாய் உயிர் பெற்றது. மதுரை மாவட்டத்தில் எம்.கல்லுப்பட்டி கிராமத்தில் ஊரின் நடுவே உள்ள ஊரணி, கழிவுநீர் சேகரிக்கும் பகுதியாக இருந்தது. அதை முழுமையாக சுத்தம் செய்து மீட்டோம். அதைத் தொடர்ந்து பாறையூரணியும் பயன்பாட்டுக்கு வந்தது.

ஆண்டிப்பட்டியில் உள்ள சித்தைய கவுண்டன்பட்டி, மலைகள் சூழ்ந்த ஊர். மழைக்காலங்களில் மலைகளில் இருந்து வரும் தண்ணீர், தேனாள் ஓடை வழியாகச் சென்று ஆண்டிப்பட்டி கண்மாயில் கலக்கும். ஆனால் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் அந்நிலை மாறிப்போனது. அந்த ஊர்ப் பொதுமக்களுடன் இணைந்து தீவிரமாகப் பணிபுரிந்து தேனாள் ஓடையை அகலப்படுத்தி சீரமைத்துள்ளோம். இதன் மூலம் பல கிராமங்கள் பயனடையும்.

இதுபோல் குளம், ஊரணி, குட்டை, கண்மாய், ஓடை என பல வடிவங்களில் உள்ள நீர்நிலைகளைப் புனரமைப்பு செய்துள்ளோம். பொதுவாக ஆண்டிப்பட்டி பகுதியில் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை கடும் வறட்சி மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். எங்கள் உழைப்பால் கடந்த மூன்று வருடங்களாக இந்த அவலநிலை முற்றிலும் மாறியது. காலிக் குடங்களுடன் தண்ணீருக்கு அலையும் அவலம் நீங்கியது” என்கிறார் சியாமளா.

இதுமட்டுமில்லாமல் மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி என்ற கிராமத்திற்கு உட்பட்ட ஊரணி, மயிலாடும் பாறை பெரியகுளம் கண்மாய், வைகையில் இருந்து நீர் கொண்டு செல்லும் 58 கிராம கால்வாய்கள் போன்றவற்றையும் சீர்படுத்தி மீட்டிருக்கிறார் சியாமளா.

தனது சேவைகளுக்காக சியாமளா பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2019-ம் ஆண்டு என்.ஆர்.டி அறக்கட்டளை சார்பில் மகளிர் தின 
விழாவில்  விருது, அதே ஆண்டு மேரி மாதா கல்லூரி சார்பில் சிறந்த சமூக சேவகிக்கான விருது, 2020-க்கான அப்துல்கலாம் நண்பர்கள் விருது, இந்த ஆண்டு தமிழக முதல்வரிடம் இருந்து சிறந்த சமூக சேவைக்கான விருது போன்றவை அவற்றில் முக்கியமானவை.

“முல்லைப் பெரியாறில் இருந்து வரும் உபரி நீரை, குழாய் மூலம் தேனிக்கு கொண்டு வந்து சேர்த்தால், அதே பகுதியில் உள்ள பல கிராமங்கள் வளம்பெறும். இது தொடர்பான திட்டப்பணிகள் நடைபெற வேண்டும்” எனக் கூறி முடித்தார் சியாமளா. 

Next Story