கேக் சாப்பிடும் ஆசையால் தொழில் முனைவோரான அஞ்சனா
நான் சைவ குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக முட்டை இல்லாமல் கேக் செய்வதற்குக் கற்றுக்கொண்டேன்.
சைவ உணவு பிரியரான அஞ்சனா, கேக் சாப்பிடும் ஆசையால் முட்டை கலக்காத கேக் தயாரிப்பதற்கு கற்றுக்கொண்டார். ஆர்வம் காரணமாக வித விதமான கேக் செய்வதில் கைதேர்ந்தவர் ஆனார். தற்போது இதையே வெற்றிகரமான தொழிலாக நடத்தி வருகிறார். ஏராளமானவர்களுக்கு கேக் தயாரிப்பை கற்றுக்கொடுக்கிறார். அவரது பேட்டி…
உங்களைப் பற்றி கூறுங்கள்?
நான் சென்னையில் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பேக்கிங் துறையில் இருக்கிறேன். இந்தத் துறையில் நுழைந்ததற்கு காரணம் கேக் சாப்பிட வேண்டும் என்ற அதீத ஆசை. நான் சைவ குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக முட்டை இல்லாமல் கேக் செய்வதற்குக் கற்றுக்கொண்டேன்.
திருமணத்துக்குப் பிறகு குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதால், வீட்டில் இருந்தபடியே சிறிய அளவில் பேக்கிங் செய்யத் தொடங்கினேன். பின்பு சிறந்த முறையில் பேக்கிங் செய்வதற்குக் கற்றுக்கொண்டு, தொழிலை விரிவுபடுத்தினேன். மற்றவர்களுக்கும் கேக் தயாரிப்பைக் கற்றுக்கொடுப்பதற்காக பயிற்சி வகுப்பைத் தொடங்கினேன். இதுவரை ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பேக்கிங் கற்றுக்கொடுத்திருக்கிறேன்.
இந்தத் துறையில் உங்கள் லட்சியம் என்ன?
1 மில்லியன் கேக் தயாரிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.
உங்கள் முன்னேற்றத்திற்கு காரணமாக யாரைக் கருதுகிறீர்கள்?
தொழிலில் வெற்றியடைய எனக்கு உறுதுணையாக இருப்பவர்கள், கணவர் அருண் மற்றும் எனது பெற்றோர். சமூக வலைத்தளங்கள் மூலம் தொழிலை மேம்படுத்துவதில், பள்ளியில் படிக்கும் எனது மகன்கள் இருவரும் உதவி வருகின்றனர்.
இந்தத் துறையில் உங்களுடைய மறக்க முடியாத அனுபவம் எது?
நான் 5 வயது சிறுமி முதல் 87 வயது முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் கேக் தயாரிப்பு பயிற்சி வகுப்புகள் எடுத்திருக்கிறேன். அதில் வினூஷா என்ற 9 வயது சிறுமி, சிறப்பாக கற்றுக்கொண்டு சொந்தமாக பேக்கரியை நடத்தி வருகிறாள். நான் 45 விதமான பேக்கிங் வகுப்புகள் எடுக்கிறேன். அதில் தயாரிக்கப்படும் கேக்குகளை ஆசிரமங்களுக்கு கொடுத்து விடுவோம். இதில் ஏற்படும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.
பேக்கிங்கில் வெற்றிபெறுவதற்கு நீங்கள் கூறும் யோசனைகள் என்ன?
பேக்கிங் செய்பவருக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி தெளிவான யோசனை இருக்க வேண்டும். மற்றவர்களின் கருத்தைப் பற்றி கவலைப்படக்கூடாது. மேலும் தயாரிப்பில் நிபுணராக இருக்க வேண்டும். விரைவாக விற்கும் பொருட்களை பற்றியும் அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் எளிதாக வெற்றி பெற முடியும்.
Related Tags :
Next Story