உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நாச்சியார்
ஆப்பிரிக்க தமிழ் பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்த பிறகு, பல தமிழர்களின் அறிமுகம் கிடைத்தது. ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் தமிழர்களை, தமிழால், தமிழுக்காக ஒன்றிணைக்க வேண்டும். தமிழை, தமிழ் இலக்கியங்களை, கலாசாரத்தை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் நாச்சியார். இவர் பேச்சு, எழுத்து, சேவை என பல தளங்களில் இயங்கி
வருபவர். இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பன்னாட்டு லாபநோக்கற்ற அமைப்புகளின் திட்ட நிர்வாகத்தில் 14 ஆண்டுகளாக செயலாற்றி வருகிறார். அவரது பேட்டி...
உங்களைப் பற்றி?
“எனது சொந்த ஊர் சென்னை. தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர். தாய் குடும்பத்தலைவி. இளங்கலை வணிக மேலாண்மை, சமூகப்பணியில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம், தமிழர் வரலாறு மீது கொண்ட ஆர்வம் காரணமாக இந்திய தொல்லியல் மற்றும் கல்வெட்டியலில்
பட்டயப்படிப்பு, மனநலம், நலவாழ்வு மீது கொண்ட ஈடுபாடு காரணமாக நலவாழ்வியல், சீரிய மனநலம் குறித்த பட்டயக்கல்வி ஆகியவற்றைப் படித்திருக்கிறேன்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான ஆலோசகராகப் பணியாற்றி வருகிறேன். பணியின் பொருட்டு பலநாடுகளில் வசிக்க வேண்டியுள்ளது. தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் கணவருடன் வசிக்கிறேன். கணவர் அருள் என்னைப்போலவே தொழில்முறை சமூகப் பணியாளர்.
நீங்கள் செய்துவரும் பணிகள் என்ன?
ஆப்பிரிக்க நாடுகளில் மக்களுக்குத் தொண்டாற்றிவரும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பைத் தொடங்கி, கணவருடன் சேர்ந்து நிர்வகித்து வருகிறேன். மேலும், தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழ் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
பள்ளியில் படித்தபோதே மேடைப்பேச்சில் ஆர்வம் இருந்ததால் பேச்சாளராகவும், சொற்பொழிவாளராகவும் என்னை மேம்படுத்திக்கொண்டேன். அதன் மூலம் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தமிழ்ச் சங்கங்களின் மேடைகளில் பேசி வருகிறேன். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், ஆப்பிரிக்க கண்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்று, எனது பங்களிப்பை வழங்கி வருகிறேன்.
சமூக செயற்பாட்டாளராக உங்கள் பயணம் குறித்து சொல்லுங்கள்?
எல்லோரும் வருமானத்துக்காக தொழிலையும், மன நிறைவிற்காக சேவையையும் செய்வார்கள். என்னுடைய தொழிலே மனநிறைவு தரும் வகையில் அமைந்தது, எனக்குக் கிடைத்த வரம். இளங்கலை வணிக மேலாண்மை முடித்த பிறகு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றினேன். வருமானம் கிடைத்தாலும், மனநிறைவு கிடைக்கவில்லை.
அதன் காரணமாக வார இறுதி நாட்களில் சில தொண்டு நிறுவனங்களில் தன்னார்வலராகப் பணிபுரிந்து வந்தேன். பின்னர் ‘ஏன் இதையே தொழில்முறையாகச் செய்யக் கூடாது?’ என்ற எண்ணம் எழுந்தது. எனவே சமூகப்பணி கல்வியை முறையாகப் படித்துப் பட்டம் பெற்று, அதையே தொழிலாகவும், வாழ்வாகவும் மாற்றிக் கொண்டேன்.
இன்று ஆப்பிரிக்காவில் வாழும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், வன, நீர் மற்றும் நிலவளப் பாதுகாப்பு என பல துறைகளில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகள், மறுவாழ்வு மற்றும் மாற்று ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். தற்போது வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழர்களது வாழ்வியல், பணியிடம், ஊதியம் சார்ந்த சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கவும், அடுத்த தலைமுறையிடம் தமிழை வளர்க்கவும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
ஆப்பிரிக்க தமிழ் பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்த பிறகு, பல தமிழர்களின் அறிமுகம் கிடைத்தது. ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் தமிழர்களை, தமிழால், தமிழுக்காக ஒன்றிணைக்க வேண்டும். தமிழை, தமிழ் இலக்கியங்களை, கலாசாரத்தை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
அதன் காரணமாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கினேன். அதன் மூலம் பெண்கள், குழந்தைகள் இடையே தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்கிறேன். தற்போது ‘ஆப்பிரிக்கப் பேச்சாளர் பாசறை’ ஏற்படுத்தி மாதந்தோறும் இலக்கியம் மற்றும் உலக நிகழ்வு சார்ந்த கருத்தரங்கங்களை நடத்தி வருகிறேன்.
நலவாழ்வுப் பயிற்றுநராகவும், தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் உங்களின் செயல்பாடுகள் என்ன?
நலவாழ்வு என்றாலே உடல்நலம் என்ற கருத்து நிலவி வருகிறது. சீரான உடல் மற்றும் மனநலமே நலமான வாழ்வின் அடித்தளம். ‘நான் நன்றாக இருக்கிறேன் என்ற பூரண மனநிலையே நலவாழ்வின் முதல் படி’. அத்தகைய எண்ணத்தை எட்டுவதில் உள்ள சிக்கல்களை முறையாக அறிந்து, சீரிய பயிற்சிகள் மூலம் நலமான வாழ்வை அடைய மக்களுக்கு உதவி வருகிறேன்.
நமது சமுதாயத்தின் இயல்பை ஒட்டியுள்ள ஆப்பிரிக்க சமுதாயத்திலும், கடைநிலையில் இருக்கும் ஒருவரை கைதூக்கி விடவோ, வழிகாட்டவோ இருப்பவர்களைவிட, பிறரின் தோல்விகளைக் கொண்டாடும் ஆட்கள்தான் அதிகம். இத்தகைய சமுதாயத்தில் நிலவும் நடைமுறை சிக்கல்களைக் களைந்து, ஒருவர் வாழ்வில் வழிகாட்ட தன்னம்பிக்கைப் பேச்சாளராக இருப்பதை நான் மிகவும் நேசிக்கிறேன்.
என் பேச்சைக் கேட்கும் யாராவது ஒருவர் - தோல்வி மனநிலையில் இருந்து விடுபட்டு, ‘வெற்றி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எவ்வாறு களைவது?’ என்று யோசிக்கத் தொடங்கிவிட்டால் போதும், அதுவே எனது வெற்றி.
உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் என்னென்ன?
ஊருணி அறக்கட்டளையின் ‘ஃபீனிக்ஸ் பெண் விருது’, தமிழ் அமெரிக்கா அமைப்பு வழங்கிய ‘புதுமைப் பெண்’ என்ற அங்கீகாரம், இனிய நந்தவனம் ஃபவுண்டேஷன் வழங்கிய ‘நம்பிக்கை பெண்’ விருது போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.
உங்கள் எதிர்காலத் திட்டம்?
தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தெளிவது, இயன்றவரை மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அமைப்
பையும், இயற்கை வளங்களைக் காப்பதற்கான அமைப்பையும் ஏற்படுத்துவதே எனது இப்போதைய குறிக்கோளாக உள்ளது.
Related Tags :
Next Story