பறவைகளின் இறப்பு எடுத்துக்காட்டும் எச்சரிக்கை - கிருபா நந்தினி


பறவைகளின் இறப்பு எடுத்துக்காட்டும் எச்சரிக்கை - கிருபா நந்தினி
x
தினத்தந்தி 20 Dec 2021 5:30 AM GMT (Updated: 18 Dec 2021 11:34 AM GMT)

உணவுச் சங்கிலியின் அனைத்து நிலையிலும் உள்ள ஒரே உயிரினம் பறவைகள். இவை சுற்றுச்சூழல் மாறுபாடுகளுக்கு உடனடியாக செயல்பட்டு, நமக்கு எச்சரிக்கை அளிக்கும். அதை கவனிக்கத் தவறியதன் விளைவாகத்தான், தற்போது நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.

“சுற்றுச்சூழலில் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும், உடனடியாக செயல்பட்டு நமக்கு எச்சரிக்கை கொடுப்பவை பறவைகள். அவற்றை கவனிக்கத் 
தவறியதன் விளைவாகவே, பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்” என சமூக அக்கறையுடன் பேச ஆரம்பித்தார் முனைவர் வெ.கிருபா நந்தினி.


கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த கிருபா நந்தினி, பறவைகள் மற்றும் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது பேட்டி…

“நமக்கு முன் ஒருவர் எழுதியதையும், கண்டுபிடித்ததையும் நாம் இன்றைக்கு பயன்படுத்தி வருகிறோம். அதே போல நாமும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை குடும்பத்தினர் எனக்குள் விதைத்தனர். ஆகையால் கல்லூரியில் படிக்கும்போதே தேசிய மாணவர் படையில் இணைந்தேன். அதில் பெற்ற பயிற்சிகள் எனக்கு தன்னம்பிக்கையையும், உடல் மற்றும் மன வலிமையையும் கொடுத்தன.


சமூகத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ‘ஆராய்ச்சி’ உதவும் என்று நம்பினேன். முதுகலைப் படிப்பை கோவை அரசு கல்லூரியில் முடித்தேன். சலீம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தேன். பறவைகள் பற்றிய எனது ஆராய்ச்சி படிப்பையும் முடித்து, முனைவர் பட்டம் பெற்றேன்.

பறவைகள் உயிர்குறிப்பானாக செயல்படுகின்றன. அவை கடல், ஆறு, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும், அடர்ந்த மலைக்காடுகள், காடுகள், விவசாய நிலங்கள், கிராமங்கள், நகரங்கள் போன்ற நிலப்பகுதிகளிலும் வாழ்கின்றன. அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடுகின்றன.

பறவைகளில் தேன் உறிஞ்சி வாழ்பவை, தானிய உண்ணி, பழ உண்ணி, பூச்சி உண்ணி, மீன் உண்ணி, உயிருள்ள விலங்குகளை வேட்டையாடி உண்பவை, இறந்த உயிரினங்களை உண்பவை என பல வகைகள் உள்ளன. 

இவ்வாறு உணவுச் சங்கிலியின் அனைத்து நிலையிலும் உள்ள ஒரே உயிரினம் பறவைகள். ஆகவேதான் இவை சுற்றுச்சூழல் மாறுபாடுகளுக்கு உடனடியாக செயல்பட்டு, நமக்கு எச்சரிக்கை அளிக்கும். அதை கவனிக்கத் தவறியதன் விளைவாகத்தான், தற்போது நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.

சுற்றுச்சூழல் மாறுபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் அறிவியல் பூர்வமாக கண்டறியாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.



சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாட்டை, பறவைகள் போன்றவற்றில் கண்காணிக்கும் மத்திய அரசின் திட்டத்தில், நான் இளம் ஆராய்ச்சியாளராக 2017-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணியாற்றினேன்.

அப்போது, பறவைகள் இறப்பு பற்றி செய்தித்தாள்களில் படித்தோ, வனத்துறை மற்றும் இயற்கை ஆர்வலர்களின் தகவல்கள் மூலமாகவோ தெரிந்துகொண்டு, சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று, பறவைகள் இறப்பிற்கான காரணங்களை அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.  

பின்பு இறந்த பறவைகளின் உடல்களை, வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவரின் உதவியுடன், உடல் கூறு ஆய்வு மேற்கொண்டு, தேவைப்படும் உடல் உறுப்புகளை ஆய்வகத்திற்கு அனுப்பிய பின், அவற்றில் இருக்கும் பூச்சிக்கொல்லி, உலோகங்கள் போன்ற வேதிப்பொருட்களின் அளவை கண்டறிந்து ஆய்வறிக்கை சமர்ப்பிப்போம். 

இவ்வாறு, 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம், குஜராத்தில் உள்ள அகமதாபாத் சென்றோம். அகமதாபாத் ரெயில் நிலையத்தில் இருந்து, நாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு சபர்மதி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். அந்த ஆற்றங்கரையில் குழந்தைகளும், பெரியவர்களும், அந்த ஊர் பிரபலங்களும் கூட்டமாக பட்டம் விட்டு கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.

நாங்கள் அவர்களைக் கடந்து ‘பஞ்சரா போல்’ என்ற பகுதிக்கு சென்றோம். அங்கே ஒரு அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் மாஞ்சா நூலினால் காயப்பட்ட பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தனர். எலும்பு முறிவு, அதிக ரத்தப்போக்கு, கீழே விழுந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பு என பாதிக்கப்பட்ட பறவைகளை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த நிபுணர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். குழுவாக சென்ற நாங்களும் அவர்களுக்கு உதவினோம். மாஞ்சா நூலின் மூலம் காயம்பட்ட பறவைகளை மாணவர்கள் தொடர்ந்து கொண்டு வந்தபடியே இருந்தனர். எனக்கு அது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. 

இதே போல் பல இடங்களில் கொத்துக்கொத்தாக பறவைகளின் இறப்புக்கான காரணங்களை கண்டறிய தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஆய்வுக்கான பயணம், அதிகாரிகளை சந்தித்தல், களப்பணி போன்ற அனுபவங்கள் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. விடைகளைத் தேடி தொடர்ந்து ஓட வைக்கிறது. 

இறந்த பறவைகளின் வாழ்விடச் சிக்கல்களை விசாரிக்கும்பொழுது, மனிதர்களின் வாழ்க்கை முறையையும், சிக்கல்களையும் சேர்த்தே பதிவு செய்தோம். அதன் மூலம் பறவைகளின் இறப்பு மனிதர்களையும், பல் உயிரினச் சூழலையும் எவ்வாறு பாதிக்கிறது என்று உணர முடிந்தது.

நான் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு ஆய்வு மதிப்பீட்டாளராக 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறேன். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோவை மாவட்ட துணை செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறேன். கல்வி சமூக அறக்கட்டளைகளில் உறுப்பினராகவும் இருப்பதனால், கிராமங்களில் ஏழை மாணவர்களுக்கான சிக்கல்களை பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு அவர்களுக்கான கல்வி உரிமையை போராடி பெற்று தர முடிகிறது.

சுற்றுச்சூழலையும், இயற்கையையும் கவனிப்பது ஆராய்ச்சியாளர்களின் வேலை மட்டும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இயற்கையும், உயிரினங்களும் பாதிக்கப்படும்போது அலட்சியம் காட்டக்கூடாது. உலகில் சிறு உயிரினம் அழிந்தாலும், உயிர் சமநிலையில் ஏற்படும் மாற்றம், இறுதியில் மனிதனுக்கு ஆபத்தாக முடியும். எனவே கடந்த தலைமுறையிடம் இருந்து நமக்கு கிடைத்த இயற்கையை, அடுத்த தலைமுறைக்கும் விட்டுச்செல்வோம்” என்றார் கிருபா நந்தினி. 


Next Story