மாடலிங்கில் கலக்கும் கிராமத்து தேவதை - ஸ்டெபி கிட்டில்


மாடலிங்கில் கலக்கும் கிராமத்து தேவதை  - ஸ்டெபி கிட்டில்
x
தினத்தந்தி 17 Jan 2022 5:30 AM GMT (Updated: 15 Jan 2022 10:22 AM GMT)

கிராமத்தில் இருந்து வந்ததால், சாராசரி பெண்ணுக்கு இருக்கும் மேக்கப் நுணுக்கங்கள்கூட அப்போது எனக்கு தெரியாது. சரியாக மேக்கப் போடத் தெரியாது. மாடலிங், நடிப்பு போன்றவற்றில் பயிற்சி பெற்றது இல்லை. மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாகக் கற்றேன்.

‘மாடலிங் நடிகை என்றால், வானத்தில் இருந்து குதித்த தேவதையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கிராமத்துப் பெண்கூட மாடலிங் துறையில் அசத்த முடியும்’ என்று நிரூபித்திருக்கிறார் ஸ்டெபி கிட்டில்.

தான் ஒரு ‘கிராமத்து மனுஷி’ என்று, தன்னைப் பற்றி மிக எளிமையாக பேச ஆரம்பித்தார். ‘‘நான் நீலகிரி மாவட்டம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தேன். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து முடித்துவிட்டு சென்னை வந்தேன். சிறுவயதில் இருந்தே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆர்வம் இன்றும் குறைந்துவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை வந்து ஒரு உணவு விடுதியில் வேலை செய்தேன். எனக்கு மாடலிங் செய்ய வேண்டும்; சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

அப்போதைய என்னுடைய புகைப்படங்களை நீங்கள் பார்த்தால் நம்பமாட்டீர்கள். நான் மிகவும் குண்டாக இருந்தேன். இந்த உடலை வைத்துக்கொண்டு என்ன சாதிக்கப்போகிறாய் என்று என் சக தோழிகள் கிண்டல் செய்தார்கள்.

நான் அதை அவமானமாக நினைக்காமல் சவாலாக எடுத்துக் கொண்டேன். உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றால் உடல் எடையைக் குறைத்தேன்.

பின்பு மியான்மி தீவில், ஒரு ரெஸ்ட்டாரண்டில் வேலை கிடைத்தது. எனவே இங்கு வந்து வேலை செய்து வருகிறேன். அதே நேரம் என்னுடைய மாடலிங், நடிப்பு கனவு என்னை துரத்திக் கொண்டே இருந்தது.

ஆனால், என்னுடைய எதார்த்தம் வேறு மாதிரியாக இருந்தது. நீச்சல் தெரியாத ஒருவரை கிணற்றில் தள்ளிவிட்டால், உள்ளே இருந்தபடி நீச்சலும் கற்றுக்கொண்டு வெளியில் வரவேண்டும் அல்லவா? அந்த நிலையில்தான் இருந்தேன். கிராமத்தில் இருந்து வந்ததால், சாராசரி பெண்ணுக்கு இருக்கும் மேக்கப் நுணுக்கங்கள்கூட அப்போது எனக்கு தெரியாது. சரியாக மேக்கப் போடத் தெரியாது. மாடலிங், நடிப்பு போன்றவற்றில் பயிற்சி பெற்றது இல்லை. மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாகக் கற்றேன்.

அழகிப் போட்டிகளில் ஒருவர் நடந்து வரும்போது, அந்த நடை பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. ‘ராம்ப் வாக்’ நடப்பதற்கு நீண்ட நாள் பயிற்சி பெற வேண்டும்.  தினமும் ராம்ப் வாக் பயிற்சி செய்து பார்ப்பேன். விதவிதமாக நடந்து பழகுவேன். பூங்காவுக்குச் சென்றால் அங்கு ஒவ்வொருவரும் எப்படி நடக்கிறார்கள் என்பதைக் கவனிப்பேன். ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன்.



காலை வேளையில் ரொட்டி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுகிறேன். மதியம் வழக்கமான உணவு. இரவு அளவான சாப்பாடு. இதுதான் எனது உணவுமுறை. பிறகு மேக்கப் கற்றுக்கொண்டேன். என்னுடைய உடல்வாகுக்கு ஏற்ற ஆடைகளை நானே தேர்வு செய்து அணிந்தேன். எனது ரெஸ்ட்டாரண்டுக்கு வரும் ஒரு சில வாடிக்கையாளர்களின் உதவியின் மூலம் மெல்ல மெல்ல மாடலிங் துறையில் கால் பதித்தேன்.

நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராம்ப் வாக் செய்தேன். மியான்மி தீவில், உலகின் பல நாடுகளில் இருந்து, பலரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். என்னுடைய கடுமையான முயற்சி, பயிற்சியின் காரணமாக 2020-ம் ஆண்டு ‘மிஸ் ஹவாய்’ பட்டம் பெற்றேன்.

மியான்மி தீவில் உடல் ஊனமுற்றவர்களுக்கான பள்ளி உள்ளது. அங்கு பகுதி நேர ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். உடல் ஊனமுற்றவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுப்பேன். கலை சார்ந்த பல்வேறு வகுப்புகள் எடுப்பேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படையிலேயே மன அழுத்தம் இருக்கும். அதைப் போக்கும் வகையில் அவர்களுக்கும் அழகியல், ராம்ப் வாக் சம்பந்தமாக சொல்லித் தருவேன். எவ்வாறு உடை அணிய வேண்டும்? எப்படி மேக்கப் போட வேண்டும்? என்று சொல்லித்தருவேன். நான் சென்றாலே அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். என்னுடைய இலக்கு தமிழகத்திற்கு வர வேண்டும். தமிழ் நடிகையாக வேண்டும். தமிழ் திரைப்படம் இயக்க வேண்டும் என்பதுதான்’’ என்கிறார்.

Next Story