சுகன்யா உருவாக்கிய புதிய இசைக் கருவி


சுகன்யா உருவாக்கிய புதிய இசைக் கருவி
x
தினத்தந்தி 24 Jan 2022 11:00 AM IST (Updated: 22 Jan 2022 5:14 PM IST)
t-max-icont-min-icon

‘ஜ்யாகோஷா’வை மனித சக்தியால் மட்டுமே இயக்க முடியும். வயலினில் வாசிக்கும் அத்தனை இசையையும் இதிலும் வாசிக்க முடியும்.

“பழமை மாறாமல், புதுமையான சிந்தனையோடு உருவாக்குவதே சிறந்த இசை’’ என்கிறார் வயலின் இசைக் கலைஞர் சுகன்யா.

வயலின் கற்கத் தொடங்கி, அதில் புதுமையை ஏற்படுத்த வேண்டும் என்று ‘ஜ்யாகோஷா’ என்ற இசைக் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...

உங்களைப் பற்றி?
எனது பூர்வீகம் கேரளா மாநிலம் பாலக்காடு. அப்பா வீரமணி. அம்மா கீதா. இருவரும் இசை பயின்றது கிடையாது. எனக்கு சிறு வயது முதலே இசை கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது ஆசையை நான் சொல்லாமலே அம்மா கண்டறிந்து, வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்த்து விட்டார். ஆனால், தொண்டையில் சிறிது பிரச்சினை இருந்ததால், என்னால் தொடர்ந்து கற்க முடியாமல் போனது.

பின்பு ஏதாவது இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், என்ற ஆர்வத்தில் எனது 10-வது வயதில் வயலின் கற்க ஆரம்பித்தேன்.  இதனுடன், வழக்கமான பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரியில் இசையில்  முதுகலைப் பட்டமும் பெற்றேன். தற்போது, இதில் புதுமையைப் புகுத்துவதற்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறேன்.

‘ஜ்யாகோஷா’ பற்றிக் கூறுங்கள்...
நாம் பயன்படுத்தும் வயலின் பொதுவாக 24 அங்குலம் வரை இருக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு இசைக்கருவி உருவாக்க வேண்டும் என்று தோன்றியது. இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டபோதுதான், பழங்காலத்தில் இதே சாயலில் பல இசைக் கருவிகள் இசைக்கப்பட்டது தெரியவந்தது.  மேலும் ஆராய்ந்த போது ஐரோப்பா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வீதிகளில் நடக்கும் இசைக் கச்சேரிக்காக ‘பாஷட்’ என்ற இசைக்கருவியைப் பயன்படுத்துவது தெரிந்தது. ‘இதற்கு, சட்டைப் பாக்கெட்டில் அடங்கும் சிறிய வயலின் கருவி’ என்று பொருள். இதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த ‘ஜ்யாகோஷா’. இதில் ‘ஜ்யா’ என்றால் ‘வில் சரம்’ என்றும் ‘கோஷா’ என்றால் ‘ஒலி’ என்று பொருள் படும்.

வயலினுக்கும், ஜ்யாகோஷாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
தற்போது, வயலின் உட்பட பல இசைக்கருவிகள் மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுவிட்டன. ‘ஜ்யாகோஷா’வை மனித சக்தியால் மட்டுமே இயக்க முடியும். வயலினில் வாசிக்கும் அத்தனை இசையையும் இதிலும் வாசிக்க முடியும்.

இதில், வேறு எந்த வகையில் புதுமைப்படுத்த உள்ளீர்கள்?
‘ஜ்யாகோஷா’ தற்போது மேப்பிள் என்ற மர வகையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதில் சாரங்கி மற்றும் வயலின் இரண்டும் கலந்த இசை உருவாகிறது. இதையே வேறு மர வகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கும்போது, எந்த வகையான சத்தத்தை உருவாக்க முடியும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன்.

நீங்கள் பெற்ற விருது, அங்கீகாரம் பற்றி கூறுங்கள்?
யூத் எக்சலன்ஸ் விருது, சிறந்த வயலின் இசைக் கலைஞருக்கான விருது என பல விருதுகள் கிடைத்துள்ளன. ‘பீப்புள் போரம் ஆப் இந்தியா’ சார்பில், கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் ‘சிறந்த ஆராய்ச்சி படைப்புக்கான’ விருது ‘ஜ்யாகோஷா’வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். 

Next Story