தன்னம்பிக்கையை கற்பிக்கும் சித்ராதேவி


தன்னம்பிக்கையை கற்பிக்கும் சித்ராதேவி
x
தினத்தந்தி 31 Jan 2022 11:00 AM IST (Updated: 29 Jan 2022 5:21 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய காலக்கட்டத்தில், மன அழுத்தம் பல வகையிலும் ஏற்படுகிறது. இதற்கு பள்ளிகளில் நடக்கும் சில விஷயங்கள், தேர்வில் ஏற்படும் தோல்வி, பிடித்த உறவை இழக்கும்போது ஏற்படும் வலி என பல காரணங்கள் உள்ளன.

துரையைச் சேர்ந்த சித்ராதேவி, தனியார் கல்லூரியில் துணை பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். மேலும் எழுத்தாளர், தன்னார்வலர், அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமையாளராகத் திகழ்கிறார். எப்போதும் துறுதுறுப்பாக செயல்பட்டுவரும் இவர், அன்பு ததும்பப் பேசிபலரது வாழ்க்கையில் தன்னம்பிக்கையை விதைத்து வருகிறார். அவரது பேட்டி...

எனது அம்மா பஞ்சவர்ணம், அப்பா மலைச்சாமி, இருவருமே அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். பள்ளிப் படிப்பை மதுரையில் முடித்தேன். மேற்படிப்பை சென்னையில் முடித்தேன். படித்து முடித்ததும், கல்லூரியில் துனை பேராசிரியராகும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் வானொலியில் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறேன். ஆராய்ச்சிப் படிப்பையும் தொடர்ந்து வருகிறேன்.

உங்கள் சமூகப் பணிகள் பற்றி கூறுங்கள்?
கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றும்போது மாணவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பலர் திறமை இருந்தும், தாழ்வு மனப்பான்மையால் முடங்கிப் போய் இருப்பதைப் பார்த்தேன். மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாகப் பேசத் தொடங்கினேன். இதுதான், ஆரம்பம். அதன்பின், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள், நண்பர்கள் உதவியுடன் 2019-ம் ஆண்டு ஒரு அமைப்பை ஏற்படுத்தி,  மாணவர்கள், பெண்கள், பணியாளர்கள் என பலதரப்பினருக்கும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், தன்னம்பிக்கை வகுப்புகள் எடுத்து வருகிறோம்.

எதைப் பற்றிய தன்னம்பிக்கையை வளர்க்கிறீர்கள்?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் மன அழுத்தம் ஏற்படுகிறது. அதிலும், பல மாணவர்கள், தங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து, தற்கொலை எனும் தவறான முடிவைத் தேடுகின்றனர். அந்த எண்ணத்தை மாற்றுவதுதான், இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். தற்கொலை எண்ணத்தை முற்றிலும் ஒழிப்பதே இதன் இலக்கு. இதுதவிர, உறவுகளை எப்படிக் கையாள்வது? இலக்கை எட்ட எப்படி முயற்சிக்க வேண்டும்? என பல வகையிலும் தன்னம்பிக்கை வகுப்புகளை எடுக்கிறோம்.

தற்கொலை எண்ணம் மாணவர்களுக்கு வரக் காரணம்?
இன்றைய காலக்கட்டத்தில், மன அழுத்தம் பல வகையிலும் ஏற்படுகிறது. இதற்கு பள்ளிகளில் நடக்கும் சில விஷயங்கள், தேர்வில் ஏற்படும் தோல்வி, பிடித்த உறவை இழக்கும்போது ஏற்படும் வலி என பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தத்தை சரியான முறையில் பகிர்ந்துகொள்வதற்கு யாரும் இல்லாமல் தங்களுக்குள்ளேயே முடங்கிப் போவதால் உண்டாகும் அதீத மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தை உருவாக்குகிறது. இதைத்தான் நாங்கள் முடிந்தவரை களைகிறோம்.

இதற்கு எந்தெந்த உத்திகளைக் கையாள்கிறீர்கள்?
மாணவர்களிடம் ஆரம்பத்தில், தன்னம்பிக்கை பேச்சின் மூலம்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம். எங்களின் மொபைல் எண்ணை வழங்கி, தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறுகிறோம். சில மனப் பயிற்சிகளை மேற்கொள்ள வைப்போம். ஏற்கனவே, இது போன்ற பிரச்சினையிலிருந்து விடுபட்டவர்களிடம் பேசும் வாய்ப்பை ஏற்படுத்துவோம். இதுதான் எங்களின் உத்தி.

உங்களின் அடுத்த இலக்கு?
தற்கொலை என்ற எண்ணமே யாரிடமும் எழாத வகையில், அனைத்து தரப்பு மக்களிடமும் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும்  என்பதுதான் எங்களின் இலக்கு. 

Next Story