ஆங்கிலம் எளிமையானதே - தேவக்கன்னி
தாய்மொழியில் பேசும்போது தவறு ஏற்பட்டால் அதை நினைத்து கவலைப்படுவதில்லை. அதுவே, ஆங்கிலத்தில் தவறு செய்தால், பெரிய குற்றம் செய்ததாக நினைக்கின்றனர். எதையும் தைரியமாகப் பேசும்போது, அதில் இருக்கும் தவறுகளை எளிதில் சரி செய்யலாம் என்று உணர்ந்தால் பயம் ஏற்படாது.
பள்ளி, கல்லூரி, நேர்முகத்தேர்வு, பணிபுரியும் இடம் என பலவற்றிலும் ஆங்கில மொழியின் தேவை இருக்கிறது. அதே சமயம் கிராமம், நகரம் என்ற வித்தியாசம் இல்லாமல், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கும், எழுதுவதற்கும் சிரமப்படுபவர்கள் பலர் உள்ளனர். இத்தகைய தயக்கத்தையும், சிரமத்தையும் போக்கி, ஆங்கிலத்தின் மீது ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த தேவக்கன்னி. அவரது பேட்டி...
உங்களைப் பற்றி...
எனது அப்பா சுப்பிரமணியன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா மல்லிகாவதி குடும்பத்தலைவி. நான் பிறந்தது சிக்கிம் மாநிலத்தில். அங்கு இருந்தபோது, இயலாதவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகள் செய்வதை எனது பெற்றோர் வழக்கமாகக் கொண்டிருந்தனர். எனக்கும் அந்தப் பழக்கத்தை ஏற்படுத்தினர். எனவே, சிறு வயது முதலே என்னால் முடிந்த உதவியைப் பிறருக்கு செய்து வந்தேன்.
படிப்பு முடிந்தவுடன், பிறருக்கு பயன்படும் வகையிலான தொழிலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் காரணமாக, அறக்கட்டளை ஒன்றில் தன்னார்வலராகவும், டிரஸ்டியாகவும் பணியாற்றினேன். அதன் மூலம், கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பித்து வந்தேன். 26 ஆண்டுகளாக கற்பிக்கும் தொழிலை செய்து வருகிறேன்.
ஆங்கிலம் மீது ஆர்வம் வரக் காரணம் என்ன?
ஆங்கிலம் உலகம் அனைத்திற்கும் பொதுவான மொழி. இதன் மூலம் எளிதாக தகவல் தொடர்பை மேம்படுத்தலாம். இதை நான் உணர்ந்தபோதுதான், ஆங்கிலத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
ஆங்கிலம் கற்பிக்கும் நிறுவனத்தை தொடங்கியதன் காரணம் என்ன?
ஆரம்பத்தில், தன்னார்வலராக கல்லூரி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகள் எடுத்தேன். அதில் பல மாணவர்கள், வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வை ஆங்கிலத்தில் எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுவதாகத் தெரிவித்தனர். மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது உதித்தது. ஆகையால், ஆங்கிலத்தை ஆரம்ப நிலையிலேயே கற்றுத் தர வேண்டும் என முடிவு செய்து தனியாக நிறுவனத்தை உருவாக்கினேன்.
ஆங்கிலத்தைக் கற்க வேண்டியதன் அவசியம் என்ன?
தமிழ் வழியில் படிப்பவர்களுக்கும், ஆங்கிலம் கட்டாயம் தேவைப்படுகிறது. ஆங்கிலம் தெரியாத காரணத்தால், திறமை இருந்தும் தாழ்வு மனப்பான்மையால் தங்களை குறுகிய வட்டத்துக்குள் அடைத்துக்கொள்ளும் மாணவர்கள் பலர் இருக்கின்றனர். கல்லூரியில் ஆங்கிலம் பிரதானமாக இருக்கும்போது, பெரும்பாலான மாணவர்கள் திணறுகின்றனர். அதன்பிறகு வேலை, உயர்கல்வி, வெளிநாட்டுப் பயணம் என அனைத்தும் ஆங்கில மயமாக உள்ளது. இவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தைக் கண்டாலே பலரும் பயப்படுவதன் காரணம்?
ஆங்கிலத்தின் அடிப்படையைக் கற்றால், அதை எங்கும் எளிதாகப் பயன்படுத்தலாம். ஆனால், ஆங்கில வழியில் படிக்கும் பல மாணவர்களுக்கும் இந்த அடிப்படை சரியாகத் தெரிவதில்லை. இதன் விளைவாக, மற்றவர்களுடன் உரையாடும்போது, தவறாகப் பேசி விடுவோமோ? பிறர் நம்மைக் கேலி செய்து விடுவார்களோ? என்று பயப்படுகின்றனர். இதன் காரணமாகவே, ஆங்கிலத்தைப் புறக்கணித்து, பிறருடன் பரிமாறும் தகவலையும் தாய் மொழியிலேயே கூற விரும்புகின்றனர்.
தாய்மொழியில் பேசும்போது தவறு ஏற்பட்டால் அதை நினைத்து கவலைப்படுவதில்லை. அதுவே, ஆங்கிலத்தில் தவறு செய்தால், பெரிய குற்றம் செய்ததாக நினைக்கின்றனர். எதையும் தைரியமாகப் பேசும்போது, அதில் இருக்கும் தவறுகளை எளிதில் சரி செய்யலாம் என்று உணர்ந்தால் பயம் ஏற்படாது.
எளிமையாக ஆங்கிலம் கற்க வழி உண்டா?
ஆங்கிலம் கற்க அடிப்படையான விஷயம், வார்த்தைகளுக்கான அர்த்தத்தை உணர்ந்து பயன்படுத்துவதுதான். சிறு வயதில் இருந்தே சில அடிப்படைப் பயிற்சிகளை செய்வதன் மூலம், ஆங்கிலத்தை எளிதாகக் கற்கலாம். ஆங்கில உச்சரிப்பைத் தெரிந்து கொள்வதற்கு முதலில் டி.வி, சமூக வலைத்தளங்களில் வரும் ஆங்கிலச் செய்திகளைக் கேட்க வேண்டும்.
இதில், ஒவ்வொரு வார்த்தையும் எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து, தினமும் அரை மணி நேரம் அதைப் பயிற்சி செய்யலாம். தவறாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களிடமும், சக நண்பர்களிடமும் சிறு, சிறு ஆங்கில வாக்கியத்தைப் பேச முயற்சிக்கலாம். பல நல்ல ஆங்கிலத் திரைப்படங்கள் உள்ளன. அவற்றில் உச்சரிப்பிற்கேற்ப, ஆங்கில உரையாடல் வருகிறது. அதைப் பார்த்துப் பயிற்சி செய்யலாம்.
இவ்வாறு பயிற்சி செய்து ஆங்கிலத்தை எளிமையாகக் கற்கலாம். இதைத்தான் மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறோம்.
ஆங்கிலத்தை எளிமையாக்குவதற்கு நீங்கள் கையாளும் முறை என்ன?
மாணவர்களுக்கு ஆங்கிலத்தைப் பாடமாகக் கற்பிப்பதில்லை. வார்த்தைகள், அதற்கான அர்த்தங்கள், எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற உத்திகளைக் கற்பிக்கிறோம். அவர்களுக்குப் பயிற்சித் தேர்வு நடத்துகிறோம். அதில், கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் தாங்களாகவே, முயற்சி செய்து, சரியான வாக்கியத்தை அமைத்து, அதைச் சொல்லிக் காட்டவும் சொல்கிறோம். தவறு இருந்தால், அதை உடனடியாகத் திருத்துவதற்கு பயிற்சி அளிக்கிறோம். இதனால், மாணவர்களிடம் தன்னம்பிக்கை பிறக்கிறது.
உங்களிடம் ஆங்கிலம் கற்ற மாணவர்கள் எவ்வாறு பயனடைந்துள்ளனர்?
முதல் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்பிப்பதால், இதில் படிக்கும் மாணவர்கள் பலரும் உயர் வகுப்பில் ஆங்கில வாயிலாகப் படிக்கும் பாடத்தை நன்றாகப் புரிந்து படிக்க முடிகிறது. இதன் மூலம், அதிக மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், கல்லூரி, வேலையில் ஆய்வுக் கட்டுரைகளை எளிதில் சமர்ப்பிக்கவும், சந்தேகங்களுக்கு ஆங்கிலத்திலேயே எளிதாக விளக்கம் அளிக்கவும் முடிகிறது என்று தெரிவித்துள்ளனர். பல மாணவர்கள் ஆங்கிலத்தில் கதை, கவிதை போன்றவை இயற்றும் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளனர்; அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர்.
பெண்களுக்கு இது எந்த வகையில் பயனளிக்கும்?
பெண்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது மற்றும் எழுதுவதன் மூலம், எளிதாக மற்றவர்களுடனான தகவல் தொடர்பை ஏற்படுத்தி, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும்.
Related Tags :
Next Story