நண்பர்களின் குணாதிசயங்களை எவ்வாறு கண்டறியலாம்?


நண்பர்களின் குணாதிசயங்களை எவ்வாறு கண்டறியலாம்?
x
தினத்தந்தி 21 Feb 2022 11:00 AM IST (Updated: 19 Feb 2022 5:30 PM IST)
t-max-icont-min-icon

நம்முடைய உணர்ச்சிகள் சில நேரங்களில் வெவ்வேறு காரணங்களால் வேறு விதமாக பிரதிபலித்துவிடும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்து, யாரையும் எளிதாக நம்ப வேண்டாம்.

லரும் தாங்கள் பழகும் அனைவரையும் எளிதில் நம்பி, பின்பு அவர்களால் ஏமாற்றம் அடைந்து மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இந்தத் தவறு மீண்டும் நடக்கக்கூடாது என்று நினைத்து, நமக்கு தெரியாமலேயே மீண்டும் மீண்டும் அதையே செய்துகொண்டிருப்போம். நீங்கள் பழகும் நண்பர்கள் எப்படிப்பட்டவர் என்பதையும், அவருடைய குணாதிசங்களையும் சில உடல்மொழி மற்றும் உளவியல் அணுகுமுறைகள் மூலம் கண்டறியலாம்.

முதலில் நாம் ஒருவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் அல்லது அவர் குணநலன்களை தெரிந்துகொள்ள வேண்டுமெனில் பொறுமையாக இருப்பது முக்கியம். அவரின் ஒவ்வொரு சிறு நடவடிக்கைகளையும் விமர்சிக்காமலும், ஆதரிக்காமலும் சில காலங்களுக்கு கவனிப்பது நல்லது.

உங்களுடன் பழகுபவர்களின் சிறுசிறு நடவடிக்கைகள் மற்றும் இயல்பான பேச்சை எளிதில் நம்ப வேண்டாம். தெரியாத நபரிடம் உங்களைப் பற்றி முதலில் அதிகமாக பகிர்ந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.

உங்களிடம் பழகுபவர்கள் குறித்த தகவல்களை அவரிடமே கேட்டு தெரிந்துகொள்வது உண்மையான கருத்தை பெற உதவும். அவர் நம்மிடம் நேரடியாக பேசும்போது அவரின் பாவனை, பேச்சுவழக்கு, நடந்துகொள்ளும் முறை மற்றும் செயல்களை வைத்து அவரின் உண்மைத்தன்மையை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

மனிதர்களின் நடத்தை குறித்து உளவியல் துறையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் உடல் ரீதியாகவும், சமூக நடைமுறை ரீதியாகவும் இருக்கின்றன. சில ஆய்வுகள் பாவனை, பிரதிபலிப்பு, வினை மாற்றம் மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. எனினும், இவற்றை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதே இந்த ஆய்வின் இறுதிக் கூற்றாக இருக்கிறது.

நம்முடைய உணர்ச்சிகள் சில நேரங்களில் வெவ்வேறு காரணங்களால் வேறு விதமாக பிரதிபலித்துவிடும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்து, யாரையும் எளிதாக நம்ப வேண்டாம்.

உங்கள் நண்பர் வளர்ந்த சூழல், சிந்தனைத் திறன், நடந்துகொள்ளும் விதம், உங்களிடமும் மற்றவர்களிடமும் பழகும் முறையில் உள்ள மாற்றம் இவற்றை வைத்தே அவரின் குணாதிசயங்களை நம்மால் 70 சதவிகிதம் நிர்ணயிக்க முடியும். எனினும், அவரின் நிகழ்கால நடவடிக்கையையோ, கடந்த கால நடவடிக்கையையோ தனியாக பிரித்து பார்த்து மட்டும் அவரை புரிந்துகொள்ள முடியாது. குணநலனை கணிக்க முடியாது. காலத்தின் போக்கில் ஒரு நொடியில் தன் மொத்த குணநலன்களை மாற்றிக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆகையால், ஏற்கனவே நடந்தது, இப்போது நடந்துகொண்டிருப்பது என இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்தது.

மேலும், உங்களுடன் பழகுபவர் ஆண், பெண் யாராக இருப்பினும் நீங்கள் கனிவாக நடந்துகொள்ளும்போது, பெரும்பாலும் அவர்கள் உங்களிடம் உண்மையாகவே நடந்துகொள்வார்கள். எனவே, அன்பு ஒன்றே உண்மையின் வெளிப்பாடு என்பதை அறிந்து நடந்துகொள்வோம். 

Next Story