மன உறுதியால் வறுமையை வென்ற பத்மினி


மன உறுதியால் வறுமையை வென்ற பத்மினி
x
தினத்தந்தி 7 March 2022 5:30 AM GMT (Updated: 5 March 2022 9:59 AM GMT)

அறிவுரை கூறுபவர் உங்களுக்குப் பிடித்த நபராகவோ அல்லது உங்கள் வழிகாட்டியாகவோ அல்லது ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியவராகவோ கூட இருக்கலாம். ஆனால் முடிவெடுக்கும் உரிமை உங்களுக்குரியது.

சென்னையைச் சேர்ந்தவர் பத்மினி ஜானகி. பெண்களுக்கான மகப்பேறு வழிகாட்டல்களை அளித்து வருகிறார். இதற்காக நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், பெண்களுக்கான சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு தமிழக முதல்வரிடம் இருந்து விருது பெற்றுள்ளது. தனது வெற்றிப் பயணம் குறித்து அவர் கூறியதாவது...

குடும்பத்தில் உள்ள அனைவரின் நலனையும் கருத்தில்கொண்டு செயலாற்றும் பெண்கள், அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. முக்கியமாக மகப்பேறு காலத்தில் உடல் சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகளை பெண்கள் சந்திக்கிறார்கள். அதனை குறைக்கும் விதமாக, தொழில்நுட்பம் மூலம் பெண்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழி வகை செய்வதுதான் எனது நோக்கம். அதை மையமாகக் கொண்டே 2021-ம் ஆண்டு எனது தொழிலைத் தொடங்கினேன். செல்போன் செயலி மூலம் பெண்களுக்கு பயனுள்ள தகவல்களை அளித்து வருகிறோம்.

இதற்கு உங்கள் குடும்பத்தின் ஆதரவு எப்படி இருந்தது?
திருமணத்திற்கு பின்னர்தான், எனது தொழிலைத் தொடங்கினேன். எனது கொள்கையில் மாறாமல், என்ன செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனது குடும்பமும் எனக்கு உறுதுணையாக இருந்தது.

நீங்கள் வாழ்வில் உயர்ந்ததற்கு காரணமாக இருந்த விஷயம் எது?
வறுமையில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி படித்தும், பார்த்தும் இருக்கிறேன். வாழ்வின் அடுத்த நிலையை எட்டுவதற்கு என்னை ஊக்கப்படுத்தியவர்களாக அவர்களை கருதுகிறேன். எனது பன்னிரெண்டாம் வயதில், அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. 

அப்பொழுது “நாம் கடைசியாக சென்று அடைகின்ற இலக்கைக்  காட்டிலும், அந்த இலக்கை அடையும் வழி முக்கியமானது. வெற்றிக்கான இலக்கை அடைவதற்கு நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்ற அவரது கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. இன்று வரையிலும் அதனை பின்பற்றி வருகிறேன்.

உங்கள் வெற்றிக்கான காரணமாக எதைச் சொல்வீர்கள்...
வெற்றிக்கான காரணமாக எனது வறுமையைச் சொல்லுவேன். வாழ்வின் ஒவ்வொரு நிலைகளை கடக்கும்போதும், வறுமை என்னை வாட்டியது. எனக்கு பிடித்த பொருட்களை வாங்க முடியாமல், எப்பொழுதும் விலை குறைந்த பொருட்களைப் பயன்படுத்தும் போது, எனது வறுமையை வெறுக்க ஆரம்பித்தேன்.

‘பணம் என்பது வாழ்க்கைக்கு முக்கியமல்ல’ என்று பலர் கூறக் கேட்டு இருப்பீர்கள். ‘பணம் எல்லா சந்தோஷத்தையும் உங்களுக்கு தராது’  என்று கூறுவார்கள். ஆனால் உற்றுக் கவனித்தால் தெரியும், அதைக் கூறுபவர்கள் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். 

வறுமையின் பிடியில் இருப்பவர்கள் இந்த வார்த்தையை கூறுவதில்லை. எனவே நான் “பணம் முக்கியமானது அல்ல” என்று கூறும் அளவிற்கு, அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள விரும்பினேன். இவ்வாறு எனது வறுமையே என்னை உயர்த்தியது.



பெண்கள் தொழில் தொடங்கும்போது ஏற்க வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் என்ன?
தொழில் தொடங்கும்போது பல்வேறு கருத்துகள் நம் முன் வைக்கப்படும். அவை அனைத்தையுமே கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் எது நமக்குத் தேவை? எது தேவை இல்லாதது? என்பதை நமது பகுத்தறிவின் மூலம் மட்டுமே, முடிவு செய்யவேண்டும். நான் எப்பொழுதுமே மற்றவரின் கருத்தைக் கூர்ந்து கவனிப்பேன். ஆனால், அதில் எந்த அறிவுரை என்னை உயர்த்துமோ அதை மட்டுமே பின்பற்றுவேன். 

ஏனென்றால், நாம் வாழ்வில் உயர நினைக்கும்போது, விளையாட்டு மைதானத்தில் சத்தம் எழுப்புவது போல சிலர் உங்களை ஆதரித்துக் கூச்சலிடுவார்கள், சிலர் எதிர்த்துக் கூச்சலிடுவார்கள். ஆனால் களத்தில் நிற்கும் உங்களுக்குத் தான் தெரியும்,  நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது. 

எனவே அதனை மட்டுமே மனதில் வைத்துச் செயலாற்றினால் போதுமானது. அறிவுரை கூறுபவர் உங்களுக்குப் பிடித்த நபராகவோ அல்லது உங்கள் வழிகாட்டியாகவோ அல்லது ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியவராகவோ கூட இருக்கலாம். ஆனால் முடிவெடுக்கும் உரிமை உங்களுக்குரியது. எதை தவிர்க்க வேண்டும், எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

எந்த பழக்கவழக்கங்கள், நம்மை ஒரு சாதனையாளராக மாற்றும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இந்த உலகம், எப்பொழுதும் ஏதாவது ஒன்றை நம் மீது திணித்துக்கொண்டே இருக்கும். உதாரணமாக “நீ ஒரு பெண். உன்னால் இது முடியாது, அதனால் இதை விட்டுவிடு” என்று பயமுறுத்தும் அல்லது குடும்பச் சூழ்நிலையைக் காரணம் காட்டி வெற்றியை எட்டாத உயரத்தில் வைக்கும். ஆனால், உங்கள் முடிவில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் உங்களுக்கு தேவையானவற்றை மட்டும் கருத்தில்கொண்டு, மற்றவற்றை புறந்தள்ளி உங்களுக்கான பாதையில் முன்னேற வேண்டும். கண்டிப்பாக இந்தப் பழக்கம் நம்மை சாதனையாளராக மாற்றும்.

உங்களின் லட்சியம் என்ன?
இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களும் ஆரோக்கிய வாழ்வை பெற வேண்டும் என்பது எனது லட்சியம். மேலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, என்னால் முடிந்த கல்வி உதவி அளிக்க வேண்டும் எனும் நோக்கில், எனது நிறுவனத்தில் பெண்களுக்கு, குறிப்பாக முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுண்டு. பெண்களுக்கு உதவுவதால் சமுதாயம் வளர்ச்சி அடையும் என்பது என் கருத்து.

பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ள பெண்களுக்கும், சாதிக்க நினைக்கும் பெண்களுக்கும், குடும்பத்திலுள்ள மற்ற பெண்களுக்கும் உதவியாக இருக்க வேண்டும். நாமே அவர்களைத் தடுக்கக் கூடாது. தொழில் தொடங்க நினைக்கும் பெண்கள்,  நம்பிக்கையுடன் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். பெண்களுக்காக அரசு அளிக்கும் உதவிகளை பயன்படுத்தி முன்னேறுங்கள். 

Next Story