தன்னலமின்றி செய்வதே சமூகசேவை - பூங்கோதை
தவறான வழியில் செல்லும் ஒருவரின் வாழ்வை மாற்ற முயற்சித்து அவரை அணுகும்பொழுது, நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்க மாட்டார். சிலர் நம்மை கடுமையாக பேசுவார்கள், உதாசீனப்படுத்துவார்கள். அதையெல்லாம் தாண்டி, அவரது நிலையைப் புரிந்துகொண்டு நல்வழிப்படுத்த வேண்டும்.
சென்னை சூளைமேட்டில் வசிப்பவர் பூங்கோதை. 46 வயதான இவர், தனது வாழ்வின் பெரும் பகுதியை சமூக சேவைக்காக அர்ப்பணித்தவர். 30 வருடங்களுக்கும் மேலாக சமூக ஆர்வலராக பலரது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.
1992-ம் ஆண்டு முதன் முதலில் ‘சாலையோர சிறார்’ எனப்படும், வழிதவறிய பெற்றோர்களிடம் இருந்து பிரிந்து வந்த குழந்தைகளைத் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கான கல்வி, வாழ்வியல் வசதிகளை ஏற்படுத்தினார். இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து 2000-வது ஆண்டு சென்னையில் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களில் குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான 40-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு, அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றியிருக்கிறார்.
2004-ம் ஆண்டு ‘தாய்’ என்ற அரசு திட்டத்தின் மூலம் திருநங்கைகளின் மறுவாழ்வுக்காக பணியாற்றினார். அவர்களது உடல், உள்ளம், சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, கல்வி, தொழில் உதவி, மருத்துவ உதவி ஆகியவற்றை செய்து கொடுத்து உதவினார்.
2015-ம் ஆண்டு முதல் இன்று வரை தொண்டு நிறுவனம் மூலமாக, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் 35 குழந்தைகளை பராமரித்து வருகிறார். தமிழக அரசு சார்பாகவும், பல்வேறு அமைப்புகள் சார்பாகவும், சிறந்த சமூக சேவகி விருது 2018, அமலாபோஸ் விருது 2020, சிறந்த சமூக சேவை விருது 2021, கவிப்பாவை விருது 2021, அமலாபோஸ் விருது 2021, மனித நேய மாண்பு 2022 போன்ற பட்டங்களும், விருதுகளும் பெற்றிருக்கிறார்.
அவர் தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...
‘‘நான் ஏழாம் வகுப்பு படித்தபோது என்னை ‘நூரி’ என்ற திருநங்கை அவரது மகளாக தத்தெடுத்துக்கொண்டார். அவரது நினைவாகவே தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு ஏற் பட்ட சென்னை வெள்ளத்திற்கு பிறகு, இந்த முகாமிற்கு வந்து எனது சேவையை முழுநேரமாக மாற்றிக்கொண்டேன். இந்த முகாமில் 35 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு இளம் பெண்களுக்கு திருமண வாழ்க்கை அமைத்து கொடுப்பது போன்றவற்றை செய்து வருகிறோம். இந்த முகாமில் உள்ள குழந்தைகளுக்கான செலவுகள் அனைத்தையும் தன்னார்வலர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்’’.
இதில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
‘‘தவறான வழியில் செல்லும் ஒருவரின் வாழ்வை மாற்ற முயற்சித்து அவரை அணுகும்பொழுது, நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்க மாட்டார். சிலர் நம்மை கடுமையாக பேசுவார்கள், உதாசீனப்படுத்துவார்கள். அதையெல்லாம் தாண்டி, அவரது நிலையைப் புரிந்துகொண்டு நல்வழிப்படுத்த வேண்டும்.அவர்களின் பாதையை மாற்றி அமைக்க வேண்டும்.சமூக சேவை செய்யும்பொழுது மற்றவர்களின் நிலையில் இருந்து யோசித்து செயல்பட வேண்டும்’’.
உங்களுக்கு கிடைத்த ஊதியமாக எதை நினைக்கிறீர்கள்?
‘‘ஒருவரின் வாழ்வில் என்னால் ஏற்பட்ட நல்ல மாற்றம் தான் எனக்கான ஊதியம். பல நாள் கழித்து ஒருவரை பார்த்தபொழுது ‘‘அம்மா, உங்களாலதான் இன்றைக்கு நான் நல்ல நிலைமையில் இருக்கேன்” என்றார். திருநங்கை ஒருவர் ‘‘அம்மா என் குடும்பத்துல என்னை ஏத்துக்கிட்டாங்க. நான் நிம்மதியா இருக்கேன்’’ எனக் கூறினார்.
குழந்தைகளாய் வந்த 17 பேர், எனது முயற்சியால் நல்ல முறையில் வளர்ந்து பட்டதாரிகளாக மாறி நின்றனர். இவற்றையெல்லாம் காணும்போது, நான் போராடிய நாட்களெல்லாம் மறைந்து நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். அதனையே எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஊதியமாக கருதுகிறேன்.
பலரது வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்த்த நீங்கள், மற்றவர்களுக்கு சொல்ல நினைப்பது என்ன?
‘‘தைரியம் தான் முதல் தாரக மந்திரம். சுயநலமற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன், அடுத்தவரை சிரமப்படுத்தாமல், நமக்கான வாழ்வை நமக்கு பிடித்தது போல் வாழ வேண்டும்.
வாழ்வில் உயர்வதற்கு ‘கல்வி’ எனும் அச்சாணி போதுமானது. நல்ல முறையில் வாழ்ந்து, நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் வாழ வைப்பதே சிறந்த வாழ்வாகும்’’.
35 குழந்தைகளை, தாயாக இருந்து கவனிக்கும் பூங்கோதை நமக்குள் வியப்பை ஏற்படுத்தினார். சிரித்தபடி, தன்னை கடந்து செல்பவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் அவரது செயல் பெருமித உணர்வை ஏற்படுத்துகிறது.
Related Tags :
Next Story