சேலை அணிவதில் புதுமை செய்யும் நடாஷா தாசன்


சேலை அணிவதில் புதுமை செய்யும் நடாஷா தாசன்
x
தினத்தந்தி 7 March 2022 11:00 AM IST (Updated: 5 March 2022 5:06 PM IST)
t-max-icont-min-icon

12 வயதில் இருந்தே எனக்கு சேலையின் மீது ஆர்வம் இருந்தது. சேலையை உடையாக மட்டுமில்லாமல் கலையாகவும் பார்க்கிறேன்.

னடா நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழரான நடாஷா தாசன், தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். சேலை அணியும் விதத்தில், பல புதுமைகளைப் புகுத்தி, விதவிதமாகக் கட்டும் முறைகளை உருவாக்கி இருக்கிறார். அதை இணையம் மூலம் கற்பித்து, பயிற்சியும் அளித்து வருகிறார். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
சேலையை, சேலையாக மட்டும் பயன்படுத்தாமல், பல்வேறு உடைகளாக உருவாக்கவும், உருமாற்றவும் செய்கிறேன். அதற்கேற்றவாறு நானே அதை விதவிதமாக வடிவமைக்கிறேன். பொழுதுபோக்காக ஆரம்பித்த இந்த விஷயம், வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெற்று, இப்போது வெற்றிகரமான தொழிலாக வளர்ந்திருக்கிறது.

சேலையின் மீதான உங்கள் காதல் எப்போது உருவானது?
12 வயதில் இருந்தே எனக்கு சேலையின் மீது ஆர்வம் இருந்தது. சேலையை உடையாக மட்டுமில்லாமல் கலையாகவும் பார்க்கிறேன்.  அந்த ஆர்வம் காரணமாக, நான் பூப்படைந்தபோது, தாவணி அணிய மறுத்து, சேலையை மட்டுமே அணிந்து அழகு பார்த்தேன். அதன் பிறகு சேலையின் மீது கொண்ட ஆர்வம், காதலாக மாறியது. இருபது வயதிற்குப் பின்பு, சேலையை வெவ்வேறு பரிமாணங்களில் அணிந்து பார்க்கத் தொடங்கினேன். சேலைக்குப் பின்னால் கலாசாரம் சார்ந்த உணர்வு இருப்பதை என்னால் முழுவதுமாக உணர முடிந்தது.

‘சேலையை இப்படித்தான் அணிய வேண்டும்’ என்ற இலக்கணத்தை உடைத்து, விதவிதமாகக் கட்டத் தொடங்கினேன். கடற்கன்னி, தேவகன்னியர்கள், பழங்கால நடிகைகள், நாடகக் கலைஞர்கள் போன்றவர்களின் உடைகள் போன்று சேலையிலேயே வடிவமைக்க ஆரம்பித்தேன். அதைக் கூர்ந்து கவனித்தால்,  ஒவ்வொரு வடிவமைப்புக்குப் பின்னும் ஒரு கதை இருப்பதை உணர முடியும்.

உங்கள் பெற்றோர் இதற்கு ஆதரவு அளித்தார்களா?
என்னுடைய ஆர்வத்தை முதலில் அவர்கள் பெரிதாக கவனிக்கவில்லை. இருந்தபோதும், எனக்குப் பிடித்ததைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தேன். வீட்டில் இருக்கும்போதுகூட பழங்கால முறையில், சேலையை அணிந்திருப்பேன். ஒருநாள், என் தந்தை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபொழுது, “நடாஷா! சீக்கிரம் இங்கே வா” என அழைத்தார்.  நான் சென்று பார்த்தபொழுது, தொலைக்காட்சியில், மகாபாரத நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. அதைக் காட்டி அவர், “அங்கே பார்! மகாபாரதத்தில் தோன்றும் பெண்கள் கதாபாத்திரங்கள் அனைவரும் நீ அணிவது போல உடை அணிந்திருக்கின்றனர்” என மகிழ்ச்சியுடன் கூறினார். அந்த நொடியில்தான் அப்பாவிற்கு, என் சேலைக்கலையின் மீது ஆர்வமும், நம்பிக்கையும் வந்தது. அதைத்தொடர்ந்து வீட்டில் அனைவரும் அதை ரசிக்கத் தொடங்கினார்கள்.

அதிக நேரம் எடுத்துக் கொண்ட சேலை வடிவமைப்பு எது?
சினிமாவில், கடல்கன்னி கதாபாத்திரத்துக்கு தனியாக உடை தயாரிப்பார்கள். ஆனால், நான் சேலையிலேயே கடல்கன்னி உடையை வடிவமைக்க வேண்டும் என விரும்பினேன். இதன்மூலம் அதற்கான பிரத்யேக உடையை விலை கொடுத்து வாங்கி அணியாமல், தங்களிடம் இருக்கும் சேலையையே அவ்வாறு அணிந்து  அழகுபார்க்க முடியும். அதைக் கச்சிதமாக வடிவமைத்து முடிக்க எனக்கு முழுதாக 6 மாதங்கள் ஆனது. அதை அணிபவர்கள் எளிய முறையில் அணியும் வகையில் வடிவமைத்தேன். அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதற்கு, இதுவும் ஒரு காரணம். எனினும், நான் இதை விரும்பியும், ரசித்தும் செய்வதால், நேரம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.



இந்தக் கலையில் நீங்கள் செய்ய விரும்புவது என்ன?
இப்போதைய இளம் பெண்களுக்கு, நம்முடைய பழங்கால உடைகளின் அழகியல் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. எனவே, இணையதளத்தை, அதற்கான கருவியாக எடுத்துக் கொண்டேன். அதன் மூலம், பண்டைய காலத்தில் ரவிக்கை பயன்பாட்டிற்கு வரும் முன்பு விதவிதமாக சேலை கட்டப்பட்டிருப்பதை ஆராய்ச்சி செய்து, அதை இந்தத் தலைமுறையினருக்கு ‘டிரேப் தெரபி’ என்ற சமூக வலைதள பக்கத்தில், ஆன்லைன் வகுப்புகளின் மூலம் கற்பித்து வருகிறேன். 

அனைவரும் ஆர்வத்தோடு கற்றுவருவதோடு, அதை முயற்சி செய்து, அந்தந்த முறைப்படி கட்டி புகைப்படம் எடுத்து அனுப்பும்போது, மனதில் பெரும் திருப்தி ஏற்படுகிறது. தமிழ் கலாசாரத்திற்கு என்னுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பாகவே, இதைப் பார்க்கிறேன். மேலும் இயற்கையான, கைத்தறி, கைவேலைப்பாடு செய்யப்பட்ட சேலைகள், இயற்கைச் சாயங்கள் கொண்ட சேலைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு கெடுதல் செய்யாத முறையில் உருவாக்கப்பட்ட சேலைகளை விற்பனை செய்யவிருக்கிறேன். வருங்கால சந்ததியினருக்கு ஏற்றவாறு, சேலையில் பழங்கால உடை முறைகளை வடிவமைத்து, அதை உலகறியச் செய்வதில், பெருமை கொள்கிறேன். 

சேலைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவும் டிப்ஸ்

சேலை அணியும்போது உங்கள் தோற்றத்தை மெருகூட்டுவதில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் துணி வகை முக்கிய பங்கு வகிக்கிறது. காட்டன் புடவைகள் கனமான தோற்றத்தைக் கொடுப்பதால் அதிக எடையுள்ள பெண்களுக்கு இவை பொருந்தாது.
பெரிய வடிவங்கள் அச்சிடப்பட்ட சேலைகளை அணியும்போது, அவை உங்களை பருமனாகக் காட்டக்கூடும். உயரம் குறைவான பெண்கள் பெரிய பூக்கள் அச்சிடப்பட்ட சேலைகளை அணியும்போது மேலும் குட்டையாகத் தெரிவார்கள்.
சிறு சிறு பூக்கள் மற்றும் இலைகள் அச்சிடப்பட்ட சேலைகளை அனைத்து பெண்களும் அணியலாம்.
உயரம் குறைவான பெண்கள் பார்டர் இல்லாத சேலைகளை அணியலாம். உயரமான பெண்களுக்கு பெரிய பார்டர் கொண்ட சேலைகள் பொருத்தமாக இருக்கும்.
அதிக எடை கொண்ட பெண்களுக்கு அடர் நிறங்கள் சிறந்தது. இவர்கள் சேலையை தவிர மற்ற ஆடைகளையும் அடர் நிறத்திலேயே அணியலாம்.
ஒல்லியான உருவம் கொண்ட பெண்களுக்கு வேலைப்பாடுகள் நிறைந்த சேலைகள் பொருத்தமாக இருக்கும். தடிமனாக இருக்கும் பெண்களுக்கு குறைந்த வேலைப்பாடு கொண்ட சேலைகள் ஏற்றவை. 

Next Story