உடல் தோற்றம் தரும் தாழ்வு மனப்பான்மையை விரட்டியடிக்கலாம்


உடல் தோற்றம் தரும் தாழ்வு மனப்பான்மையை விரட்டியடிக்கலாம்
x
தினத்தந்தி 14 March 2022 11:00 AM IST (Updated: 12 March 2022 4:17 PM IST)
t-max-icont-min-icon

உங்களுடைய மதிப்பு உங்களின் அழகில் இல்லை, உங்கள் திறமையில்தான் உள்ளது. மற்றவர்களை விட நீங்கள் தனித்துவமாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள் என்பதை ஆழமாக நம்புங்கள்.

ம்மில் பலர் நமது நிறைகளை ரசிக்காமல், குறைகளை மட்டுமே கவனிக்கிறோம். அதை மற்றவர்களுடன் ஒப்பிட்டு ‘அவர்களைப்போல தோற்றம், அழகு, உடல் அமைப்பு இல்லையே’ என யோசித்து மன அழுத்தம் கொள்கிறோம். இதனால் நம்மை அறியாமலே நமக்குள் தாழ்வு மனப்பான்மை உருவாகிறது.

தாழ்வு மனப்பான்மையை போக்க என்ன செய்யலாம்?

உங்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்:
பல நேரங்களில் பிறர் நம்மை நேசிக்கவில்லையே என்று கவலை கொள்கிறோம். பிறர் உங்களை நேசிக்க வேண்டுமெனில், முதலில் உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும். மாசு மருவற்ற முகம், கட்டுக்கோப்பான உடலமைப்பு, அளவான உயரம் மட்டும் தான் அழகு என்று எண்ணுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை விரும்புங்கள்.

உங்களிடம் நேர்மறையாக பேசுங்கள்:
‘எனக்கு அழகு இல்லை, உடல் எடை அதிகமாக உள்ளது, முகத்தில் பருக்கள் உள்ளது, உயரம் குறைவாக இருக்கிறேன்’ என எதிர்மறையாக பேசுவதை நிறுத்துங்கள். காலையில் எழுந்தவுடன், கண்ணாடி முன்பு நின்று ‘நான் அழகாக இருக்கிறேன், என் தோற்றம் அழகாக உள்ளது’ என நேர்மறையாக பேசுங்கள். முகத்தில் புன்னகையுடன் சில நிமிடங்கள் கண்ணாடியைப் பார்த்து எந்தவித எதிர்மறை எண்ணங்களும் இல்லாமல், உங்களை நீங்களே பாராட்டுங்கள், ரசியுங்கள். உங்கள் காதலரோடு, கணவரோடு எப்படி அன்பாக பேசுவீர்களோ, அதேபோல் உங்களிடம் அன்பாக இருங்கள்.

மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்:
நிறத்திற்கும், அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நம்மை அடுத்தவர்களுடன் ஒப்பிடுகையில் தாழ்வு மனப்பான்மை அதிகமாகும். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அழகுதான்.  உங்களுக்கு இருக்கும் கண், மூக்கு, காது, நிறம், உடலமைப்பு போல் இந்த உலகில் வேறு யாருக்கும் இல்லை. அதனால் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். உங்களுடைய மதிப்பு உங்களின் அழகில் இல்லை, உங்கள் திறமையில்தான் உள்ளது. மற்றவர்களை விட நீங்கள் தனித்துவமாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள் என்பதை ஆழமாக நம்புங்கள்.

மற்றவர்கள் சொல்வதை கேட்காதீர்கள்:
உங்கள் தோற்றத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை மற்றவர்கள் கூறினால், அதை காது கொடுத்து கேட்காதீர்கள். மற்றவர்கள் கூறுவதை தடுக்கும் சக்தி நம் கையில் இல்லை. ஆனால் நாம் அந்த கருத்தை எப்படி மூளைக்குள் எடுத்துக்கொள்கிறோம் மற்றும் உணர்கிறோம் என்பது நம் கையில் உள்ளது. மற்றவர்கள் கூறும் கருத்திற்கு, சவாலாக இருக்கும் நேர்மறை கருத்தை மனதில் நிறுத்துங்கள். உதாரணமாக, ஒருவர் உங்களது ஆடையைப் பற்றி குறையாக பேசினால், அதை யோசித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், ‘நான் இந்த ஆடையில் மிகவும் அழகாக இருக்கிறேன் அல்லது அவர்கள் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் பேசுகிறார்கள்’ என்று எதிர்மறையாக வரும் கருத்துக்களையும்கூட நேர்மறையாக மாற்றுங்கள்.

ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கையோடும் இருக்கும்போது மற்றவர் கண்களுக்கு இயல்பாகவே நீங்கள் அழகாகத் தெரிவீர்கள். 

Next Story