சுயதொழில் மூலம் சுற்றுச்சூழல் காக்கும் திவ்யா
தற்போது உலகம் முழுவதும் பெரிய பிரச்சினையாக இருப்பது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு. அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்கள் பிளாஸ்டிக் கலந்தே வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, இயற்கைக்கு தீங்கு ஏற்படுத்தாத பைகள் மற்றும் பொருட்களைத் தயாரிக்கலாம் என்று தோன்றியது.
‘தான் செய்யும் தொழில் சமூகத்துக்கும் நன்மை அளிக்க வேண்டும்’ என்ற கொள்கை கொண்டவர் திவ்யா ஷெட்டி. கோவையில் வசிக்கும் இவர், இயற்கைக்கு தீங்கு ஏற்படுத்தாத பயனுள்ள பொருட்கள் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவருடன் நடந்த உரையாடல் இங்கே…
உங்களைப் பற்றி?
கர்நாடக மாநிலத்தில் பிறந்த நான், பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை அங்கேயே முடித்தேன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். திருமணத்துக்கு பின்பு கணவருடன் கோவையில் வசித்து வருகிறேன்.
இயற்கைக்கு தீங்கு ஏற்படுத்தாத பொருட்கள் தயாரிக்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி? அதை எவ்வாறு செயல்படுத்துகிறீர்கள்?
தற்போது உலகம் முழுவதும் பெரிய பிரச்சினையாக இருப்பது பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு. அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்கள் பிளாஸ்டிக் கலந்தே வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, இயற்கைக்கு தீங்கு ஏற்படுத்தாத பைகள் மற்றும் பொருட்களைத் தயாரிக்கலாம் என்று தோன்றியது. அதைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்பு புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி மக்கும் வடிவிலான பிளாஸ்டிக் பைகளையும், பொருட்களையும் தயாரித்தேன். இவற்றை முழுவதுமாக பல முறை பயன்படுத்திய பின்பு தூக்கி எறியாமல் மண்ணில் புதைத்து வைக்கும்போது, அந்தப் பொருட்களில் கலக்கப்பட்ட தாவர விதைகள் செடிகளாகவும், மரங்களாகவும் வளர்ந்து சுற்றுச்சூழலுக்கு பசுமை சேர்க்கும்.
என்னென்ன பொருட்கள் தயார் செய்கிறீர்கள்?
மல்டி லேயர் பிளாஸ்டிக் பயன்படுத்தி ஆடைகள், தண்ணீர் பாட்டில், பேனா, பென்சில், ரப்பர், புத்தகங்கள், டைரி, பரிசுப் பொருட்கள் என 50-க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கிறோம்.
நிறுவனம் தவிர்த்து நீங்கள் செய்யும் செயல்கள்?
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக வாங்கி, விற்பனை செய்து வருகிறேன். எங்கள் நிறுவனத்திற்கு தேவையான விதைகளையும் அவர்களிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்கிறேன்.
எதிர்கால திட்டங்கள் பற்றி?
நாட்டில் பெரும்பாலான இடங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முழுவதுமாக குறைப்பதும், பலவகையான கண்டுபிடிப்புகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்தி வெற்றி காண்பதும் என்னுடைய எதிர்கால திட்டங்களாகும்.
குடும்பத்தினர் ஆதரவு?
எனது கணவர் விஷ்ணுவும், நானும் இணைந்துதான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம். அந்த வகையில் அவர் எனக்கு மிகுந்த ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறார். நான் இந்த தொழில் தொடங்கும்போது, என் பெற்றோருக்கு ‘இவள் சாதிப்பாளா?’ என்ற பயம் இருந்தது. என் வெற்றியால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினேன். அதைத் தொடர்ந்து அவர்களும் எனது பணிகளில் உறுதுணையாக இருக்கிறார்கள்.
நீங்கள் வாங்கிய விருதுகள் பற்றி...
நான் வாங்கிய விருதுகள் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தி வருகின்றன. இளம் சுயதொழில் முனைவோர் விருது 2022, எமர்ஜிங் ஸ்டார்ட்அப் ஆப் தி இயர் 2021, நாஸ்காம் மற்றும் யுனைட்டெட் நேஷன் 2021, பட்டிங் நெக்ஸ்ட் ஜென் இன்டர்பிரனர் ஆப் டி.வி.எஸ் கேப்பிட்டல், அவுட்ஸ்டான்டிங் என்விராய்ன்மன்டலிஸ்டு, கர்நாடகா உமன் அச்சிவர்ஸ் அவார்டு 2020, வின்னர் ஸ்டார்ட்அப் கிரைண்டு 2020, ரன்னர்ஸ் இன் ஷி லவுஸ் டெக் 2020 போன்ற விருதுகளை பெற்றிருக்கிறேன்.
கொரோனா காலத்தில் உங்களின் செயல்பாடுகள்?
கொரோனா காலகட்டம் சவாலாகவே இருந்தது. அனைவருமே வீட்டில் முடங்கி விட்டோம். என் நண்பர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் எனக்கு உறுதுணையாக இருந்து முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆன்லைனில் விற்பனை நன்றாக இருந்தது.
குடும்பம், வேலை இரண்டையும் எப்படி கையாள்கிறீர்கள்?
நேர மேலாண்மை மிகவும் உதவியாக இருக்கிறது. எங்களின் விற்பனை ஆன்லைனில் நடப்பதால், எல்லா நேரத்திலும் தொலைபேசி மூலம் வாடிக்கையாளருடன் பேச வேண்டியிருக்கும். அதே சமயம், குடும்பத்தினருடன் தவறாமல் நேரம் செலவிடுவேன். அப்போது அலுவலகப் பணிகளை மேற்கொள்ள மாட்டேன். இதுவே நான் இரண்டிலும் என்னை சமநிலையில் கொண்டு செல்வதற்கு காரணமாகும்.
திருமணத்துக்குப் பின்னர் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
சில பெண்கள் திருமணத்துக்கு பின்பு தங்கள் கனவுகளை விட்டு விடுகிறார்கள். குடும்பப் பொறுப்புகளை சுமந்தாலும், நம்மால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை எப்போதும் கொண்டிருக்க வேண்டும். அது தான் நம்மை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். திருமணம் நம் வாழ்க்கைக்கான தடை இல்லை. வீட்டைத் தாண்டி வெளி உலகுக்கு வாருங்கள். அவ்வாறு வர முடியாத நிலையில், வீட்டில் இருந்தே உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.
Related Tags :
Next Story