பதக்கங்களைக் குவிக்கும் சரஸ்வதி
தற்போது வரை பல பதக்கங்களை வென்றுள்ளேன். எனது வெற்றிக்கு என் குடும்பமும், பள்ளி நிறுவனமும் உதவியாக இருக்கின்றனர்.
‘டேக்வாண்டோ’ என்பது கொரிய நாட்டின் தற்காப்புக்கலை ஆகும். புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி சரஸ்வதி, தற்போது வரை தேசிய அளவில் 13 டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்று ஒரு வெள்ளிப் பதக்கமும், 6 வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார். மாநில அளவில் 31 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வாங்கியிருக்கிறார். அவரது பேட்டி...
“நான் டேக்வாண்டோ பயிற்சியை இரண்டு வயதில் தொடங்கினேன். என் பெற்றோர்கள் முதலில் என் அண்ணனைப் பயிற்சிக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். அண்ணனைக் காட்டிலும் நான் விளையாட்டில் ஆர்வமாக இருந்ததைக் கண்ட அவர்கள், எங்கள் இருவரையும் பயிற்சிக் கூடத்தில் சேர்த்து விட்டனர். இரண்டு வயதில் தொடங்கி தற்போது வரை டேக்வாண்டோ பயிற்சியை தொடர்ந்து வருகிறேன்.
2009-ம் ஆண்டு, எனது நான்கு வயதில் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றேன். அதுவே நான் டேக்வாண்டோவில் பெற்ற முதல் பதக்கம். தொடர்ந்து நன்றாகப் பயிற்சி செய்து 2011-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான போட்டியில் புதுச்சேரி சார்பாக பங்கேற்றேன்.
தற்போது வரை பல பதக்கங்களை வென்றுள்ளேன். எனது வெற்றிக்கு என் குடும்பமும், பள்ளி நிறுவனமும் உதவியாக இருக்கின்றனர். நான் டேக்வாண்டாவை தேர்ந்தெடுத்ததற்கான முக்கிய காரணம் மன வலிமையோடும், உடல் ஆரோக்கியத்தோடும், பல பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவும், உலக அளவில் இந்தியாவை முன் நிறுத்துவதுமே ஆகும்.
டேக்வாண்டோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கல்விக்கும் கொடுக்கிறேன். கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிப் பல பரிசுகளைப் பெற்று சாதனை புரிந்ததற்காக எனக்கு ‘யுவஸ்ரீ கலா பாரதி விருது’ வழங்கப்பட்டது. டேக்வாண்டோவில் மட்டுமல்ல நடனம், யோகா போன்ற பல கலைகளிலும் நான் பயிற்சி பெற்றிருக்கிறேன்.
என் திறமையை பாராட்டும் வகையில், எனது பள்ளி என்னுடைய மேல்நிலைக் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டது.
2021-ம் ஆண்டு உலக டேக்வாண்டோ சங்கம் நடத்திய இணையவழி போட்டியில் பங்கெடுத்தேன். மருத்துவர் ஆகி ஏழை மக்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே என் கனவு” என்கிறார் சரஸ்வதி.
Related Tags :
Next Story