பொம்மலாட்டத்தை நவீனமாக்கி கதை சொல்லும் பானுமதி


பொம்மலாட்டத்தை நவீனமாக்கி கதை சொல்லும் பானுமதி
x
தினத்தந்தி 11 April 2022 11:00 AM IST (Updated: 9 April 2022 3:50 PM IST)
t-max-icont-min-icon

பாரம்பரியமான பொம்மலாட்டத்தில் கயிற்றின் மூலம் இயங்கும் பொம்மைகளை வைத்து கதைகள் சொல்வார்கள். தற்போது பெரிய பொம்மைகள் மூலம் கதை சொல்லும் ‘பிக் பப்பெட்’, விரல்களில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் மூலம் கதை சொல்லும் ‘பிங்கர் பப்பெட்’ என விதவிதமான முறைகளை பயன்படுத்தி வருகிறோம்.

‘கால மாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னை புதுப்பித்துக்கொள்ளும் கலைகள் தலைமுறைகளைக் கடந்து வாழும்’ என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த பானுமதி. கிராம மக்களின் வாழ்வோடு ஒட்டிய கலையான பொம்மலாட்டத்தை, நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் புதுமையாக்கி, அனைவரும் ரசிக்கும் வகையில் வழங்கி வருகிறார்.

கடந்த பத்து வருடங்களாக பொம்மலாட்ட கலை மூலம், கதை சொல்லியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். நான்கு வயது குழந்தைகளுக்கு கதை சொல்லியாகவும், பள்ளியில் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு, பொம்மைகள் வைத்து கதை சொல்ல பயிற்சி அளிப்பவராகவும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார் பானுமதி.

பொம்மலாட்ட கலை இப்போது எப்படி வளர்ந்து இருக்கிறது?, அதை குழந்தைகள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள்?, எப்படி அணுகுகிறார்கள்?, அதன் மூலம் அவர்களின் கற்றலில் என்ன மாற்றம் நடக்கிறது? என்பதை விவரிக்கிறார். 

“பாரம்பரியமான பொம்மலாட்டத்தில் கயிற்றின் மூலம் இயங்கும் பொம்மைகளை வைத்து கதைகள் சொல்வார்கள். தற்போது பெரிய பொம்மைகள் மூலம் கதை சொல்லும் ‘பிக் பப்பெட்’, விரல்களில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் மூலம் கதை சொல்லும் ‘பிங்கர் பப்பெட்’ என விதவிதமான முறைகளை பயன்படுத்தி வருகிறோம்.

மொபைல், கணினி, டி.வி. போன்ற டிஜிட்டல் சாதனங் களைப் பயன்படுத்தினாலும், இன்றைய குழந்தைகள் நவீன மாற்றம் பெற்ற பொம்மலாட்டத்தை ஆர்வத்துடன் ரசிக்கிறார்கள். முதலில் கதைகளைச் சொல்லி குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து, பிறகு பொம்மலாட்டத்துக்குள் அவர்களை ஆர்வம் கொள்ளச் செய்கிறோம். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற கதைகளை, அவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி சொல்கிறோம்.

கதைகளை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்காமல், இடையில் நிறுத்தி இந்த இடத்தில் என்ன நடந்திருக்கலாம் என்று கேட்போம். அப்போது நாம் யோசிக்க முடியாத பல பதில்களை குழந்தைகள் சொல்வார்கள்.

இதன் மூலம் அவர்கள் கதையோடு ஒன்றிப்போக முடியும். அதனால் கலந்துரையாடுவது, கேள்வி கேட்பது போன்ற திறன்கள் வளரும். கவனிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். உச்சரிப்பு, புதிய வார்த்தைகளை கற்றல், கற்பனை வளம் ஆகியவை மேம்படும். பிற்காலத்தில் குழந்தைகள் தங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணவும் இது உதவும்” என்கிறார் பானுமதி. 

Next Story