வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் நித்யா


வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் நித்யா
x
தினத்தந்தி 18 April 2022 11:03 AM IST (Updated: 18 April 2022 11:03 AM IST)
t-max-icont-min-icon

கிராமப் பகுதியில் இருந்து வரும் ஏழை மாணவர்கள் சிலரை எனது வருமானத்தின் மூலம் படிக்க வைக்கிறேன். நேரில் வந்து படிக்க முடியாதவர்களுக்கு ஆன்லைனில் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அளித்து வருகிறேன்.

னது கனவை நிறைவேற்ற முடியாத சூழலில், பிறரின் கனவுகள் நனவாகுவதற்கு வழிகாட்டி வருகிறார் நித்யா. அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்து, பிறகு பட்டப் படிப்பை முடித்த நித்யாவுக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டுமென்பதே கனவாக இருந்தது. அதற்காக ஐந்து ஆண்டுகள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காதபோது, அவர் சோர்ந்துவிடவில்லை.

தன்னைப் போல, தமிழ் வழியில் படித்து ஆட்சிப்பணி அதிகாரியாக வேண்டுமென்ற எண்ணம் கொண்ட, கிராமப்புற மாணவர்களின் கனவை நனவாக்குவதை தனது லட்சியமாகக் கொண்டார் நித்யா. இதற்காக இலவச பயிற்சியளிக்கும் நிறுவனத்தில் இணைந்து பயிற்சி அளித்து வருகிறார். இவரின் வழிகாட்டுதலால்  கடந்த பத்து ஆண்டுகளில், பல நூறு மாணவர்கள் ஆட்சிப் பணி அதிகாரிகளாக உயர்ந்துள்ளனர். தனது பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் நித்யா.

“எனது சொந்த ஊர் நாமக்கல். அப்பா லாரி ஓட்டுநராக இருந்தார். அம்மா கறவை மாடுகளை வளர்த்து, பால் விற்றுதான் எங்களைப் படிக்க வைத்தார். நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன்.  பின்பு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் அறிவியலில் இளங்கலைப் பட்டத்தைப் படித்தேன்.  தற்போது எல்.எல்.பி. படித்துக்கொண்டே, இரண்டு நிறுவனங்களில் பணியாற்று
கிறேன். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளையும் எடுக்கிறேன். எனது கணவர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எங்கள் மூத்த மகள் நிலானி மூன்றாம் வகுப்பும், இளைய மகள் மேகா எல்.கே.ஜி.யும் படிக்கிறார்கள்.

எனக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதனால் பட்டப் படிப்பை முடித்தவுடனே சென்னைக்கு வந்து, அதற்காக ஐந்து ஆண்டுகள் முயற்சி செய்தேன். சரியான வழிகாட்டுதல் இல்லாததால் எனது கனவை நனவாக்க முடியவில்லை. பிறகு திருமணம் ஆனதும், மனிதநேய அறக்கட்டளை மூலமாக, யு.பி.எஸ்.சி. தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சியளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடிமைப் பணி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தேன்.

கிராமப் பகுதி மாணவர்கள் தங்களின் கனவை நனவாக்க எவ்வாறு உதவுகிறீர்கள்?
கிராமப் பகுதியில் இருந்து வரும் ஏழை மாணவர்கள் சிலரை எனது வருமானத்தின் மூலம் படிக்க வைக்கிறேன். நேரில் வந்து படிக்க முடியாதவர்களுக்கு ஆன்லைனில்  ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அளித்து வருகிறேன். பயிற்சி மையத்தைத் தாண்டி எல்லா மாணவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறேன். படிப்பைத் தாண்டி, சொந்த மற்றும் குடும்ப பிரச்சினைகளால் மனமுடைந்து போகும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தி வருகிறேன்.



இப்போது என்னென்ன பணிகளைச் செய்து வருகிறீர்கள்?
கடந்த மூன்று ஆண்டுகளாக, ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சி நிறுவனம் ஒன்றில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். இந்த நிறுவனத்தின் வாயிலாக மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவர் களுக்கும், மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கும் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம். அவர்களுக்குக் கட்டணமின்றி உணவு மற்றும் தங்கும் வசதியை ஏற்படுத்தித் தருகிறோம்.

இது தவிர, மாணவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் வல்லுநர் குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். இதன் மூலம் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பது?, போட்டித் தேர்வுகளை எழுத என்ன செய்ய வேண்டும்?  உள்ளிட்ட ஆலோசனைகளை இலவசமாக அளித்து வருகிறேன்.

அது மட்டுமின்றி தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமாக, இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிப் பிரிவில் வகுப்புகள் எடுக்கிறேன். தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் நேரில் சென்று பயிற்சியளிக்கிறேன்.  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் மாநிலத்தின்  லடாக் வரை பல்வேறு ஊர்களிலும் போட்டித் தேர்வுகளுக்காக வகுப்புகளை எடுத்து வருகிறேன்.

குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பையும், இந்தப் பணிகளையும் எவ்வாறு தொய்வில்லாமல் மேற்கொள்கிறீர்கள்?
என்னுடைய வெற்றியை கொண்டாடுபவர் எனது கணவர். என்னுடைய விருப்பங்களுக்கும், முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கிறார். என் பெற்றோரும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். அவர்கள் எனது குழந்தைகளை கவனித்து கொள்வதால்தான், நான் வெளி மாநிலங்களுக்கெல்லாம் சென்று பணி செய்ய முடிகிறது.

ஒரு ஆண்டில் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறீர்கள்?
குடிமைப் பணி பயிற்சி என்பது தனியாளாகச் செய்யும் விஷயம் இல்லை. பல பேர் கூடி இழுக்கும் தேர் அது. அதில் நானும் ஒருவராக வடம் பிடித்து இழுக்கிறேன் என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், பத்துக்கும் மேற்பட்ட பாடப் பிரிவுகளை கற்பித்தால்தான் மாணவர்களை இந்தத் தேர்வுக்குத் தயார் செய்ய முடியும்.  அந்த வகையில் நான், இந்திய அரசியலமைப்பு, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கிறேன். குரூப் ஒன் தேர்வில் தமிழக வரலாறு, நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பாடங்களை எடுத்து வருகிறேன்.

ஆண்டுக்கு சுமார் மூவாயிரம் பேரைச் சந்தித்து வருகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் நாற்பதாயிரம் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்திருக்கிறேன். அவர்கள் எல்லோருமே வெற்றி பெறுவதும் இல்லை. நாங்கள் அளிக்கும் பயிற்சியோடு மாணவர்களின் ஆர்வம், ஈடுபாடு, அர்ப்பணிப்பு போன்றவற்றைப் பொறுத்தே அவர்கள் தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.

வெற்றி பெறுபவர்கள் மாவட்ட ஆட்சியர்களாகவும், காவல் பணி உயர் அதிகாரிகளாகவும் மட்டுமில்லாமல் உதவி ஆட்சியர்கள், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், வருமானவரி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்.

உங்கள் எதிர்கால திட்டம் பற்றி கூறுங்கள்?
நான் வாழ்க்கையில் திட்டம் போட்டு எதையும் செய்வதில்லை. எவ்வளவு வருமானம் கிடைத்தாலும், எனக்குப் பிடிக்காத விஷயங்களை செய்ய மாட்டேன். பெற்றோரும், கணவரும், நண்பர்களும் ‘பெண்தானே’ என்று என்னை ஒருபோதும் குறைவாக நினைத்ததில்லை. அதனால் எனக்குப் பிடித்த எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை முழுமனதோடு செய்து வருகிறேன். என் வாழ்க்கைப் பாதையில் உள்ளவற்றை ரசித்து, மகிழ்ந்து, நிம்மதியாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். 

Next Story