விளையாட்டில் சாதிக்கும் மாணவி


விளையாட்டில் சாதிக்கும் மாணவி
x
தினத்தந்தி 18 April 2022 5:59 AM GMT (Updated: 18 April 2022 5:59 AM GMT)

என்னுடைய கனவு, இலக்கு எல்லாமே விளையாட்டுத் துறையில் சாதனை புரிய வேண்டும் என்பதுதான். இந்தியாவிற்காக பல போட்டிகளில் விளையாட வேண்டும். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும்.

“தோல்வியை சந்திக்கும்போது. ‘ஏன் தோற்றோம்?’ என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். அதற்கான காரணத்தை அறிந்து, தவறை சரிசெய்து கொள்வேன்” என்று உறுதியுடன் பேசுகிறார், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஆன்லின் லிரின்டா. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலன்விளை எனும் ஊரைச் சேர்ந்த இவர், கல்வியில் மட்டுமில்லாமல் நீச்சல், தடகளம் போன்ற விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குகிறார். சிறு வயதிலேயே பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்து வருகிறார். அவரது பேட்டி…

விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது எப்போது?
நான் 3-ம் வகுப்பு படிக்கும்போது மற்ற மாணவர்கள் நீச்சல், தடகளம் போன்றவற்றில் ஈடுபடுவதைப் பார்த்து ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன்.

கல்வியில் நீங்கள் எப்படி?
எனக்கு கணித பாடம் என்றால் உயிர். வகுப்பில் முதல் மாணவி என்ற பெயரும் வாங்கி இருக்கிறேன். தமிழ் பாடத்தை விரும்பி படிப்பேன். படிப்பில் கவனத்தை சிதற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மாலையில் விளையாட்டுக்கான பயிற்சியில் ஈடுபடுகிறேன். படிப்பையும், விளை யாட்டையும் கவனமுடன் கையாளுகிறேன்.

நீங்கள் பெற்ற வெற்றிகள் பற்றி?
தமிழ்நாடு ஸ்டேட் அக்வாட்டிக் அசோசியேஷன் - 2021 சார்பில் மெட்லி ரிலேயில் இரண்டாம் இடம், திருப்பூரில் நடந்த மராத்தான் - 2022 போட்டியில் இரண்டாம் இடம், தமிழ்நாடு ஸ்டேட் அக்வாட்டிக் அசோசியேஷன் - 2021 சார்பில் பிரிஸ்டைல் ரிலேயில் இரண்டாம் இடம், திருநெல்வேலியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்த மராத்தான் போட்டியில் முதலிடம் என பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன்.

உங்களை ஊக்கப்படுத்தும் நபர் யார்?
என் ஊரில் உள்ள விளையாட்டுத் துறை ஆசிரியர் ஏபல் பெர்சிஸ் எனது ஆர்வத்தைப் பார்த்து, எனக்கு இலவசமாக பயிற்சி கொடுக்கிறார். வெவ்வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று பங்கேற்க வைத்திருக்கிறார்.

பெற்றோர் ஆதரவு எப்படி உள்ளது?
என் பெற்றோர் கட்டிட வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் மூன்று பெண் குழந்தைகள். மூவரையும் தைரியம் மிக்கவர்களாக வளர்க்கிறார்கள். நான் போட்டிகளில் பங்கேற்கும்போது, எனது அம்மா உடன் இருந்து கவனித்துக்கொள்வார்.

உங்களின் இலக்கு பற்றி?
என்னுடைய கனவு, இலக்கு எல்லாமே விளையாட்டுத் துறையில் சாதனை புரிய வேண்டும் என்பதுதான். இந்தியாவிற்காக பல போட்டிகளில் விளையாட வேண்டும். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும். நன்றாகப் படித்து, ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 

Next Story