கிராமப்புற பெண்களை முன்னேற்றும் ஜமுனா ரவி


கிராமப்புற பெண்களை முன்னேற்றும் ஜமுனா ரவி
x
தினத்தந்தி 18 April 2022 6:36 AM GMT (Updated: 18 April 2022 6:36 AM GMT)

புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் சட்ட, தன்னார்வலராக என்னைத் தேர்ந்தெடுத்தனர். என்னுடைய பணிகளைப் பார்த்துக் கிராமப்புறங்களில் ஒரு வழக்கறிஞரையும், உதவியாளராக ஒரு சட்ட தன்னார்வலரையும் நியமித்தனர்.

புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த ஜமுனா ரவி, கிராமப்புற சட்ட உதவியாளராகவும், பெண்கள் மேம்பாட்டுக்கான செயற்பாட்டாளராகவும், பட்டிமன்றப் பேச்சாளராகவும், கவிஞராகவும் இயங்கி வருகிறார். இதற்காக தலைநகர் டெல்லியில், உச்சநீதிமன்ற நீதிபதியிடம் ‘புதுச்சேரியின் சிறந்த சட்ட தன்னார்வலர்’ என்ற விருதையும், புதுச்சேரி அரசு மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து அளித்த ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து…

“கடலூரில் திருஞானசம்பந்தம் - கலியம்மாள் தம்பதியின் இரண்டாவது மகளாகப் பிறந்தேன். எனக்கு ஒரு அண்ணனும், தங்கையும், தம்பியும் உள்ளனர். எனது பெற்றோர், வாடகை சைக்கிள் கடையில் வந்த சொற்ப வருமானத்தில் நான்கு குழந்தைகளை வளர்த்தனர்.

அண்ணனைக் கல்லூரியிலும், தம்பி-தங்கையை பள்ளிகளிலும் சேர்க்க வேண்டியிருந்ததால், என்னைப் படிக்க வைக்க வசதியில்லாமல் பத்தாம் வகுப்போடு நிறுத்திவிட்டனர். அதனால் எனது மனதிற்குள் மிகப்பெரிய போராட்டமே நடந்தது. அடுத்த ஆண்டு படிக்க வைப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அது நடக்கவே இல்லை”.

பிறகு எப்போது படித்தீர்கள்? எப்படித் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள்?
நூலக உதவியாளராகப் பணியாற்றி வரும் என் கணவர் ரவி, எனது திறமைகளை ஊக்குவித்தார். அவரின் ஆதரவில் நான் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றேன். எனது மகனையும், 
மகளையும் நன்றாகப் படிக்க வைத்துப் பொறியியல் பட்டதாரிகள் ஆக்கினேன்.

திருமணத்திற்கு முன்பிருந்தே வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றேன். அதைத் தொடர்ந்து எனது கணவர் கொடுத்த ஊக்கத்தால் இலக்கிய மேடைகளில் நிறைய கவிதைகளை வாசித்தேன். கவியரங்க மேடை எனக்குப் பட்டிமன்ற வாய்ப்புகளை அளித்தது. நான் எழுதிய நாடகங்கள் புதுச்சேரி வானொலியில் வரவேற்பைப் பெற்றன. இவ்வாறு எனக்கு ஏற்பட்ட அவமானங்களை எல்லாம், வெகுமானங்களாக மாற்றிக் கொண்டேன்.

கிராமப்புற பெண்களுக்கு எந்த வகைகளில் சட்ட உதவி அளிக்கிறீர்கள்?
புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் சட்ட, தன்னார்வலராக என்னைத் தேர்ந்தெடுத்தனர். என்னுடைய பணிகளைப் பார்த்துக் கிராமப்புறங்களில் ஒரு வழக்கறிஞரையும், உதவியாளராக ஒரு சட்ட தன்னார்வலரையும் நியமித்தனர். 

பாகூர் பகுதியில் உள்ள பெண்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது யாரை அணுக வேண்டும்?, எப்படிச் செயல்பட வேண்டும் என்று எடுத்துக் கூறுவேன்திருமணப் பதிவு, பிறப்பு பதிவின் அவசியத்தையும் எடுத்துக் கூறி, அதில் உள்ள பிழைகளைச் சரி செய்தும் கொடுக்கிறேன். குடும்ப நல பிரச்சினைகளுக்காக அணுகும்போது இருதரப்பினரையும் அழைத்துப்பேசி பல பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்கிறேன்.

நலிவடைந்த பெண்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் என்ன?
தீபாவளி நேரத்தில் விற்கப்படும் ‘பட்டாசு வர்த்தி’ தயாரித்தல், சாம்பிராணி, ஊதுவர்த்தி, ஊறுகாய், மசாலாப் பொடி தயாரித்தல், பேஷன் நகைகள் தயாரித்தல் ஆகியவற்றுக்கான பயிற்சிகள் அளிக்கிறேன்.

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு நீங்கள் செய்யும் பணிகள் என்ன?
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ பற்றி அவர்களிடம் விரிவாகப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். அந்த நிகழ்ச்சிக்கு பெற்றவர்களையும் வரவழைத்து, அவர்களுக்கு பெண் பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதை விளக்குகிறேன். ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும், தலைமை ஆசிரியரைச் சந்தித்து அதற்கான நேரம் ஒதுக்கும்படி கேட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.பட்டிமன்றப் பேச்சாளராகவும் கவிஞராகவும் உங்களின் செயல்பாடுகள் பற்றி சொல்லுங்கள்...
புதுவை, தமிழகம் என பல்வேறு பகுதிகளில் பட்டிமன்றங்களில் பேசியுள்ளேன். திருவிழாக்களிலும் நேர்முக வர்ணனை செய்துள்ளேன். கவிஞராகவும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வலம் வந்திருக்கிறேன். விரைவில் ஒரு கவிதை நூலை வெளியிட இருக்கிறேன். நாடகங்கள் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பற்றி?
இந்திய அரசு தென்னக பண்பாட்டு மையம், புதுவை அரசு சுற்றுலாத்துறை சார்பாக ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது, கிராமப்புற பெண்களுக்குச் சட்ட உதவிகள் செய்து வருவதால், ‘சிகரம் தொட்ட மகளிர்’ விருது, சமுதாயப் பணிகள், மகளிருக்கான பணிகள், இலக்கியப் பணிகளைப் பாராட்டி தென்னிந்திய கலாசார அமைப்பு ‘சாதனையாளர்’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், இலக்கியப் பணிகளுக்காக ‘மகாகவி பாரதியார் விருது’, ‘செல்லம்மாள் விருது’, ‘புரட்சிப் பைந்தமிழ் பாவரசி விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.

உங்களின் லட்சியம் என்ன?
என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் கிராமப்புற பெண்களுக்கு உதவி செய்து, அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். எல்லா பெண் குழந்தைகளும் கல்வியறிவைப் பெறுவதற்காக பாடுபட வேண்டும் என்பதே எனது இலக்காகும்.

பெண்களுக்கு நீங்கள் சொல்ல வருவது என்ன?
பெண்கள் எதற்காகவும் முடங்கிப் போகக்கூடாது. பிரச்சினைகளைக் கண்டு பயப்படக்கூடாது. எதையும் எதிர்க்கும் மன வலிமையை பெற வேண்டும். எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. சாவதற்கு ஒரு வழி இருக்கும்போது, வாழ்வதற்கு பல வழிகள் உண்டு என்பதை உணர வேண்டும். 


Next Story