பசியில்லாத சமுதாயம் படைக்கும் சரண்யா


பசியில்லாத சமுதாயம் படைக்கும் சரண்யா
x
தினத்தந்தி 25 April 2022 5:30 AM GMT (Updated: 23 April 2022 11:46 AM GMT)

‘பசிக்கிறது என்று வாய்விட்டு சொல்லத் தெரியாமல் வீதியில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு வேளையாவது தினமும் உணவு சமைத்துத் தருவோமா?’ என்று கணவர் கேட்டபோது, மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சரண்யா பிரேம்குமார், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும், ஆதரவற்றோருக்கும் உணவு சமைத்துக் கொடுத்துப் பசியாற்றுவதையே தனது அன்றாடப் பணியாகச் செய்து வருகிறார்.

“ஆதரவற்றவர்கள் பசியாக இருப்பார்களே என்பதால் ஊருக்கோ, உறவினர் வீட்டு விசேஷங்களுக்கோ கூட பெரும்பாலும் செல்வதில்லை” எனக்கூறும் சரண்யா, நாள்தோறும் சுமார் 80 பேருக்கு தனியாளாக உணவு சமைக்கிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் வசிக்கும் பலரை, அவர்களின் உறவினர்களுடன் சேர்த்து வைக்கும் சேவையைத் தனது கணவரோடு இணைந்து செய்து வரும் சரண்யாவிடம் உரையாடியதிலிருந்து…

உங்களைப் பற்றி சொல்லுங்கள்...

எனது தந்தை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தாய் கேரளாவின் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர். காதல் திருமணம் செய்துகொண்ட பெற்றோர், கேரளாவில்தான் வசித்தார்கள். அதனால் நான் பிறந்து ஆரம்பக் கல்வியை முடித்தது எல்லாமே அங்கேதான். பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் கோவையில் முடித்தேன். 
 தந்தை சக்திவேல் துணை ராணுவத்தில் பணியாற்றுகிறார். தாய் மினி இல்லத்தரசி. எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் வசித்து வருகிறேன். கணவர் பிரேம்குமார் திரைப்பட உதவி இயக்குநராகவும், புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றுகிறார். இருந்தாலும் முதன்மையான பணியாக சமூக சேவையைச் செய்து வருகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டோரின் பசியை போக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
பள்ளிக் காலத்திலேயே ஆதரவற்றவர்களைக் கண்டால், அவர்களுக்கு உணவு வாங்கித் தருவேன். திருமணத்துக்குப் பிறகு, ‘பசிக்கிறது என்று வாய்விட்டு சொல்லத் தெரியாமல் வீதியில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு வேளையாவது தினமும் உணவு சமைத்துத் தருவோமா?’ என்று கணவர் கேட்டபோது, மகிழ்ச்சியோடு சம்மதித்தேன். அதன்பிறகு ‘பசியில்லா வடமதுரை’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் ஆதரவற்றவர்களுக்கு நாள்தோறும் உணவு சமைத்துக் கொடுக்கத் தொடங்கினோம்.

ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு உணவளிக்கிறீர்கள்? அதற்கான நிதியை எங்கிருந்து பெறுகிறீர்கள்?
ஆரம்பத்தில் 20 பேருக்கு உணவு கொடுத்தோம்.தற்போது சுமார் 80 பேருக்கு மதிய உணவை அளித்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிகபட்சமாக 500 பேருக்கு உணவளித்தோம். 
 எங்களின் சேவையைப் பற்றி நேரடியாகவும்,   சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தெரிந்த நண்பர்கள், தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து வருகின்றனர். அதுபோக, பலரும் தங்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றுக்கு ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் செலவை ஏற்றுக்கொள்கிறார்கள். சில நேரங்களில் நாங்களே எங்களால் இயன்றவரை பங்களித்து வருகிறோம்.இவ்வளவு பேருக்கான உணவை தனியாளாக எப்படி சமைக்கிறீர்கள்?
சமைப்பதற்கான பொருட்களை வாங்கி வருவது, காய்கறி வெட்டித் தருவது போன்ற உதவிகளை கணவர் செய்வார். சமையல் செய்து, அவற்றை உணவுப் பெட்டிகளில் அடைத்துத் தருவது வரை எல்லா வேலைகளையும் நான் தனியாளாகவே செய்துவிடுவேன். உணவுப் பொட்டலங்களை எடுத்துச் சென்று பகிர்ந்தளிக்கும் வேலையைக் கணவர் செய்வார். 
 அவர் இல்லாத நேரங்களில் அதையும் நானே செய்துவிடுவேன். இயன்றவரை பொழுதுபோக்கு, ஊருக்குச் செல்வதையெல்லாம் தவிர்த்துவிடுவோம். தவிர்க்க முடியாமல் எப்போதாவது உறவினர் வீட்டு விசேஷங்களுக்குச் செல்லும் நாட்களில், காத்திருக்கும் மக்களுக்கு உணவைக் கொண்டு சேர்ப்பதற்கு மாற்று ஏற்பாட்டைச் செய்துவிடுவோம். அதாவது, நண்பர்கள் மூலமாக கடை யிலிருந்து வாங்கிக் கொடுத்து விடுவோம்.

மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டுப் பிரிந்தவர்களை உறவுகளுடன் சேர்ப்பது பற்றி சொல்லுங்கள்?
மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டால் தெரிந்தவர்களும், நண்பர்களும் எங்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள் அல்லது அவர்களை எங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்பார்கள். எனது கணவர் அவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். 
 அதுவே அவர்களின் உறவினரைக் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். இவ்வாறு 70-க்கும் மேற்பட்டவர்களை அவர்களின் உறவினர்களுடன் சேர்த்து வைத்திருக்கிறோம். தீய பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்த பலருக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து அப்பழக்கத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்தும், உறவினர்களிடம் சேர்த்திருக்கிறோம். அவர்களில் பலர், தற்போது வேலை செய்து தங்களின் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.

நீங்கள் செய்து வரும் மற்ற சேவைகள் பற்றி சொல்லுங்கள்...
நண்பர்கள் உதவியோடு, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும், மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். அண்மையில் சகோதரி ஒருவரின் உதவியோடு, மலைவாழ் பிள்ளைகளுக்குப் புத்தாடைகளை வாங்கிக் கொடுத்தோம். குறிப்பாக நரிக்குறவ இன மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு அவர்களுக்குப் புத்தாடைகள், உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அவர்களுடன் சேர்ந்தே பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.

உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள், பாராட்டுகள் பற்றி?
எங்களின் சேவைக்கு, தொடர்ந்து பல்வேறு விருதுகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் செய்த சேவைக்காகவே விருதுகள் கொடுத்தார்கள். அண்மையில் ‘சாதனைப் பெண்’ என்ற விருதை பெற்றேன். ஆறேழு ஆண்டுகளாகத் தேடி அலைந்து ‘இனி தங்கள் பிள்ளைகளைப் பார்க்கவே முடியாது’ என்று நம்பிக்கை இழந்த பல குடும்பத்தினர், எங்களின் மூலம் தங்கள் பிள்ளைகள் கிடைத்தபோது, நெகிழ்ந்து பாராட்டி வாழ்த்துவதே எங்களுக்கு மிகப்பெரிய விருது.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
இயன்றவரை எங்கள் பகுதியில் யாரும் பசியோடு உறங்கச் செல்லக்கூடாது என்பதே எங்களின் நோக்கம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும், ஆதரவற்றவர்களையும் வைத்துப் பராமரிக்கும் வகையில், ஒரு காப்பகத்தை அமைக்க வேண்டும் என்பதே எங்களின் லட்சியம். படுத்த படுக்கையான நிலையில், பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்களையும் எங்கள் காப்பகத்தில் வைத்துப் பராமரித்து, அவர்களின் இறுதிப் பயணத்தை இயன்றவரை நிம்மதி நிறைந்ததாக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 

Next Story