சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னேறலாம்- ஜெயகல்யாணி


சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னேறலாம்- ஜெயகல்யாணி
x
தினத்தந்தி 2 May 2022 5:30 AM GMT (Updated: 30 April 2022 12:26 PM GMT)

சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால், அதுவே நமது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதற்கு நானே உதாரணம்.

“சவால்களை எளிதாக எடுத்துக்கொண்டு சமாளிக்கும் மன வலிமை எனக்கு வந்திருக்கிறது. அதன் துணையோடு எனது இலக்குகளை எட்டுவேன்” என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் ஜெயகல்யாணி.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர். அப்போது நிகழ்ச்சிக்காக பல தொழில் முனைவோர்களை சந்தித்தார். அவர்களின் அனுபவங்கள் கொடுத்த நம்பிக்கை, தற்போது இவரையும் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற்றி இருக்கிறது. சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, இணையவழி நர்சரி தொழிலை நடத்தி வருகிறார். அவருடன் உரையாடிய தில் இருந்து..

“தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த நான், தற்போது நாகர்கோவிலில் வசித்து வருகிறேன். பள்ளி நாட்களில் கைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தேன். வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டில் முதுகலைப் பட்டங்களும், கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். இந்தி கற்பிக்கும்  ஆசிரியருக்கான முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்திருக்கிறேன். பல மொழிகளைத் தெரிந்து கொள்ள 
வேண்டும் என்ற ஆர்வத்தில் மலையாளம், ஜெர்மன் ஆகிய மொழிகளைப் பயின்று வருகிறேன். தற்போது எனது கணவர் அன்பரசுவுடன் இணைந்து ஆன்லைனில் நர்சரி தொழில் செய்து வருகிறேன். எனது ஒரே மகன் விக்னேஷ்.

எனக்குச் சிறு வயதில் இருந்தே வானொலியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்  மீது ஆர்வம் இருந்தது.  ஆனால், எங்கள் வீட்டில் ‘வானொலி கேட்கக்கூடாது, தொலைக்காட்சி பார்க்கக்கூடாது, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்’ என்று கட்டுப்பாடுகள் இருந்தன. இருந்தாலும் வீட்டுக்குத் தெரியாமல், அவ்வப்போது வானொலி கேட்பேன்.

திருமணத்துக்குப் பிறகு தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியையாக பணியாற்றியபோது, அருகில் இருந்த அகில இந்திய வானொலியில், பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு ஆள்தேர்வு நடத்தினார்கள். அதில் கலந்துகொண்டு தேர்வாகி, சில ஆண்டுகள் பகுதிநேர அறிவிப்பாளராக பணிபுரிந்தேன். 

பின்பு திருநெல்வேலி தனியார் பண்பலை வானொலியில் முழுநேரப் பணியில் இருந்தேன். 
அதன்பிறகு சென்னையில் தனியார் தொலைக்காட்சிகளில் சில ஆண்டுகள் பணி செய்தேன். ஊரடங்கு காலத்தில் சொந்த ஊருக்கு வந்த நான், அங்குதான்  ஆன்லைன் நர்சரி தொழிலைத் தொடங்கினேன்.

வீட்டுத் தோட்டத்தில் ஈடுபாடு வந்தது ஏன்? அதையே தொழிலாக மாற்றிக் கொண்டது எப்படி?
சிறு வயதில் இருந்தே விதவிதமான செடிகளைச் சேகரிப்பது எனக்கு பிடித்த விஷயம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது தந்தையின் தோட்டத்தில் உள்ள மூலிகைகளைப் பற்றி எனது யூடியூப் சேனலில் சொன்னபோது, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு செடி-கொடிகளைப் பற்றிய வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டேன். 

‘அவற்றின் விதைகளை அனுப்ப முடியுமா?’ என்று பலரும் கேட்டபோது, அவர்களுக்கு இலவசமாகவே அனுப்பி வந்தேன். ஒருசமயம் எனக்கு பாரிஜாத செடி தேவைப்பட்டபோது, எனது தோழி ஒருவர் அதை அழகாக பார்சல் செய்து கொரியரில் அனுப்பினார். அதைப் பார்த்தவுடன்தான் எனக்குச் ‘செடிகளை இவ்வளவு நேர்த்தியாக கொரியரில் அனுப்ப முடியும்’ என்று தெரிந்தது.

அதன்பிறகு வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பதற்கு ஏற்ற பழச் செடிகளை விற்பனை செய்யலாம் எனத் திட்டமிட்டு முகநூலிலும், எனது யூடியூப் சேனலிலும் அறிவிப்பு செய்தேன். அதைப் பார்த்து பலரும் ஆர்வத்தோடு செடிகளை வாங்கினார்கள். தற்போது ஆன்லைனில் செடிகளை விற்பதே எனது முக்கிய தொழிலாகிப் போனது.



நர்சரி தொழிலை ஆன்லைனில் எவ்வாறு வெற்றிகரமாக செய்கிறீர்கள்?
சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால், அதுவே நமது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதற்கு நானே உதாரணம். 

எல்லோரும் செய்வதையே செய்யாமல், கொஞ்சம் வித்தியாசமாக, அரிதான பழச்செடிகளை விற்பனை செய்ய வேண்டும் என்று தேடிப் படித்து, பல ரகச் செடிகளைக் கண்டுபிடித்தேன். உதாரணமாக, ‘சதா பகர்’ என்றொரு மாமரம் இருக்கிறது. இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரே மரத்தில் 25 வகையான சுவையுள்ள பழங்கள் காய்க்கும். அதைப் பற்றி ஆராய்ந்தபோது, ஐந்து விதமான செடிகளின் வேர்களை இணைத்து உருவாக்கப்பட்ட மரம் அது என்பதைத் தெரிந்துகொண்டேன். அந்தத் தகவலைப் பகிர்ந்தவுடனேயே பலரும் அது தங்களுக்கு வேண்டும் என்று ஆர்டர் செய்தார்கள். இப்படித்தான் சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துகிறேன்.

இந்தத் தொழிலில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன? 
எல்லா தொழில்களைப் போலவே, இந்தத் தொழிலிலும் போட்டிகள் அதிகம் உள்ளன. ஆனாலும் நாங்கள் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக, பழங்களுடன் எட்டு அடி முதல் பத்து அடி உயரமுள்ள மரங்களையே விற்பனை செய்கிறோம். 

நாணய சேகரிப்பு போல, பலர் இப்போது பழ மரங்களைச் சேகரிக்கத் தொடங்கிவிட்டனர். அதனால் தற்போது 35 வகையான மா மரங்களை விற்பனை செய்கிறோம். எல்லா அரிய வகை மரங்களும், செடிகளும் எங்களிடம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோம். 

உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?
திருநெல்வேலி விவேகா அறக்கட்டளையின் சார்பாக ‘சாதனைப் பெண்’ விருது கிடைத்தது. பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறேன்.

உங்களின் லட்சியம் என்ன?
இந்தத் தொழிலில் பெரிய அளவில் வெற்றி பெற்று முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. 

Next Story