கடல் கடந்து ஒலிக்கும் சலங்கை


கடல் கடந்து ஒலிக்கும் சலங்கை
x
தினத்தந்தி 2 May 2022 5:30 AM GMT (Updated: 30 April 2022 1:30 PM GMT)

திருமணமான பின்பு, யாழ்ப்பாணத்தில்தான் இருந்தோம். அங்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டன. எப்போதும் போர் மயமாகவே இருந்தது. எனவே இலங்கையில் இருந்து அகதிகளாக லண்டன் சென்று தஞ்சம் அடைந்தோம். இங்கு கணவர், எனது நாட்டியக் கனவை நிறைவேற்றும் வகையில், ‘நாட்டியாலயா’ என்ற பள்ளியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

லங்கையில் பிறந்து, லண்டனில் குடியேறியவர் ராகினி ராஜகோபால். இந்தியாவின் பாரம்பரியக் கலையான பரதத்தின் மீது இருந்த ஆர்வத்தால், முறையாகப் பயின்று லண்டனில் இக்கலையை வளர்த்து வருகிறார். 

இவரது அப்பா அரசரத்தினம் கட்டிட ஒப்பந்ததாரர்.அம்மா மங்கையர்க்கரசி குடும்பத்தலைவி. 1962-ம் ஆண்டு ராகினியும், அவரது சகோதரியும் இரட்டை குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் படித்தது, வளர்ந்தது இலங்கையில்தான். ராகினிக்கு திருமணம் நடந்ததும், அவரது கணவர் ராஜகோபாலுடன் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். தற்போது, அங்கேயே நாட்டியப் பள்ளி நடத்தி வருகிறார் ராகினி. 
 
இவரது சேவையைப் பாராட்டும் வகையில், லண்டனில் நடக்கும் அரசு விழாக்களில், கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளார். கலைச்சேவை குறித்து ராகினியுடன் நடந்த உரையாடல் இதோ…

பரதத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி? 
எங்களுக்கு 5 வயது இருக்கும்போது, பெற்றோருடன் உறவினர் திருமணத்துக்குச் சென்றிருந்தோம். அது, ‘தில்லானா மோகனாம்பாள்' திரைப்படம் வெளியான சமயம். அங்கிருந்த வாத்தியக்காரர்கள், நாதஸ்வரத்தில் அந்தப் படத்தில் இருந்து ஒரு பாட்டை வாசித்தனர். அதற்கு எங்களை அறியாமலேயே நானும், எனது சகோதரியும் நடனமாடினோம். இதைப் பார்த்த உறவினர்கள் எங்களைப் பாராட்டினர். இதுவே, எங்களுக்கு அஸ்திவாரமானது. பெற்றோரும் எங்கள் விருப்பத்தைப் புரிந்து கொண்டு, நாட்டியப் பள்ளியில் சேர்த்து விட்டனர். இவ்வாறு 6 வயது முதல் பரதம் எங்களுடன் இணைந்து கொண்டது. 

பரதம் பயின்றது எங்கே? 
இலங்கையில், 15 வயது வரை மட்டுமே பரதம் பயின்றேன். அதன்பின், இந்தியக் கலையை இந்திய மண்ணில் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதனால், சென்னையில் உள்ள பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து முறையான நாட்டியக் கலையைக் கற்றேன். அங்கு, எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் நாட்டியத்தை உயிரோட்டமாக கற்பித்தனர். மீண்டும் இலங்கை திரும்பியதும், அந்நாட்டு அரசு சார்பில் முதன்
முதலாக நியமிக்கப்பட்ட 5 பரத ஆசிரியர்களில் ஒருவராக நானும் தேர்வு செய்யப்பட்டேன். 

லண்டனில் பரதம் பயிற்றுவிப்பது பற்றி சொல்லுங்கள்? 
திருமணமான பின்பு, யாழ்ப்பாணத்தில்தான் இருந்தோம். அங்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டன. எப்போதும் போர் மயமாகவே இருந்தது. எனவே இலங்கையில் இருந்து அகதிகளாக லண்டன் சென்று தஞ்சம் அடைந்தோம். இங்கு கணவர், எனது நாட்டியக் கனவை நிறைவேற்றும் வகையில், ‘நாட்டியாலயா’ என்ற பள்ளியை ஏற்படுத்திக் கொடுத்தார். 
 35 ஆண்டுகளாக இப்பள்ளியை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். மாணவர்களிடம் பரதம் கற்பிப்பதற்கு கட்டணம் எதையும் நிர்ணயிக்கவில்லை. அவர்களின் பெற்றோரே ஆர்வமுடன், ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, கொடுக்கின்றனர். இயலாத மாணவர்களிடம் அதையும் பெறுவதில்லை. 

லண்டன் மாணவர்களிடம் பரதத்தின் மீதான ஆர்வம் எப்படி இருக்கிறது? 
பள்ளி தொடங்கிய சமயத்தில், தமிழ் மாணவர்கள் மட்டும்தான் பரதத்தைக் கற்க ஆர்வம் காட்டினர். நண்பர் ஒருவரின் உதவியுடன், என் பிள்ளைகள் படித்த பள்ளியிலேயே நடன ஆசிரியராகச் சேர்ந்தேன். என் மகளுக்கும் நாட்டியத்தின் மேல் ஆர்வம் இருந்ததால், அவளுக்குப் பயிற்றுவித்தேன். அவளின் நண்பர்கள், மாணவர்களின் அம்மாக்கள் ஆகியோர் ஆர்வமுடன் கற்கத் தொடங்கினர். தற்போது, லண்டனில் வசிக்கும் பிற நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் இக்கலையைக் கற்க ஆர்வத்துடன் வரு கின்றனர். இதுவரை 35 மாணவர்கள் அரங்கேற்றம் செய்துள்ளனர். 

கற்கும் மாணவர்கள் அதைத் தொடர்கின்றனரா?
மாணவர்களுக்குப் பரதத்தைக் கற்றுத் தருவதோடு நிறுத்துவதில்லை. அதன் சிறப்பு என்ன? மற்றவர்களுக்கு அதை ஏன் கொண்டு சேர்க்க வேண்டும்? என்பதையும் சொல்லித் தருகிறோம். சில மாணவர்கள் பொழுது போக்குக்காகக் கற்கின்றனர். ஆனால்,  சில மாணவர்கள் கற்று முடித்த பின்பு, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதைச் சிறப்பித்து வருகின்றனர். 

எதையெல்லாம் மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறீர்கள்? 
பரதத்தில் அடிப்படை, நாட்டிய நாடகம், கோலாட்டம், பின்னலாட்டம், மயிலாட்டம் என இந்தியாவின் பாரம்பரியக் கலைகளை இதனுடன் இணைத்து, மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் கற்றுத் தருகிறேன்.பரதத்தில் ஏதாவது புதுமை செய்யத் திட்டமுண்டா? 
பரதத்தை ஆர்வமுடன் கவனித்தால், அதில் பல புதுமைகள் இருக்கும். மாணவர்களுக்குக் கற்றுத் தரும் போது, சினிமா பாடல்களைத் தவிர்த்து, கீர்த்தனைகள், பக்திப் பாடல்கள், புராணங்களை மையப்
படுத்தித்தான் கற்றுத் தருகிறேன். இதில், பாரதியார் பாடல்களுக்கும் இடமுண்டு. தற்போது, தமிழின் பழைய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு, நிகழ்ச்சியை நடத்தி இதன் சிறப்பை மற்றவர்களுக்குப் பரப்ப வேண்டும் என்பதுதான் இலக்கு. இதையே புதுமையாகக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். 

உங்களுக்கான அங்கீகாரங்கள்?
லண்டன் அரசு சார்பில், இங்கு நடக்கும் அரசு விழாவில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுதவிர கனடா, பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, இந்தியா உட்பட பல நாடுகளிலும் மாணவர்களுடன் நாட்டிய நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். 
 அப்போது எங்களைக் கவுரவிக்கும் வகையில்   விருதுகள் வழங்கப்பட்டன. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஓபா’ என்ற அமைப்பு  ‘நாட்டியக் கலாவிதுஷி’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. கனடா அரசு, ‘நாட்டிய வித்தகி’ பட்டம் வழங்கிக் கவுரவித்தது.

இளைய தலைமுறைக்கு உங்கள் அறிவுரை?
தமிழ் இனிமையான மொழி. அதேபோல்தான், இந்தியக் கலைகளும். அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது பெற்றோரின் கடமை. எந்தக் கலையாக இருந்தாலும், அதை இளைய தலை முறையிடம் சேர்க்க வேண்டும். அவர்கள் மூலம் கலைக்கு உயிர் கிடைக்கும்.
 இதைத்தான் என் மகளுக்கும் சொல்லி வளர்த்தேன். தற்போது, அவளும் எனது வாரிசாக மாறியுள்ளாள். எனது இறுதி மூச்சு வரை, இந்தியக் கலாசாரத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்வதே என் நோக்கம்.

Next Story