குறளுக்காக ‘குரல்’ கொடுக்கும் சீதளாதேவி


குறளுக்காக ‘குரல்’ கொடுக்கும் சீதளாதேவி
x
தினத்தந்தி 16 May 2022 5:30 AM GMT (Updated: 14 May 2022 11:57 AM GMT)

சி.ஏ. படித்து பட்டய கணக்காளர் ஆக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. நான் தமிழ் துறை எடுக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை.

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற வரிகளுக்கேற்ப, தான் கற்ற கல்வியை அனைவருக்கும் கற்பித்து, இலக்கிய மேடைகளில் தமிழின் மகத்துவத்தை எடுத்துரைத்து, பல சாதனைகள் படைத்து வருகிறார் சீதளாதேவி. திருக்குறளின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அவருடைய பேட்டி…

உங்களைப் பற்றி?
நான் செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். தமிழும், திருக்குறளும், குழந்தைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே குழந்தைகளோடு தமிழ் ஆசிரியராக பயணிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் நான். அந்த வகையில் என்னையும் வளர்த்துக்கொண்டு, சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் செயலாற்றி வருகிறேன்.

தமிழ் மீது ஆர்வம் உண்டானது எப்படி?
சி.ஏ. படித்து பட்டய கணக்காளர் ஆக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. நான் தமிழ் துறை எடுக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. எனது குடும்பத்தினர் அனைவரும் ஆசிரியர் பணியில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். 

அவர்கள் மூலம் ஏற்பட்ட ஈர்ப்பு மற்றும் தமிழ் மொழி மீதான தாக்கத்தின் காரணமாக, தமிழ்த் துறையில் என்னுடைய பயணத்தை தொடங்கி தமிழை காதலித்து வந்தேன். ஆசிரியர் பணியைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டாலும், தமிழ் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறேன்.

நீங்கள் செய்த உலக சாதனையைப் பற்றி சொல்லுங்கள்?
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக சாதனைகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படி அழியும் பொருட்களில் திருக்குறளை எழுதி, அதனை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சாதனைகள் செய்தேன்.

1330 திருக்குறள்களையும், கடந்த பிப்ரவரி 17-ந் தேதி 43 வெற்றிலைகளில் எழுதினேன். பின்பு பிப்ரவரி 27-ந் தேதி மரத்தால் செய்யப்பட்ட 223 கிளிப்புகளிலும், மார்ச் 3-ந் தேதி 268 சாக்பீஸ்களிலும், மார்ச் 10-ந் தேதி 133 சோப்புக் கட்டிகளிலும், ஏப்ரல் 5-ந் தேதி 3 பானைகளிலும், ஏப்ரல் 14-ந் தேதி ஒரு புடவையிலும் திருக்குறளை எழுதினேன். இவ்வாறு 6 முறை திருக்குறளை எழுதி உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறேன்.

உங்களின் இலக்கு?
எனது இலக்கு, கனவு எல்லாமே தமிழின் அறத்தை பறைசாற்றும் விதத்தில் அமைந்த திருக்குறளை, தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பதே. அதை நிறைவேற்றும் வரை, அது தொடர்பான சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்துவேன்.




ஆசிரியராக, பேச்சாளராக, சமூக ஆர்வலராக உங்களின் பங்களிப்பு?
சிறுவயதில் கவிதை எழுதத் தொடங்கினேன். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது மேடைகளில் பேச ஆரம்பித்தேன். தொடக்க காலத்தில் எனக்கு மேடைகளில் பேசுவது என்றால் பயம். எனது ஆசிரியர் கொடுத்த தைரியத்தாலும், ஊக்கத்தாலும் பேச ஆரம்பித்தேன். முதல் முறை வெற்றியின் சுவையைக் கண்ட பின்பு, அதை மீண்டும் மீண்டும் சுவைக்க வேண்டும் என்ற தீராத தாகம் எனக்குள் ஏற்பட்டது. ‘கண்டதை படித்தவன் பண்டிதனாவான்’ என்பதற்கேற்ப, தேடித் தேடி புத்தகங்களை படித்தேன். அதன் விளைவாக நிறைய மேடைகளில் என்னை முன்னிலைப்படுத்திக் கொண்டேன். தற்போது பள்ளி மேடைகள், பெண்கள் முன்னேற்றம் மற்றும் கலாசாரம் சார்ந்த பட்டிமன்றங்களில் என்னுடைய பேச்சு  ஒலிக்கிறது.

ஆசிரியராக கற்றல் குறித்து நீங்கள் செய்கின்ற சிறப்பான வழிமுறைகள் என்ன?
ஆசிரியராகப் பணியாற்றிய பல பெரியோர்களின் வார்த்தைகள், அந்தப் பணியின் பெருமையை எனக்கு உணர்த்தியது. நான் கற்றுக்கொண்ட அனைத்தையும், என் மாணவர்களுக்கு வாழ்க்கை நடையில் ஒப்பிட்டு கற்றுக் கொடுக்கிறேன். அவர்களுக்கு முதலில் ஒழுக்க நெறிகளை சொல்லித் தருகிறேன்.

என் மாணவர்கள் வகுப்பில் மட்டும் சிறந்து விளங்காமல், மற்ற செயல்களிலும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், அவர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டு இயல், இசை, நாடகம் போன்றவற்றிலும், தமிழ் சார்ந்த மேடைகளிலும் அவர்களை ஈடுபட வைக்கிறேன்.

குடும்பத்தினர் ஆதரவு எப்படி உள்ளது?
நான் இந்த நிலையை அடைந்ததற்கு முதல் காரணம் என்னுடைய குடும்பத்தினர்தான். ‘சாதனை செய்யப்போகிறேன்’ என்று கூறினால், குடும்பத்தினருக்கு முதலில் பயம்தான் எழும். ஆகவே திறமையால் வென்று, நம் மீது நம்பிக்கை வரச் செய்ய வேண்டும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் என்னால் சாதிக்கவும், என்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வரவும் முடிந்தது.

அடுத்து நீங்கள் நிகழ்த்த இருக்கும் சாதனை குறித்து...
எனது சாதனைகள் அனைத்தும் திருக்குறளை முதன்மை படுத்தியவை. தமிழ் மொழியின் கண்ணோட்டத்தில் தான் என்னுடைய பங்களிப்பு இருக்கும். அடுத்த சாதனைக்கான பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறேன்.

சமுதாயத்திற்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
சமுதாயத்தில் நன்மை, தீமை இரண்டும் இருக்கும். அதில் நேர்மறையான விஷயங்களை தேர்வு செய்வதில் மட்டுமே நம்முடைய வளர்ச்சியின் பங்கு அமையும். அனைவரும் ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். பெற்றோர்களின் வழிகாட்டுதல் படி நடக்கும் மனப்பக்குவம் அனைவரிடத்திலும் வர வேண்டும். நம் வாழ்க்கைக்குத் தேவையான நல்லவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து பயணித்தால் இலக்கை எளிதாக அடையலாம். 

Next Story