முன்னேறுவதற்கு படிப்பு தடை இல்லை- தீபா
2012-ம் ஆண்டு குழந்தைகள் விளையாட்டு பள்ளியை ஆரம்பித்தேன். அது வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியதும், மேலும் இரண்டு பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறேன். அனைத்து பள்ளிகளும் பல வளர்ச்சிகளை அடைந்து இயங்கி வருகின்றன.
சென்னை ராயப்பேட்டையில் வசிக்கும் தீபா, பத்தாவது மட்டுமே படித்தவர். ‘படிக்கவில்லை என்பது சாதிப்பதற்கு தடையில்லை’ என்பதை நிரூபித்திருக்கிறார். வீட்டிலிருந்தே வருமானத்தைப் பெருக்கி, வாழ்வில் மேம்படுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த தீபா, வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வகையில் ‘டே கேர் சென்டரை’ முதலில் தொடங்கினார்.
தனது உழைப்பின் பலனாக, தொடர்ந்து மழலையர் விளையாட்டுப் பள்ளியையும், பெண்கள் தங்கும் விடுதியையும் தொடங்கி நடத்துகிறார். தன்னால் இயன்ற வகையில் பெண்களின் நலனுக்காக உதவி வருகிறார்.
அவருடன் உரையாடியதில் இருந்து...
நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எனது இரண்டு குழந்தைகளும் பள்ளியில் படித்து வருகிறார்கள். நான் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால், இன்று சொந்தமாக குழந்தைகள் விளையாட்டு பள்ளி மற்றும் பெண்கள் தங்கும் விடுதி நடத்தி வருகிறேன்.
2012-ம் ஆண்டு குழந்தைகள் விளையாட்டு பள்ளியை ஆரம்பித்தேன். அது வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியதும், மேலும் இரண்டு பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறேன். அனைத்து பள்ளிகளும் பல வளர்ச்சிகளை அடைந்து இயங்கி வருகின்றன.
அதன் பிறகு உழைக்கும் மகளிருக்கான தங்கும் விடுதியை 2017-ம் ஆண்டு ஆரம்பித்தேன். அது படிப்படியாக விரிவடைந்து இன்று மூன்று இடங்களில் நடத்தி வருகிறேன்.
பகல் நேர குழந்தைகள் காப்பகத்தை தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?
நான் வேலைக்கு சென்ற காலங்களில், எனது குழந்தைகளை வீட்டில் விட்டுச் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. என்னுடைய வீட்டிற்கு வந்து, குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கு ஆள் தேடினேன். ஆனால், அவர்கள் என்னை போல் என் குழந்தைகளை கவனித்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. இதுவே என்னை குழந்தைகள் காப்பகம் தொடங்குவதற்கு தூண்டியது.
குழந்தைகள் விளையாட்டு பள்ளியை ஆரம்பித்தது எப்படி?
பகல் நேர குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி, அது நன்றாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில், குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் கல்வியையும் கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற
எண்ணம் வந்தது. இதற்கு பெற்றோர்களின் ஆதரவு இருந்ததால், குழந்தைகள் விளையாட்டு பள்ளியை ஆரம்பித்தேன். நாளடைவில் மேலும் இரண்டு பள்ளிகளைத் தொடங்கி பெற்றோர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.
பெண்கள் தங்கும் விடுதியை தொடங்கியது பற்றி கூறுங்கள்?
2017-ம் ஆண்டில் பெண்கள் தங்கும் விடுதியை தொடங்கினேன். கொரோனா காலகட்டத்தில் நிறையபேர் விடுதிகளை மூடிய நிலையில், அந்தச் சூழ்நிலையை தாக்குப்பிடித்து இன்று வெற்றிகரமாக மூன்று விடுதிகள் நடத்தி வருகிறேன்.
உங்களின் தொழில்கள் மூலம் பெண்களுக்கு எவ்வாறு உதவி வருகிறீர்கள்?
எனது தொழில்கள் பெண்கள் சார்ந்தே உள்ளதால், அனைத்து பணிகளுக்கும் பெண்களை மட்டுமே அமர்த்தி இருக்கிறேன். இதில் பெரும்பாலானவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள். அவர்களை ஊழியர்களாக கருதாமல், எனது குடும்பத்தில் ஒருவராக பார்த்து, அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். ஒரு நல்ல குடும்பச் சூழலை அவர்களுக்காக உருவாக்கி கொடுத்திருக்
கிறேன்.
உங்களின் லட்சியம் என்ன?
என்னுடைய குழந்தைகள் விளையாட்டு பள்ளிகளை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும், திறன்கள் மேம்பாட்டுக்கும் தேவையானவற்றை செய்ய வேண்டும். முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
Related Tags :
Next Story