அன்பு நிறைந்த குடும்பமே முன்னேற்றத்தின் அடிப்படை - தீபிகா
கல்லூரியில் படித்தபோது, ‘பரியேறும் பெருமாள்' படத்திற்கான படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்தது. அந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் தேர்வு நடந்தபோது நானும் கலந்து கொண்டேன்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் ‘ஐஸ்வர்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தீபிகா. கிராமத்துப் பின்னணியைக் கொண்ட இவர், முயற்சி செய்தால் சினிமாக் கனவுகளை நனவாக்கலாம் எனும் நம்பிக்கையை விதைத்து இருக்கிறார். அவருடன் நடந்த உரையாடல்...
“திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் எனும் கிராமம்தான் என் சொந்த ஊர். ஆடுகள், தோட்டம், தோட்டத்துக்குள் சிறிய வீடு என்று அழகான சூழ்நிலையில் வளர்ந்தேன்.
அப்பா லட்சுமணப்பாண்டி. அம்மா தங்கத்தாய். எனக்கு இரு அக்காக்கள். நான் கடைக்குட்டி. எனக்கும், அக்காக்களுக்கும் இடையே 10 வயது வித்தியாசம். ஆகையால் அவர்கள் என் மீது அம்மாவைப்போலவே அன்பு செலுத்தினார்கள்.
நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது, அக்காக்களுக்கு திருமணம் நடந்தது. அதனால், மாமாக்களும் என்னை குழந்தையாகவே நினைத்து பாசத்துடன் நடத்தினார்கள். இவ்வாறு அன்பு சூழ்ந்த வீட்டில் வளர்ந்தவள் நான்”.
சினிமா மீதான ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது நடனப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என அனைத்து போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டேன். ஒவ்வொரு முறை மேடை ஏறி, கைத்தட்டுக்களை வாங்கும்போதும் அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். அதை அதிகரிக்க வேண்டும், நிறைய பாராட்டுகளை வாங்க வேண்டும் என்ற ஆசை அப்போதே இருந்தது.
மேலும், சிறுவயதில் இருந்தே திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். அதிலும், சின்னத்திரையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். எனக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது, எதேச்சையாக கிடைத்த வாய்ப்புதான் ‘பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்தது.
முதல் திரை வாய்ப்பும், அது அமைத்துக் கொடுத்த பாதையும் பற்றி கூறுங்கள்?
கல்லூரியில் படித்தபோது, ‘பரியேறும் பெருமாள்' படத்திற்கான படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்தது. அந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் தேர்வு நடந்தபோது நானும் கலந்து கொண்டேன்.
பின்னணியில் வரும் சிறு வேடத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் நடிப்பதற்கு அனுமதி கேட்டபோது பெற்றோர் தயங்கினார்கள். வீட்டில் அப்போது
பொருளாதாரச் சிக்கல் இருந்தது. ‘பணத்துக்காக பெண்ணை நடிப்பதற்கு அனுப்பி விட்டார்கள்’ என்று உறவினர்கள் பேசுவார்களோ என யோசித்தார்கள். அவர்களை சமாதானப்படுத்தி அனுமதி வாங்கினேன்.
சினிமா படப்பிடிப்பு என்றால் என்ன? எப்படி படம் எடுக்கிறார்கள்? என்ற புரிதலை ஏற்படுத்தியது, அந்த 25 நாள் படப்பிடிப்பு.
சினிமா கனவுகளுடன் சென்னையில் பயணித்த அனுபவம் எப்படி இருந்தது?
முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பதற்காகத் தான் சென்னைக்கு வந்தேன்.
படித்து கொண்டே வாய்ப்புகளைத் தேடலாம். கிடைத்தால் அதைத் தொடர்ந்து செய்யலாம். இல்லையெனில், சினிமா கனவுகளை ஓரங்கட்டிவிட்டு வேறு பிழைப்பைப் பார்க்கலாம் என்ற முடிவுடன் தான் பயணத்தைத் தொடங்கினேன்.
எங்கிருந்து, எப்படி தொடங்க வேண்டும் என்று தெரியாமல் தவித்தேன். சில தொலைக்காட்சி நிலையங்களில் தொகுப்பாளர் வாய்ப்பு கேட்டு அணுகினேன். குறும்படங்கள், யூடியூப் வீடியோக்கள் என, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டேன்.
எம்.சி.ஏ., கடைசி ஆண்டின் இறுதித் தேர்வு அன்றுதான், தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்டேன். அதன் மூலம் ‘சந்திரகுமாரி' எனும் தொடரில் சிறிய வேடத்தில் நடித்தேன். அதன் பின்பு, கிடைத்த வாய்ப்பே ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா கதாபாத்திரம்.
6 மாதங்கள் மட்டுமே அந்தத் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வி.ஜே. தீபிகா, ஐஸ்வர்யாவாக மக்கள் மனதில் இடம்பெற்றது எப்படி?
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முயற்சி செய்தேன். அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆறு மாதம் கழித்து அதே தொடரில் நடிப்பதற்கு முயற்சி செய்தபோது கிடைத்த வாய்ப்புதான் ஐஸ்வர்யா கதாபாத்திரம். அது என் வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது.
வெளியில் செல்லும்போது ‘நீங்க ஐஸ்வர்யா தானே?' என்று மக்கள் அடையாளம் கண்டு கொள்கின்றனர். அந்தத் தொடரில் குறுகிய காலமே நடித்திருந்தாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
எதிர்காலத் திட்டம் என்ன?
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் வி.ஜே. தீபிகா எனும் பெயரில் யூடியூப் சேனல் தொடங்கினேன். தற்போது அதைக் கவனித்து வருகிறேன். குட்டியாக ஒரு டிரிப் செல்லலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன்.
Related Tags :
Next Story