எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும்- நடிகை சவுமியா


எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும்- நடிகை சவுமியா
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 23 Oct 2021 11:38 AM GMT)

சமைப்பது பிடிக்கும். ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவி வருகிறேன். நேரம் கிடைக்கும்போது துணிகள் தைப்பதிலும், எம்பிராய்டரி போடுவதிலும் ஈடுபடுவேன். திறமைக்கேற்றபடி எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என நினைப்பது என் சுபாவம்.

டிப்பு ஒரு பக்கம், குத்துச்சண்டை மற்றொரு பக்கம் என கலக்கிக் கொண்டிருக்கிறார் சவுமியா. அவரிடம் பேசினோம்...

* உங்களைப் பற்றி?

சொந்த ஊர் கேரளா. அப்பா சசிக்கு டிரைவர் பணி. சொந்தமாக சினிமாவுக்கான புரொடக்‌ஷன் வேன் மற்றும் கார் வைத்திருந்தார். அம்மா பிரசன்னா. கணவர், குடும்பம், குழந்தைகள் என சுற்றிச் சுழல்பவர். அப்பா சினிமா பின்னணியில் வேலை பார்த்த காரணத்தால் எனக்குச் சிறுவயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. அப்போதே நடிக்கவும் தொடங்கினேன்.

* கிடைத்த வாய்ப்புகள் பற்றி?

ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தேன். சேரன் இயக்கிய ‘தேசியகீதம்' படத்தில் வாய்ப்பு கிடைத்து திரைத்துறைக்குள் வந்தேன். அதன்பிறகு ‘சித்தி', ‘அண்ணாமலை', ‘செல்வி' என நடிகை ராதிகாவின் நிறுவனம் தயாரித்தவை, மற்றும் பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்', பாலசந்தரின் இயக்கத்தில் ‘ஜன்னல்' உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தேன். 

அந்த வகையில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளேன். பாலசந்தர், பாலுமகேந்திரா போன்றவர்களின் இயக்கத்தில் நடித்திருப்பது பெருமிதமாக இருக்கிறது.

* மீண்டும் திரைப்பட வாய்ப்பு...?

‘திருப்பாச்சி' படத்தில் நடித்தேன். நடிப்போடு படிப்பும் தொடர்ந்தது. பி.பி.ஏ. முடித்த பின்பு ஃபேஷன் டிசைனிங் முடித்தேன்.

* நடிப்புக்கு இடைவெளி விட்டது ஏன்?

திருமணம், இரண்டு குழந்தைகள் என குடும்பப் பொறுப்புகளில் மூழ்கிவிட்டேன். காலப்போக்கில் திருமண பந்தத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் கணவரைப் பிரிந்து குழந்தைகளோடு வசிக்கிற சூழல் ஏற்பட்டது. அந்த மன உளைச்சலில் இருந்து என்னை நானே மீட்டு எடுப்பதற்கு என்ன செய்யலாம் என யோசித்தேன்.

எனக்கு பள்ளிப் பருவத்தின்போது விளையாட்டுகளில் ஆர்வம் இருந்தது. கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொண்டேன். அதேபோல் என் பிள்ளைகளையும் படிப்போடு விளையாட்டிலும் திறமைசாலிகளாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி அது லட்சியமாக மாறியது.



அதற்கான முயற்சியில் இறங்கி பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது என் ஈடுபாட்டைப் பார்த்து குத்துச்சண்டை பயிற்சியாளர், போட்டிகளில் பங்கேற்பதற்கு என்னை ஊக்குவித்தார். ‘ஹெவி வெயிட்' சாம்பியனாக உருவாகுவதற்கு பயிற்சியளித்தார். மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றேன். 

அடுத்தாக தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தயாரானேன். பயிற்சியின்போது பளுதூக்கி என் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து ஆறு மாத காலம் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. பின்பு ‘ருத்ரதாண்டவம்' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதில் எனது நடிப்புக்கும் வரவேற்பு கிடைத்தது. 

‘டப்பாங்குத்து' என்ற படத்தில் நடித்துள்ளேன். விரைவில் அந்தப் படம் வெளியாகும். குத்துச்சண்டையில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சியும் தொடர்கிறது. ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்கவும் தயாராகி வருகிறேன்.

* மனதுக்குப் பிடித்தவை?

சமைப்பது பிடிக்கும். ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவி வருகிறேன். நேரம் கிடைக்கும்போது துணிகள் தைப்பதிலும், எம்பிராய்டரி போடுவதிலும் ஈடுபடுவேன். திறமைக்கேற்றபடி எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என நினைப்பது என் சுபாவம். 

Next Story