பல்துறை பயணக் கனவை நனவாக்கிய ரேச்சல்


பல்துறை பயணக் கனவை நனவாக்கிய ரேச்சல்
x
தினத்தந்தி 1 Nov 2021 5:30 AM GMT (Updated: 30 Oct 2021 10:57 AM GMT)

மருத்துவப் பணி மகத்தானது. ஆயுர்வேத மருத்துவம் பற்றி பேசிக்கொண்டே இருப்பதும், அது சம்பந்தமான விழிப்புணர்வை உருவாக்குவதும் மனதுக்குப் பிடித்தமான விஷயங்கள். அது இந்தக் காலத்தில் மக்களுக்கு அவசியமானதும் கூட.

ருத்துவராக மக்கள் நல சேவை செய்து கொண்டே, கலை உலகிலும் தனக்கென தனிப் பாதையை உருவாக்கி அதில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார் ரேச்சல். அவரது பேட்டி..



உங்களைப் பற்றி?
பிறந்தது வேலூரில். அப்பா பிலிப், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அம்மா தேவி, அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். 

நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போது வந்தது?
சிறு வயதிலேயே மனதுக்குள் நடிக்கும் ஆசை நுழைந்துவிட்டது. சிறுபிள்ளைகளிடம், ‘எதிர்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்?', ‘என்ன வேலைக்குப் போவாய்?' என்றெல்லாம் கேட்பார்கள் அல்லவா? அவ்வாறு என்னிடம் கேட்டபோது ‘நடிகையாக வேண்டும்' என்று சொல்லியது நினைவிருக்கிறது. 

அப்போதே கர்நாடக இசையும், பரத நாட்டியமும் கற்றுக்கொண்டேன். அதன் தாக்கத்தால் வீட்டிலும் ஆட்டம், பாட்டு என்றே பெரும்பாலான பொழுதுகள் கழியும். 12-ம் வகுப்பு படிக்கும்வரை கலை ஆர்வமும், நடிகையாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனாலும் அதற்கான வாய்ப்புகளை பெறுவது எப்படி? என தெரியாமல் இருந்தேன். 

எனவே, ‘நடிப்புக்கான வாய்ப்பு எப்போது கிடைக்கிறதோ கிடைக்கட்டும். இப்போதைக்கு படிப்பில் கவனம் செலுத்துவோம்' என முடிவு செய்தேன்.

படிப்பைப் பொறுத்தவரை மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இயற்கை மருத்துவத்தின் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். எனவே மவுலிக 
சித்தாந்த முறையில் உருவாக்கப்பட்ட மூன்று வருட ஆயுர்வேத படிப்பைப் படித்து முடித்தேன்.

கலை உலகப் பயணம் பற்றி சொல்லுங்கள்?
படிப்பை முடித்த பின்பு திருமண வாழ்க்கையும் கைகூடியது. கணவர் ஜாக்ஸனுடன் சென்னைக்கு வந்தேன். சிறிய அளவில் ஆயுர்வேத மருத்துவமனை ஆரம்பித்தேன். அதனோடு தொலைக்காட்சிகளில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துச் சொல்வதற்கும் ஏதேனும் வாய்ப்புகள் கிடைக்குமா என முயற்சித்தேன். 

முன்னணி தொலைக்காட்சிகளில் சில வாய்ப்புகள் கிடைத்தது.
அதன் மூலம், நடிப்பதற்கான ஆர்வம் மீண்டும் எட்டிப் பார்த்தது. அதற்குத் தொடக்கமாக ‘மாடலிங்'கில் ஈடுபடலாம் என நினைத்தேன். எனக்கு அந்தத் துறை சரியாக இருக்குமா? என்ற குழப்பம் ஏற்பட்டது. ‘குழம்புவதற்கு அவசியமில்லை, முயற்சிக்கலாம்' என்ற உத்வேகம் பிறக்கும்படி சில சம்பவங்கள் நடந்தன. 

முயற்சியில் இறங்கினேன். கணவர் ஊக்குவித்தார். 2015-ம் ஆண்டு காலண்டர் ஒன்றுக்காக மாடலிங் செய்தேன். அதன் வழியாக அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. அப்போது, ‘இப்படை வெல்லும்' எனும் படத்தில் நடிப்பதற்காக நடிகர்-நடிகை தேர்வு செய்யும் தகவலை முகநூல் மூலம் அறிந்து கலந்து கொண்டேன். தேர்வானேன். உதயநிதி கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் வில்லனுக்கு காதலியாக நடித்தேன். இவ்வாறு தான் எனது திரையுலகப் பயணம் துவங்கியது.  



அடுத்தடுத்த வாய்ப்புகள், நடித்த படங்கள் பற்றி?
‘பூவரசம் பீப்பி', ‘சில்லுக் கருப்பட்டி', ‘ஏலே' போன்ற படங்களை இயக்கிய பெண் இயக்குநர் ஹலிதா சமீமின் ‘மின்மினி' என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்ததாக ‘ஆட்டோ சங்கர்' எனும் இணையத் தொடரில் நடித்தேன். 

சமீபத்தில் வெளிவந்த ‘துக்ளக் தர்பார்' படத்தில் குப்பத்தில் வசிக்கும் பெண்ணாக நடித்திருந்தேன். அந்தக் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்ததாக விஜய்சேதுபதி உட்பட படக்குழுவினர் பாராட்டினார்கள். 

அடுத்ததாக ‘கடைசி விவசாயி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படம் வெளிவரும்போது என் நடிப்பு பெரிதாகப் பேசப்படும் என்று நம்புகிறேன். அடுத்தடுத்த வாய்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன.

திரைப்படங்களில் நடிப்பதால் மருத்துவப் பணிக்கு நேரம் ஒதுக்க முடிகிறதா?
மருத்துவப் பணி மகத்தானது. ஆயுர்வேத மருத்துவம் பற்றி பேசிக்கொண்டே இருப்பதும், அது சம்பந்தமான விழிப்புணர்வை உருவாக்குவதும்  மனதுக்குப் பிடித்தமான விஷயங்கள்.

அது இந்தக் காலத்தில் மக்களுக்கு அவசியமானதும் கூட. அதனால், மருத்துவப் பணியையும் தொடர்கிறேன். ‘சைக்கோ தெரபி' படிப்பை முடித்து மருத்துவத்தோடு மனநல ஆலோசனைகளும் வழங்கி வருகிறேன்.

மருத்துவராக பெண்களுக்குச் சொல்ல விரும்புவது?
ஒரு நாளுக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்; குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும் என வரையறுக்கப்பட்ட உணவு முறை நம்மிடையே இருக்கிறது. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உழைக்கிறார்கள். அதைப்பொறுத்து ஒவ்வொருவருக்கும் உணவின் தேவை மாறுபடும். வேலையின் தன்மை மற்றும் தேவைக்கேற்ப சாப்பிடுவதே ஆரோக்கியமானது.

ஆசைப்படும்போது சாப்பிடுவதைத் தவிர்த்து, பசித்தால் மட்டுமே சாப்பிடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் உறுதியாக இருக்க வேண்டும். எனது இந்த அறிவுரை பெண்களுக்கானது மட்டுமில்லை.  எல்லோருக்கும் பொதுவானது. ஆயுர்வேத மருத்துவம் வலியுறுத்துவதும் இதைத்தான்.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?
நல்ல கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற வேண்டும். மருத்துவப் பணியில் எனது சேவை நிறையப் பேரை சென்றடைய வேண்டும். திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மேம்பாட்டுக்காக தொண்டு நிறுவனம் உருவாக்கும் எண்ணமும் இருக்கிறது.


Next Story