பொழுதுபோக்கு

முத்தமிழ் வளர்க்கும் மணிமொழி + "||" + manimozhi: actor, folk dancer, lyricist...

முத்தமிழ் வளர்க்கும் மணிமொழி

முத்தமிழ் வளர்க்கும் மணிமொழி
இயல், இசை, நாடகம் மூலமாக தமிழ்த்தொண்டு ஆற்றுவதே என் வாழ்நாள் லட்சியம். உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழியின் அருமை இளைய தலைமுறைக்குத் தெரியவில்லை என்பது எனது ஆதங்கம். என் பேச்சு, கவிதை, பாடல் போன்றவற்றின் மூலம் தமிழை அவர்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறேன்.
பேச்சு, நடிப்பு, கரகாட்டக் கலை, திரைப்படப் பாடல்கள் எழுதுவது, ஓவியம் வரைவது, தடகள விளையாட்டு என்று பல துறையிலும் தடம்பதித்து வருகிறார் மணிமொழி கன்னியப்பன்.

இவர் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகேயுள்ள சிறிய தென்னல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கன்னியப்பன் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு அரங்க உதவியாளராகப் பணி செய்கிறார். தாய் விசாலாட்சி குடும்பத் தலைவி. மணிமொழிக்கு இரண்டு சகோதரர்கள்.
16 வயதான மணிமொழி அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவர். இளைய சமுதாயத்திடம் தமிழை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது பேட்டி..

தமிழ் மொழி மீது பற்று ஏற்பட்டது எப்படி?
சிறுவயதில் இருந்தே இயல்பாகவே எனக்கு தமிழ் மொழி மீது ஆர்வம் இருந்தது. ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போதே நூறு திருமந்திரங்களைச் சொல்லி பரிசு வாங்கினேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி நாடகத்தில் நடிக்கச் சொன்னார்கள். என் நடிப்பைப் பார்த்து, ஆசிரியர்கள் வெகுவாகப் பாராட்டி, மற்ற மாணவர்களுக்கும் பயிற்சியளிக்கச் சொன்னார்கள். 

ஜாஸ்மின் என்ற ஆசிரியைதான் தமிழ் வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசுவது எப்படி? என எனக்கு சொல்லிக்கொடுத்தார். அதைப் பின்பற்றி ஏராளமான பேச்சுப் போட்டிகளிலும், தனி நடிப்புப் போட்டிகளிலும் பங்கேற்று நிறைய பரிசுகள் பெற்றேன். நவரசத்தையும் நடிப்பில் காண்பிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. கண்ணாடியைப் பார்த்து நடித்துப் பழகினேன். ஏழாவது படிக்கும்போது கவிதை எழுதத் தொடங்கினேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 96 மதிப்பெண்களைப் பெற்றேன்.

கரகாட்டக் கலையை எப்படி கற்றீர்கள்? அதில் நீங்கள் செய்துள்ள சாதனைகள் என்ன?
ஆறாம் வகுப்பு படித்தபோது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக எங்கள் வீட்டை தண்ணீர் சூழ்ந்தது. எனது ஆசிரியர் ஹேமலதா, என்னை அவரது வீட்டில் தங்க வைத்தார். அப்போது மின்சாரம் தடைப்பட்டு எதுவுமே செய்ய முடியாத சூழலில் இருந்தபோது, அவர் எனக்கு கரகாட்டம் ஆடக் கற்றுக் கொடுத்தார். 

அவர் மூலமாக அடிப்படை விஷயங்கள் முழுவதையும் கற்றுக்கொண்ட நான், எனது ஆர்வத்தினால் தீவிரமான பயிற்சி செய்து அதை மேம்படுத்திக் கொண்டேன். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கரகம் ஆடினேன். பானை மீது நின்று ஆடுவது, கரகம் கீழே விழாமல் கல், கைக்குட்டை போன்றவற்றை வாயால் எடுப்பது போன்றவற்றை ஒளிபரப்பினார்கள்.நீங்கள் பாடலாசிரியர் ஆனது எப்படி?
ஏழாம் வகுப்பு முதலே கவிதை எழுதத் தொடங்கிய நான், எட்டாம் வகுப்பு படித்தபோது அம்மாவைப் பற்றி ஒரு பாடல் எழுதினேன். ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, தனியார் தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சியில் கலக்கிய சிறப்புக் குழந்தை தேஜுவின் அபார குரல் வளத்தையும், ஆர்வத்தையும் பாராட்டி பாடலாக எழுதினேன். 

அந்தப் பாடலை, அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் இசையமைப்பாளர் ஷங்கர் மகாதேவன் இசையமைத்து, அவருடன் சேர்ந்து பாடகர்கள் சித்ரா, எஸ்.பி.பி. சரண், கல்பனா, தேஜு ஆகியோரும் பாடி ஒளிப்பதிவு செய்தார்கள். அதை அதே நிகழ்ச்சியில் வெளியிட்டதோடு என்னையும், எனது தந்தையையும் நேரில் அழைத்து கவுரவித்தார்கள்.

அதன் பிறகு ‘புதிய தீர்ப்பு’ என்ற படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. விரைவில் வெளிவரவுள்ள அந்தப் படத்தில் ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறேன். அடுத்து இன்னொரு படத்துக்கும் பாடல் எழுதப் போகிறேன்.

உங்களிடம் இருக்கும் மற்ற திறமைகள் பற்றி கூறுங்கள்?
ஓவியம் வரைவது, தடகள விளையாட்டு ஆகியவற்றிலும் எனக்கு ஆர்வம் உண்டு. மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் போட்டிகளில் பங்கேற்று நிறைய பரிசுகளை வாங்கியிருக்கிறேன். ஆயில் பெயிண்டிங், பென்சில் டிராயிங் போன்றவற்றை சிறப்பாகச் செய்வேன். ஒருவரின் உருவத்தையோ அல்லது புகைப்படத்தையோ அப்படியே பிரதியெடுப்பதுபோல் என்னால் வரைய முடியும். நன்றாகப் பாடுவேன், குறிப்பாக பக்திப் பாடல்களை விரும்பிப் பாடுவேன். யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறேன்.

உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பற்றி?
தமிழ் மொழி மீதான எனது ஆர்வத்தைக் கண்டு எனது பள்ளியின் ‘தமிழ்ச் சங்கத் தலைவர்’ பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். மேலும், மாநில அளவில் 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டியில், முதல் பரிசை வென்றதால் கண்ணதாசன் அறக்கட்டளையின் சார்பில் அவரது நினைவு நாளில் ‘கண்ணதாசன் விருது’ வழங்கி கவுரவித்தார்கள்.

உங்கள் லட்சியம் என்ன?
இயல், இசை, நாடகம் மூலமாக தமிழ்த்தொண்டு ஆற்றுவதே என் வாழ்நாள் லட்சியம். உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழியின் அருமை இளைய தலைமுறைக்குத் தெரியவில்லை என்பது எனது ஆதங்கம். என் பேச்சு, கவிதை, பாடல் போன்றவற்றின் மூலம் தமிழை அவர்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறேன்.

தமிழ் ஆசிரியராகி, மாணவர்கள் நேசிக்கும் வகையில் தமிழைப் போதிக்க விரும்புகிறேன். திரைப்படங்களிலும் அதிக பாடல்களை எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். ஆதி தமிழர்களின் பாரம்பரியக் கலையான கரகாட்டக் கலையை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் பல மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்.


தொடர்புடைய செய்திகள்

1. மலைவாழ் மக்களிடையே மாற்றம் ஏற்படுத்திய மகாலட்சுமி
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் நடந்தன. ஆனால், ஸ்மார்ட்போன் வாங்கும் வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி மாணவர்களின் கல்வியில் தேக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் கல்வியின் மீது கசப்பு வந்துவிடக் கூடாது என எண்ணினேன். எனவே, மீண்டும் மாணவர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை எடுக்கத் தொடங்கினேன்.
2. அழகுக்கு அழகு சேர்க்கும் ‘லைட்-வெயிட்’ மேக்கப்!
முகத்துக்கு அழகு சேர்ப்பவை கண்கள். அவற்றை அழகுபடுத்துவதன் மூலம் மேக்கப் முழுமை பெறும். ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா போன்ற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கண்களின் அழகை அதிகரிக்கலாம்.
3. பேஷன் உலகில் கலக்கும் சந்தியா
சிறு வயதில் என் பள்ளி சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்காக தேர்ந்து எடுக்கப்பட்டேன். அதில் இருந்தே எனக்கு அழகாக ஆடை அணிவது மிகவும் பிடிக்கும். அதுவே நான் ஆடை வடிவமைப்பாளர் துறையை தேர்வு செய்ததற்கு எனக்கு தூண்டுதலாக இருந்தது.
4. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
5. மார்பகம் போற்றுவோம்!
தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கும் பெண்களுக்கு பால் கட்டுதல், வலி ஏற்படுதல், பால் சுரப்பதில் சிக்கல்கள் போன்றவை ஏற்படும். அவர்களை மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் உள்ளது.