வறுமையை வென்ற மேஜிக்


வறுமையை வென்ற மேஜிக்
x
தினத்தந்தி 22 Nov 2021 5:30 AM GMT (Updated: 20 Nov 2021 10:51 AM GMT)

தமிழகத்தில் பெண் மேஜிக் கலைஞர்கள் யாருமே இல்லை. நீ மேஜிக் நன்றாகக் கற்றுக் கொண்டு, தனியாக நிகழ்ச்சி நடத்தினால் கண்டிப்பாக குடும்ப நிலை உயரும். உனது மனமும் மாறும்” என்று கூறி அண்ணன் எனக்கு ‘மேஜிக்’ கற்றுக் கொடுத்தார்.

“வீட்டின் வறுமையைப் போக்கவும், குழந்தைகளைப் படிக்க வைக்கவும் ‘மேஜிக்’ என்ற விஷயத்தைக் கையில் எடுத்தேன். ஆண்கள் மட்டுமே கோலோச்சி வரும் ‘மேஜிக்’ துறையில் உலக சாதனை நிகழ்த்த விரும்புகிறேன்” என்று கூறும் மதுரையைச் சேர்ந்த கவிதா தமிழகத்தின் முதல் ‘பெண் மேஜிக் கலைஞர்’.
அவருடன் பேசியதிலிருந்து...

“நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். திருமணத்துக்குப் பிறகு மூன்று குழந்தைகளுக்குத் தாயானேன். மணவாழ்க்கையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்தேன். மறுபடியும் தாய் வீட்டுக்கே திரும்பினேன். ஊரும்-உறவும் எதிர்மறையாக பேசியதுடன், கேலியும் செய்தது.
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என தையல், அழகுக்கலை போன்றவற்றை படித்தேன். 

சின்னச் சின்ன வேலைகள் கிடைத்தாலும் தயங்காமல் செய்தேன். அவற்றின் மூலம் கிடைக்கும் குறைந்த வருவாயைக் கொண்டு குழந்தைகளை கவனிக்கவோ, குடும்பத்திற்கு கொடுத்து உதவவோ முடியவில்லை. ஒன்றும் புரியாமல் தவித்தபோது, எனது அண்ணன் சங்கர்லால் தான் ஆறுதல் கூறி தேற்றினார். மேஜிக்  நிபுணரான அவர், எனக்கும் மேஜிக் கலையைக் கற்றுத் தந்தார்.

வாழ்க்கைக் கடலில் எப்படியாவது கரையேறத் துடித்துக் கொண்டிருந்த எனக்கு, ‘மேஜிக்’ நல்வாய்ப்பாக அமைந்தது. இன்று என் ‘மேஜிக்’ செய்யும் திறமையால் தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பறந்து கொண்டிருக்கிறேன்” என தான் மேஜிக் துறைக்குள் நுழைந்தது பற்றி கூறினார் கவிதா.



அவர் மேலும் பேசியபோது,

“வாழ்க்கையில் எல்லாமே முடிந்து விட்டது என்ற பயமும், மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது? என்ற திகைப்பும் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. தாய் வீட்டில் இருந்தாலும், அவர்களை சிரமப்படுத்தக்கூடாது என்ற கவலையில் இருந்தேன். “தமிழகத்தில் பெண் மேஜிக் கலைஞர்கள் யாருமே இல்லை. நீ மேஜிக் நன்றாகக் கற்றுக் கொண்டு, தனியாக நிகழ்ச்சி நடத்தினால் கண்டிப்பாக குடும்ப நிலை உயரும். உனது மனமும் மாறும்” என்று கூறி அண்ணன் எனக்கு ‘மேஜிக்’ கற்றுக் கொடுத்தார்.

சிறுவயதில் இருந்து அவரைப் பார்த்து வளர்ந்து இருந்தாலும் ‘மேஜிக்’  கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்ததில்லை. ஆனால் என் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக ‘மேஜிக்’ இருக்கும் என அண்ணன் சொன்னார். அவரின் சொற்களை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆர்வமுடன் ‘மேஜிக்’ கற்றேன்.
எனது முதல் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது. ‘ஒரு பெண் மேடையில் தோன்றி மேஜிக் செய்வார்’ என்றதும், பார்வையாளர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. 

எனக்கும் சற்று பதற்றமாக இருந்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ச்சி நடத்தினேன். ‘தனி ஒருவராக இந்த கூட்டத்தை சமாளித்து விடுவோமா?' என்ற பயம் இருந்தது. ஆனால் மாற்றி, மாற்றி சிரிப்பும், கைதட்டலும் கேட்டதும்தான் மனதுக்கு நிம்மதியாக இருந்தது” என்று கூறும் கவிதா, பிறந்தநாள், திருமணம், கார்ப்பரேட் நிறுவன சந்திப்புகள், ஆலோசனைக் கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ‘மேஜிக்’ செய்து வருகிறார். ஆறு ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கும் இவர் சில சங்கடங்களையும் சந்தித்து இருக்கிறார்.

“மேஜிக் செய்யும்போது மேடையில் தனியாக நின்று பலர் முன்னிலையில் பேசி, பார்வையாளர்களின் கவனம் திசை திரும்பாமல் அவர்களை மேஜிக்கால் மகிழ்விக்க வேண்டும். நானோ சிறுவயது முதலே யாருடனும் அதிகம் பேச மாட்டேன். புடவையைத் தவிர பிற ஆடைகள் அணிந்ததே இல்லை. மேஜிக் நிகழ்ச்சிக்காக பேன்ட், சட்டை, கோட் போட வேண்டும் என்றதும் முதலில் மிகவும் பயந்தேன். அத்தோடு எல்லா நிகழ்ச்சிக்கும் எப்போதும் துணைக்கு மற்றவர்களை அழைத்துச் செல்ல முடியாது. இது போன்ற விஷயங்களால் ஆரம்ப காலத்தில் சிரமப்பட்டேன். என் அண்ணன் தான் நம்பிக்கையூட்டும் விதமாக பேசி அந்தப் பயத்தைப் போக்கினார்.

தற்போது தமிழகம் முழுவதும் ‘மேஜிக்’ நிகழ்ச்சி நடத்தி விட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சிக்காக இலங்கை சென்று வந்தேன். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்ததால் அந்த வாய்ப்பு தள்ளிச் சென்றது” என்பவர் மதுரை முத்து, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட திரைப் பிரபலங்களுடனும் இணைந்து நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்.

“முதல் பெண் மேஜிக் கலைஞர் என்பது பெருமையாக இருந்தாலும், இந்தத் துறையில் நம்பிக்கையைப் பெறுவது மிகக் கடினம். மேடையில் நமது நேரத்தைச் சரியாக நிர்வகிப்பதற்கு தினமும் பயிற்சி செய்ய வேண்டும். ஆண்கள் மட்டுமே கோலோச்சி வரும் மேஜிக் துறையில் உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதே எனது லட்சியம். நான் படிக்காவிட்டாலும், என் ‘மேஜிக்’ திறமையின் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு, எனது பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பைப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் கனவு” என்கிறார் கவிதா. 

Next Story