தேசிய விருது வாங்க வேண்டும் - நடன இயக்குநர் சாந்தி


தேசிய விருது வாங்க வேண்டும் - நடன இயக்குநர் சாந்தி
x
தினத்தந்தி 6 Dec 2021 5:30 AM GMT (Updated: 4 Dec 2021 12:09 PM GMT)

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் 3,000 பாடல்களுக்கு மேல் நடனம் ஆடினேன். ‘மெட்டிஒலி’ தொடரின் பாடல்தான், உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

‘மெட்டி ஒலி’ தொடரின் தொடக்கப் பாடலில் நடனம் ஆடியதன் மூலம், பட்டி தொட்டிஎங்கும் பிரபலமானவர் நடன இயக்குநர் சாந்தி அரவிந்த். தனது 13-வது வயதில் திரைப்படப் பாடல்களுக்குக் குழு நடனம் ஆடத்தொடங்கிய இவர், திறமையாலும், உழைப்பாலும் நடன இயக்குநராக உயர்ந்திருக்கிறார். தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகையாகவும் தடம் பதித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

“நான் சென்னையில்தான் பிறந்தேன். குழந்தையாக இருந்தபோதே எனது தந்தை பிரிந்து சென்று விட்டதால், தாய் சுப்புலட்சுமி, அருகில் உள்ள வீடுகளில் வேலைசெய்து கிடைத்த வருமானத்தில் என்னையும், எனது இரண்டு சகோதரிகளையும் வளர்த்தார். சிறு வயதில் இருந்தே எனக்கு நடனத்தின் மீது ஈடுபாடு இருந்தது. 

முறைப்படி கற்றுக்கொள்ள வசதியில்லை என்பதால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய பாடல்களைப் பார்த்துதான் ஆடக் கற்றுக்கொண்டேன்.
எனது கணவர் அரவிந்த் வித்யாசாகர் வங்கியில் பணிபுரிகிறார். மகள் பவிஷ்யா ஏழாம் வகுப்பும், மகன் தாரக் சாகர் நான்காம் வகுப்பும் படிக்கிறார்கள்.

நடனக் கலைஞராக உங்களின் பயணம் பற்றி?
குடும்பச் சூழ்நிலையின் காரணமாக எனது 13-வது வயதிலேயே நடனமாட வந்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் பல பாடல்களிலும் ஆடினேன். 15 
வயதுக்குப் பிறகு, முறைப்படி நடனம் கற்றுக்கொண்டேன். அதன்பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் 3,000 பாடல்களுக்கு மேல் நடனம் ஆடினேன். ‘மெட்டிஒலி’ தொடரின் பாடல்தான், உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

நடன இயக்குநராக உங்களின் பயண அனுபவங்கள் எப்படி இருந்தன?
பல்வேறு நடன இயக்குநர்களிடமும், உதவி நடன இயக்குநராக பணிபுரிந்தேன். ‘ஆய்த எழுத்து’ படத்தில் இயக்குநர் மணிரத்னம் என்னை நடன இயக்குநராக்கினார். அஜீத், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடன இயக்குநராகப் பணியாற்றினேன்.  எல்லா மொழிகளையும் சேர்த்து மொத்தம் 560 பாடல்களுக்கும், 200 விளம்பரப் படங்களுக்கும் நடன இயக்குநராகப் பணி செய்திருக்கிறேன். ‘உருகுதே மருகுதே’, ‘மியாவ் மியாவ் பூன’ ஆகிய பாடல்கள் எனது நடன இயக்கத்தில் உருவானவைதான். தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘அன்பே வா’ தொடரின் அறிமுகப் பாடல் நான் அமைத்ததுதான்.

சின்னத்திரை நடிகையாக உங்கள் அனுபவம் பற்றி கூறுங்கள்?
குழந்தைகளை கவனிப்பதற்காக ஆறரை ஆண்டுகாலம் இடைவெளி எடுத்திருந்த நான், பின்னர் விளம்பரப் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தேன். அப்போது, மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன் என்னை ‘குலதெய்வம்’ என்ற தொடரில் நடிக்க வைத்தார். அதில் எனக்குத் தாயாக நடித்த நடிகை வடிவுக்கரசி நன்றாக நடிப்பதற்கு சொல்லிக் கொடுத்தார். இப்போது முன்னணி தொலைக்காட்சிகளில் ‘முத்தழகு’, ‘கண்ணானக் கண்ணே’ ஆகிய தொடர்களில் நடித்து வருகிறேன். திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன்.

உங்களின் லட்சியம்?
இந்தியில் சரோஜ்கான் மாஸ்டர்தான் எனது ரோல் மாடல். அவரைப்போல, நடன இயக்குநராக தேசிய விருது வாங்க வேண்டும். திரைப்படங்களில் தாயாகவோ, வில்லியாகவோ நடித்து ‘சிறந்த நடிகைக்கான தேசிய விருது’ வாங்க வேண்டும். 

Next Story