அழகுத் தமிழை ஆடையில் வடிக்கும் அபி நந்தினி


அழகுத் தமிழை ஆடையில் வடிக்கும் அபி நந்தினி
x
தினத்தந்தி 27 Dec 2021 5:30 AM GMT (Updated: 25 Dec 2021 6:03 AM GMT)

எனக்கு தமிழ் மீது அதீத ஆர்வமும், பற்றும் உண்டு. அதனால்தான் எனது முதல் ஆடை வடிவமைப்பிலேயே திருவள்ளுவர், தமிழ்த்தாய், மகரயாழ், சிங்கம், ராணி மங்கம்மாள் போன்ற தமிழின் பெருமைகளை வடிவமைத்தேன்.

முன்னணித் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஆடை ஒப்பனையாளராகத் தனது பணியைத் தொடங்கியவர், சென்னையைச் சேர்ந்த அபி நந்தினி மகேந்திரகுமார்.

படிப்படியாக உயர்ந்து ஆறே ஆண்டுகளில் உடை அலங்காரத்துக்கான தனி ஸ்டூடியோவைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 
தொலைக்காட்சியிலும், திரைத்துறையிலும் ஆடை ஒப்பனையாளராகப் பணி செய்யும் அபி நந்தினி, தனியார் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். அவரது பேட்டி...

“திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள இங்காடு கிராமம் எனது  சொந்த ஊர். நான் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். பேஷன் டிசைனிங் துறையில் பட்டயப் படிப்பை முடித்தேன். சொந்தமாக ஆடை அலங்கார ஸ்டூடியோவை நடத்தி வருகிறேன். 

எனது தந்தை மகேந்திரகுமார் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். தாய் சுமதி எனது இளமைப் பருவத்திலேயே இயற்கை எய்திவிட்டார். எனது சகோதரர் தொழில் முனைவோராக இருக்கிறார்.

ஆடை ஒப்பனையாளராக ஆனது எப்படி?

நான் 11-ம் வகுப்பு படிக்கும்போது சில காரணங்களுக்காக பள்ளிப் படிப்பைப் பாதியிலே கைவிட்டேன்.  பிறகு திறன் மேம்பாட்டுப் பயிற்சியான பேஷன் டிசைனிங் துறையில் பட்டயப் படிப்பை முடித்தேன். பின்னர் முன்னணித் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஆடை ஒப்பனையாளராகப் பணியாற்றினேன். 

அதற்கு பின்பு சென்னையின் முக்கிய ஆடை வடிவமைப்பாளர்களுடன் பணியாற்றித் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, எனது ஸ்டூடியோவைத் தொடங்கினேன். தற்போது நிறைய பிரபலங்களுடன் பணியாற்றி வருகிறேன், கடந்த ஒன்பது ஆண்டுகளில் புதுமுக நடிகர்களுக்கு போர்ட் ஃபோலியோ ஷூட், நாளிதழ்களின் அட்டைப்பட ஷூட் போன்றவற்றில் பணியாற்றி இருக்கிறேன். 

நடிகை ரம்யா கிருஷ்ணன், சாக்‌ஷி, வி.ஜே. ரம்யா, பனிமலர், நட்சத்திரா உள்ளிட்ட பலருடன் பணிபுரிந்திருக்கிறேன்.

தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

எனது சிறுவயதில் என்னுடைய தாத்தா, நான் வரைந்த கிறுக்கல்களை வாங்கிக்கொண்டு, உண்டியல் சேமிப்பிற்காக எனக்கு பணம் தருவார். இதன் மூலம் சிறுமியாக இருக்கும்போதே தொழில் முனைவோராகும் எண்ணம் துளிர்த்தது. 

பள்ளிப்பருவத்தில் வாழ்த்து அட்டைகள், கைவினைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றைத் தயாரித்து எனது நண்பர்களுக்கு விற்பனை செய்திருக்கிறேன். இவ்வாறு ஏற்பட்ட ஆர்வம்தான் ‘நாம் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை உருவாக்கியது. 

மேலும் படிப்பு தடைப்பட்ட காரணத்தால், திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மேற்கொண்டு, அதன் வழியாக முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.உடை அலங்கார ஸ்டூடியோவை எப்படி நடத்துகிறீர்கள்?

2018-ம் ஆண்டு எனது ஸ்டூடியோவைத் தொடங்கினேன். இந்த மூன்று ஆண்டுகளில் நிறைய சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. எனது தந்தை, சகோதரர் மற்றும் ஊழியர்களின் உழைப்பால் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. 

இன்னும் இந்தத் துறையில் பல பரிமாணங்களைக் கற்க வேண்டும்.

ஆடை வடிவமைப்பில் எத்தகைய புதுமைகளை புகுத்தி இருக்கிறீர்கள்?

எனக்கு தமிழ் மீது அதீத ஆர்வமும், பற்றும் உண்டு. அதனால்தான் எனது முதல் ஆடை வடிவமைப்பிலேயே திருவள்ளுவர், தமிழ்த்தாய், மகரயாழ், சிங்கம், ராணி மங்கம்மாள் போன்ற தமிழின் பெருமைகளை வடிவமைத்தேன். 

அது ஆடை வடிவமைப்பில் எனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. மேலும் டிரேப்டு கவுன், ஸ்டார் டஸ்ட் கவுன், 3டி எம்பிராய்டரி போன்ற வடிவமைப்புகளும் செய்கிறேன்.  

திரைத்துறையில் பணியாற்றும் அனுபவங்களைச் சொல்லுங்கள்?

தற்போது மூன்று படங்களில் பணியாற்றி வருகிறேன். முதல் படத்தில் திவ்யா துரைசாமி நாயகியாக நடிக்கும் அறிமுக அணியோடு பணியாற்றுகிறேன். 

அடுத்ததாக இயக்குனர் கவுதம் மேனன் போன்றவர்கள் நடித்துள்ள ‘3:33’ படத்திலும், மூன்றாவதாக மற்றொரு அறிமுகக் குழுவுடனும் பணிபுரிகிறேன்.

கல்லூரி விரிவுரையாளராக உங்களின் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

கவுரவ விரிவுரையாளராக தனியார் பெண்கள் கல்லூரியில் பணிபுரிவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கு மிகவும் பிடித்த வேலையாக உள்ளது. 

அங்குள்ள மாணவிகள் காட்டும் ஆர்வம் என்னை மேலும் மேலும் கற்கத் தூண்டுகிறது. அவர்களிடம் இருந்தும் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன்.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

ஆடை வடிவமைப்பில் எனக்கு உத்வேகமாக இருப்பவர், ஆடை வடிவமைப்பாளர் கிரிஸ்டியன் டியோர். அவர் படைத்த ஆளுமை மற்றும் மரபைப் போல நானும் இத்துறையில் எனது முத்திரையைப் பதிக்க விரும்புகிறேன். ‘பேஷன் ஆடை தொழில்’ சுற்றுச்சூழலை பெருமளவு பாதிக்கும் எனக் கூறுகிறார்கள். 

எனவே சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் ஆடைகளை உருவாக்குகிறேன். எனது தொழிலை மேலும் விரிவு படுத்த வேண்டும். நிறைய ஆய்வு செய்து, சக ஆடை வடிவமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி, மேலும் மேலும் கற்று உயரப்பறக்க ஆசைப்படுகிறேன். எதிர்காலத்தில் உலக சந்தையில் முத்திரையைப் பதிப்பதே எனது முக்கிய குறிக்கோளாகும். 

Next Story