இசையால் இதயம் தொடும் ரேஷ்மி


இசையால் இதயம் தொடும் ரேஷ்மி
x
தினத்தந்தி 21 Feb 2022 5:30 AM GMT (Updated: 19 Feb 2022 11:36 AM GMT)

என்னிடம் பயின்ற குழந்தைகள் பலர் இசைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுபோன்று ஏராளமான பாடகர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

மிழ், மலையாளம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில், 350-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியவர் ரேஷ்மி. கொரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசைக் கலைஞர்களுக்கு, பல மாதங்களாக தொடர்ந்து உதவி வருகிறார். 

சக பாடகருடன் இணைந்து ‘வைரஸ்’ என்ற முகநூல் குழு வாயிலாக, நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தி, அதன் மூலம் திரட்டப்படும் நிதி முழுவதையும், நலிந்த இசைக் கலைஞர்களுக்குக் கொடுக்கிறார். இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி வருகிறார்.

‘ஜே ஜே’ திரைப்படத்தில் ‘உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே’, ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்தில் ‘மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா’, ‘பார்த்தேன் ரசித்தேன்’ திரைப்படத்தில் ‘பார்த்தேன், பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன்’, ‘ஜெமினி’ திரைப்படத்தில் ‘காதல் என்பதா’ உள்ளிட்ட ரேஷ்மி பாடிய பல பாடல்கள் பிரபலமானவை என்பதால், இந்த இசை நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் நிதியளித்து வருகின்றனர்.

அவரிடம் உரையாடியதில் இருந்து..

உங்களைப் பற்றி?
நான் கேரளாவில் உள்ள செங்கன்னூரில் பிறந்தேன். தந்தை ஜார்ஜ் ஆப்ரஹாம் அகில இந்திய வானொலியில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். தாய் சின்னம்மா குடும்பத் தலைவி. உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். நான் சிறு வயது முதலே  பின்னணிப் பாடகியாக இருக்கிறேன். எனக்கு இதிஹாஸ் என்ற மகனும், சங்கமித்ரா  என்ற மகளும் உள்ளனர். 

எந்தெந்த மொழிகளில் பாடியிருக்கிறீர்கள்?
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, ஒடியா, வங்காளம், படுகா, இந்தி உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் 350 திரைப்படப் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளிலும் பாடியிருக்கிறேன்.  மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் பல கச்சேரிகளில் பாடியிருக்கிறேன்.

நலிந்த இசைக் கலைஞர்களுக்கு உதவும் எண்ணம் எப்படி வந்தது?
எனது சக பாடகர், வினோத் வேணுகோபால்  இதற்கான யோசனையைத் தெரிவித்தார். ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த இசைக்கலைஞர்களுக்கு உதவுவதற்காக, முகநூல் பக்கத்தின் மூலம் இசை நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கினோம்.  

ஊரடங்கு மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிந்துவிடும் என்று நினைத்தோம். முகநூல் பக்கத்தில் நேரடி நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டலாம் என்று திட்டமிட்டோம். அதனைத் தொடங்குவதற்கு முன்பு, சென்னை மித்ரா ரோட்டரி கிளப்புடன் கைகோர்த்த நாங்கள், அதன் கணக்கைப் பயன்படுத்தி நிதி திரட்டி, இசைக் கலைஞர்களுக்கு உதவினோம்.

இதுவரை 150-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுக்கு உதவியிருக்கிறோம். மேலும், நலிந்த இசைக் கலைஞர்களுக்கு மாதாமாதம் பணமாகவோ அல்லது மளிகைப் பொருட்களாகவோ தொடர்ந்து வழங்கி வருகிறோம். அது மட்டுமின்றி பல இசைக் கலைஞர்களின் குடும்பத்துக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருவதோடு, குழந்தைகளுக்கான பள்ளி, கல்லூரிக் கட்டணங்களையும் செலுத்தி வருகிறோம். 

நீங்கள் பாடியவற்றிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்? 
நான் பாடியதிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, ‘ஆட்டோகிராப்’ படத்தில் இடம்பெற்ற ‘மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா’ என்ற பாடல்தான். அந்த பாட்டில் நான் பாடிய மலையாள வரிகளை எழுதியதும் நான்தான். இதில்  எனக்கு மிகவும் சந்தோஷம்.  அதேபோல் ‘ஜே ஜே’  படத்தில் நான் பாடிய ‘உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே’ என்ற பாடல் இங்கும், வெளிநாடுகளிலும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக நடிகர் அஜித் நடித்த ‘திருப்பதி’ படத்தில் ‘கீரைவிதைப்போம் வாடா கோமாளி’ எனும் பாட்டில் குரலை மாற்றிப் பாடியது புது அனுபவமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய முதல் பாடல் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடன் இணைந்து ‘ஜேம்ஸ்பாண்டு’ என்ற திரைப்படத்தில் பாடிய ‘வெண்ணிலா எதுவும் பேசாமலே’ பாடல் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இவை மட்டுமின்றி நான் பாடிய அனைத்து பாடல்களுமே எனக்கு கிடைத்த பொக்கிஷங்களாகவே நினைக்கிறேன்.

உங்களின் லட்சியம் என்ன?
தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த இசைப் போட்டி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்தேன். இப்பொழுது பிள்ளைகளுக்கு இசை வகுப்புகளை எடுத்து வருகிறேன். என்னிடம் பயின்ற குழந்தைகள் பலர் இசைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  அதுபோன்று ஏராளமான பாடகர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் என்னென்ன?
‘ஆட்டோகிராப்’ படத்தில் பாடியதற்காக, கண்ணதாசன் விருது, அஜந்தா விருது, சோனியா காந்தி விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறேன். தற்போது ரோட்டரி சங்கத்தின் ‘ஐ சென்னை’  விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். 

Next Story