குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும் - பிரனிக்கா


குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும் - பிரனிக்கா
x
தினத்தந்தி 28 Feb 2022 5:30 AM GMT (Updated: 2022-02-26T16:08:41+05:30)

வாழ்க்கையில் நமக்கான பாதையும், குறிக்கோளும் சரியாக இருந்தால், யார் சொல்வதையும் காதில் வாங்காமல் குறிக்கோளை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரனிக்கா. 16 வயதில் விளையாட்டாக தனது நடிப்பை மொபைல் செயலியில் பதிவிட்டார். அது எதிர்பாராத விதமாக மக்களின் மத்தியில் மிகுந்த ஆதரவைப் பெற்றது. அதன் மூலம் குறும்படங்கள், தொலைகாட்சி தொடர்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார். கனா காணும் காலங்கள்-2, பாவம் கணேசன் போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானார். பல்வேறு இடையூறுகள், சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக பயணித்து வருவது குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

நடிப்புத் துறைக்குள் வந்ததைப் பற்றி கூறுங்கள்?
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோ, நினைப்போ எனக்கு இருந்ததில்லை. நான் சாதாரணமாக பதிவிட்ட வீடியோ பதிவுகள் வரவேற்பை பெற ஆரம்பித்தவுடன் நடந்ததுதான் இவையெல்லாம். அதன்பிறகு எனக்கான பாதையைத் தேர்வு செய்து பயணிக்க ஆரம்பித்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடிக்கத் தொடங்கினேன். இந்தப் பயணத்தின்பொழுது நான் சந்தித்த எதிர்ப்புகள், விமர்சனங்கள் ஏராளம்.

எல்லா காலகட்டத்திலும் பக்கபலமாய் நின்று என்னை ஊக்கப்படுத்தியவர் என் அம்மாதான். என்னைச் சுற்றி எழுந்த விமர்சனங்களைத் துடைத்தெறிந்து, என்னை ஆளாக்கியவர். நானும், என் அம்மாவும் காணாத உலகை, என் தங்கை காண வேண்டும் என்பதே என் லட்சியம்.

2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நான் நடித்த இருபதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் வெளியானது. இருந்தும் எனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தபோது, திடீரென ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. எனக்கான அங்கீகாரம் அங்கு ஆரம்பித்தது. அதன் மூலம் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது 2 படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன். இன்னும் சில வாய்ப்புகள் கைவசம் உள்ளன. தமிழ்நாடு, கேரள அளவில் சிறந்த மியூசர்க்கான விருது 2018-2019-ம் ஆண்டில் கிடைத்தது.

உங்கள் அனுபவத்தில் சொல்ல விரும்புவது என்ன?
வாழ்க்கையில் நமக்கான பாதையும், குறிக்கோளும் சரியாக இருந்தால், யார் சொல்வதையும் காதில் வாங்காமல் குறிக்கோளை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். இன்று உங்களை கைநீட்டி பேசுபவர்கள், நாளை கைதட்டி கொண்டாடும் தூரம் தொலைவில் இல்லை. அதே போல் வாழ்க்கைக்கு நம்பிக்கை தேவைதான், ஆனால் யாரை நம்புகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

தாயின் துணையும், தைரியமும் கைவசம் கொண்டால் வானையும் அளக்கலாம் என்பதற்கு பிரனிக்கா உதாரணமாக திகழ்கிறார். 

Next Story