பூத கணங்கள் வில்வ மரங்களாக மாறி வழிபட்ட வில்வநாதீஸ்வரர்
கடலூர் வில்வநாதீஸ்வரர் கோவிலில் வந்து வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
கடலூர் வில்வநகர் என்கிற வில்வராய நத்தத்தில் பழமைவாய்ந்த வில்வநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பகுதி முழுவதும் வில்வ மரங்கள் நிறைந்து பெரிய காடாக காட்சி அளித்ததால், 'வில்வ வனம்' என்று அழைக்கப்பட்டது. இங்கு சிவபெருமான், அருவுருவ லிங்க வடிவாக அருள்பாலித்து வருவதால், அவர் வில்வனநாதர், வில்வாரண்ய ஈசன், வில்வாரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
முன்பு ஒரு சமயம் கயிலாயத்தில் பூத கணத்தவர் ஆயிரம் பேர், சிவஞான தெளிவை உணர வேண்டி சிவபெருமானிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். சிவபெருமானும், அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களுக்கு ஞான உபதேசம் செய்ய முடிவு செய்தார். பின்னர் அந்த பூத கணங்களிடம், "நீங்கள் ஆயிரம் பேரும் புனித பூமியாம் புண்ணிய பாரதத்திற்குச் செல்லுங்கள். அங்கு தென் கோடியில் உள்ள கெடிலம், பெண்ணையாற்றின் இடையே உள்ள தலத்தில், 2 சுவைகளை உணர்த்தும் அடையாளமாக 2 மரங்கள் அமைந்துள்ளன. ஒன்று கசப்பை உணர்த்தும் வில்வம், மற்றொன்று இனிப்பை உணர்த்தும் மாமரம். இந்த இரட்டை விருட்சம் அமைந்துள்ள நதிக்கரையில், ஏற்கனவே சுயம்புவாக நான் எழுந்தருளி உள்ளேன். அகத்தியர் அங்கு வந்து நாள்தோறும் எம்மை பூஜிப்பது வழக்கம். அந்த இடத்தில் நீங்கள் கூடி என்னை நினைத்து பூஜை செய்து தவம் இருங்கள். நான் உரிய காலத்தில் அங்கு நேரடியாக எழுந்தருளி அனைவருக்கும் சிவஞான தெளிவை புகட்டுகிறேன்" என்றார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த பூத கணத்தவர் ஆயிரம் பேரும், சிவபெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு பூலோகம் நோக்கி வந்தனர். தமிழ்நாட்டை அடைந்து பெருமான் கூறிய அடையாளத்தை மனதில் கொண்டு மா மரம், வில்வ மரம் இணைந்துள்ள திருத்தலத்தை தேடி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அகத்தியரை அவர்கள் சந்தித்து வணங்கினர். அவர்களை ஆசீர்வதித்த அகத்தியர் வந்த விவரத்தை கேட்டறிந்தார். அவர்களும் உண்மையை அவரிடம் உரைத்தனர்.
அதற்கு அகத்தியர், "நான் அங்கு தான் செல்கிறேன். நீங்கள் என்னுடன் வாருங்கள்" என்று அவர்களை தன்னுடன் அழைத்து வந்து மா, வில்வம் விருட்சத்திற்கிடையே எழுந்தருளி உள்ள சிவனை காட்டினார். அவர்கள் முன்பு அகத்தியர் சிவ வழிபாடு மற்றும் பூஜைகளை முடித்து விட்டு அவர்களை ஆசீர்வதித்து பொதிகை மலையை நோக்கி புறப்பட்டார்.
பின்னர் பூத கணத்தவர்கள் அனைவரும் அங்கேயே தங்கி புனித நீராடி முறையான சிவ வழிபாடுகளை செய்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் செய்தனர். அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் அவர்களுக்கு நேரடியாக காட்சி அளித்தார். தம்மை வணங்கிய ஆயிரம் பேருக்கும், சிவபெருமான் சிவஞான தெளிவை உபதேசித்தார். தெளிவு பெற்ற ஆயிரம் பேரும் பெருமானுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து தாங்கள் இவ்வுலகிலேயே சிவனை தரிசித்து ஒரு யுக காலம் தவமிருக்க விரும்பினர். அதன் மூலம் சிவானந்த பேறு பெற விரும்பினர்.
இந்த மண் மீது இறைவனை பூஜித்தே சிவ முக்தி அடையலாம் என்று எண்ணி அவர்கள் இவ்வாறு கேட்டனர். அப்போது ஒரு வேண்டுகோளையும் அவர்கள் வைத்தனர். அதாவது, 'தாங்கள் தான் சிவனுக்கு அர்ச்சனை செய்வோம்' என்றனர். இதற்காக வில்வ மரங்களாக அவர்கள் மாறி, இங்கேயே இருந்து காலந்தோறும் வில்வ இலையால் அர்ச்சனை செய்து மகிழ்ந்து பேறு பெற விரும்பினர். அவர்கள் எண்ணப்படியே அனைவரும் வில்வ மரமாக மாறிட சிவபெருமான் அருள்பாலித்தார். பூதகணங்கள் ஆயிரம் பேரும் ஆயிரம் வில்வ விருட்சங்களாக இங்கு அடர்ந்து இருந்ததால், இந்த இடம் 'வில்வாரண்யம்' என பெயர் பெற்றது.
தங்கள் வில்வ இலைகளை தாங்களே உதிர்த்து எடுத்துக்கொண்டு, சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து மகிழ்ந்தனர். பின்னர் வில்வ விருட்சங்களாக மாறி தவம் செய்தனர். இவ்வாறு புகழ் பெற்ற தலம் தான் வில்வநாதீஸ்வரர் கோவில்.
கெடிலம், தென்பெண்ணையாறு இடையே இக்கோவில் உள்ளது. கிழக்கு திசை நோக்கிய ஒரு திருச்சுற்றுடன் அமைந்துள்ளது. இக்கோவிலின் பிரதான வாசலாக தெற்கு கோபுர வாசலை தற்போது பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வழியாக உள்ளே செல்லும் போது திரிபுரசுந்தரியை தரிசனம் செய்யலாம். கோவிலின் கிழக்குப் பகுதியில் இருந்து வழிபாடு செய்ய நாம் செல்லும் போது, முதலில் பலி பீடமும், அதையடுத்து கொடி மரமும், அதையடுத்து நந்திதேவர் சன்னிதியும் உள்ளது. நந்தியை வணங்கி சென்றால் கோவில் கருவறை முன் உள்ள மண்டபத்தை அடையலாம். அந்த மண்டபத்தில் மூலஸ்தான கருவறையின் வலது புறம் விநாயகர், முருகர் சன்னிதிகள் உள்ளன. அதை தாண்டி கருவறையில் வில்வநாதீஸ்வரர் வீற்றிருக்கிறார்.
இவரது சன்னிதி முன்புற மண்டபத்தின் மேற்கு பகுதியில் ராகு, கேது கிரகண தோஷத்தில் இருந்து விடுபடும் நிலையை சித்தரிக்கும் அற்புத சிற்பம் அமையப் பெற்றுள்ளது. திரிபுரசுந்தரி சன்னிதிக்கு இடது புறம் தெற்கு நோக்கி துர்க்கையம்மனை காண முடியும். கன்னி மூலையில் விநாயகர் சன்னிதி கிழக்கு நோக்கி அமைய பெற்றுள்ளது. இடது புறம் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் சன்னிதியும், கோவிலின் வடமேற்கு திசையில் வள்ளி-தெய்வானை சமேத முருகன் சன்னிதியும் உள்ளது. இக்கோவிலில் தல விருட்சமாக வில்வ மரமும், மாமரமும் இருந்தது. இதில் காலப்போக்கில் மாமரம் அழிந்துவிட்டது. தற்போது சிறிய வில்வமரங்கள் மட்டுமே உள்ளன.
திருநள்ளாறு கோவிலில் அமைந்துள்ளது போல் கிழக்கு நோக்கிய திசையில் தனி சன்னிதியாக சனீஸ்வர பகவானும், நேர் எதிர் திசையில் மேற்கு திசை நோக்கி சூரிய பகவான் தனிச் சன்னிதியிலும், இதற்கு அருகில் பைரவர் சன்னிதியும், இறுதியாக சண்டேசர் சன்னிதியும் அமைந்துள்ளது. கோவிலின் வடகிழக்கில் தீர்த்த குளம் இருந்தது. அதுவும் தற்போது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது.
ராவணன் வழிபட்ட தலம்
சிவ பக்தனான ராவணன், முன்பு ஒரு சமயம் தனது விமானத்தில் திருக்கயிலையில் இருந்து நீண்ட ஆயுளும், வாள் படையும் பெற்று வரும் போது, தன்னை அறியாமல் இந்தக் கோவிலுக்கு மேல் விமானம் செல்ல முடியாமல் திணறியது. உடன் ராவணன் விமானத்தை தரை இறக்கிப் பார்த்தான். அப்போது பூத கணத்தவர்களின் சிவ, சிவ என்ற நாமாவளி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. இது சிவ பக்தரான ராவணனை பெரிதும் ஈர்த்தது. உடன் தன்னை சிவ தியானத்தில் ஈடுபடுத்திக்கொண்ட ராவணன், சிவனை நினைத்து அங்குள்ள நதியில் நீராடி சிவ பூஜை செய்ய சென்றான்.
அந்த நேரம் உச்சி பூஜைக்கு அனைத்து வில்வ மரங்களும் பூத கணங்களாக மாறி வில்வ அர்ச்சனை செய்வதை கண்டு மகிழ்ந்து, ஆனந்த கூத்தாடி, தானும் அந்த பூஜையில் கலந்து கொண்டு சிவ பெருமானை வழிபட்டான். அப்போது சனி பகவான் ராவணனை பிடிக்க இங்கு வந்து சேர்ந்தான். ஆனால் சிவத்துவம் நிறைந்த இடமாக இருந்ததால், சனியால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. சிவத்தடையின் பேராற்றலை உணர்ந்த சனி, செயலிழந்து தன்னிலை தளர்ந்து, இங்கு தனித்து விடப்பட்டான் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.
ராகு, கேது தோஷம் நீங்கும்
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குழந்தையை பூத கணத்தவர்கள் மீட்டு கொண்டு வந்து, இக்கோவிலில் வளர்த்தார்கள். குழந்தையை தேடி வந்த தாய், அகத்திய முனிவரால் இங்கு வந்து குழந்தையை அழைத்துச்சென்றார். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அதில் தாய்க்கும், குழந்தைக்கும் ஏற்படக்கூடிய கடுமையான கிரக தோஷங்கள் நீங்கும் என்றது. அப்போது முதல் இக்கோவிலில் வந்து வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் விலகும். சனி துயரங்கள் எல்லாம் முற்றிலும் விலகும் என்பது ஐதீகம்.