பட்ஜெட்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் + "||" + Central budget Tamils tabled

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள்
கடந்த வெள்ளியன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், தமிழகத்தை சேர்ந்த 6-வது நிதி மந்திரி ஆவார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து பதவி ஏற்றவர்களில் அதிக எண்ணிக்கையிலான நிதி மந்திரிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். இதுவரை 6 நிதி மந்திரிகள் தமிழர்கள்

இந்தியாவின் முதல் நிதி மந்திரியான கோவையை சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1947-ல் அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மொத்த செலவு வெறும் ரூ.171.15 கோடியாக இருந்தது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், வரும் நிதியாண்டில், மொத்தம் ரூ.27,86,349 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பெண் நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன், மதுரையில் பிறந்தவர்.


இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 29 நிதி மந்திரிகளால், மொத்தம் 73 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 21 பட்ஜெட்டுகளை (3 இடைக்கால பட்ஜெட்டுகள் உள்பட) தமிழகத்தை சேர்ந்த 6 நிதி மந்திரிகள் தாக்கல் செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். நிர்மலா சீதாராமன் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர். ப.சிதம்பரம் 2 முறை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிதி மந்திரியாக இருந்தவர். 7 முறை காங்கிரஸ் கட்சியில் இருந்து, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

திராவிட கட்சிகளில் இருந்து இதுவரை நிதி மந்திரியாக யாரும் நியமிக்கப்படவில்லை. மிக அதிக முறை அதாவது 10 பட்ஜெட்டுகளை அளித்த பெருமையை மொரார்ஜி தேசாய் பெற்றார். இதற்கு அடுத்து 9 பட்ஜெட்டுகளை ப.சிதம்பரமும், 8 பட்ஜெட்டுகளை பிரணாப் முகர்ஜியும் தாக்கல் செய்துள்ளனர். யஷ்வந்த் சின்கா, ஒய்.பி.சவான் மற்றும் சி.டி.தேஷ்முக் ஆகியோர் தலா 7 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளனர். டி.டி.கிருஷ்ணமாச்சாரி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் தலா 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், அன்று நிலவிய கடுமையான உணவு தானிய பற்றாக்குறை, பஞ்சம் மீது கவனம் செலுத்தப்பட்டது. தேசப்பிரிவினை, கடும் வறுமை, உணவு பற்றாக்குறை, அகதிகளால் ஏற்பட்ட நெருக்கடி ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ரூ.175.15 கோடி வருவாய் ஈட்ட சண்முகம் செட்டியாரின் பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரூ.26.24 கோடி பற்றாக்குறையுடன், அந்த வருடத்திற்கான மொத்த செலவு ரூ.197.29 கோடி என்று கணிக்கப்பட்டது.

உணவு உற்பத்தி, பாதுகாப்புத்துறை மற்றும் நிர்வாக செலவுகளுக்காக மிக அதிகமான தொகை ஒதுக்கப்பட்டது. காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர் காரணமாக, பாதுகாப்புத்துறைக்கு மிக அதிகமாக ரூ.92.74 கோடி ஒதுக்கப்பட்டது. சுங்க வரி வருவாய் ரூ.50.5 கோடியாகவும், தபால், தந்தி துறையின் வருவாய் ரூ.9 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

‘தடைகளில் இருந்து விடுபட்ட இந்தியா, ஆசிய நாடுகளின் தலைவராக, சுதந்திர நாடுகளின் முன்னோடியாக திகழ, வருங்காலங்களில், மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும்“ என்று பட்ஜெட் உரையின் இறுதியில் சண்முகம் செட்டியார் கூறினார்.

1892-ம் ஆண்டு அக்டோபரில், கோவையில் பிறந்த சண்முகம் செட்டியார், ஒரு வணிக குடும்பத்தை சேர்ந்தவர். இரண்டாம் உலகப் போருக்கு பின், ஒரு புதிய உலக ஒழுங்குமுறையை உருவாக்க, ‘பிரிட்டன் வுட்சில்’ நடத்தப்பட்ட, உலக நிதி மாநாட்டிற்கு, இந்தியாவின் பிரதிநிதியாக சென்றார்.

பொருளாதார விவகாரங்கள் பற்றிய அறிவுத்திறன் கொண்டிருந்ததால், இந்தியாவின் முதல் நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டார். நேருவின் விருப்பத்திற்கு மாற்றாக, மகாத்மா காந்தியால், சண்முகம் செட்டியார் தேர்வு செய்யப்பட்டார். நேருவுடன் ஏற்பட்ட பிணக்கினால், சிறிது காலம் கழித்து சண்முகம் செட்டியார் பதவி விலகினார். தோலினால் செய்யப்பட்ட பெட்டியில் பட்ஜெட் ஆவணங்களை நிதி மந்திரி எடுத்து செல்லும் வழக்கத்தை இந்தியாவில் தொடங்கி வைத்தவர்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில் துறையின் அடித்தளத்தை நிர்மாணித்தவர் என்ற பெருமை பெற்ற டி.டி.கிருஷ்ணமாச்சாரி, 1956-1958 மற்றும் 1964-1966-ல் நிதி மந்திரியாக இருந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். 1957-ம் ஆண்டு அவரின் முதல் பட்ஜெட்டில், வரிவிதிப்பில் பெரும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். கடுமையான அன்னிய செலாவணி தட்டுப்பாட்டை சமாளிக்க, இறக்குமதிகள் மீது கட்டுப்பாடுகளை விதித்தார்.

சொத்து வரி, செலவு வரி, ரெயில் பயணிகள் கட்டணம் மீது புதிய வரி ஆகியவற்றை அறிமுகப்படுத்தி வரி வசூலை அதிகரித்தார். 1957-ம் ஆண்டு பட்ஜெட் உரையில், ‘பட்ஜெட் கணக்கீடுகளை விட ரூ.44.10 கோடி அதிகமாக, ரூ.571 கோடி ரூபாயாக வருவாய் உள்ளது. செலவுகள் ரூ.533.55 கோடியாக உள்ளது. பட்ஜெட் கணக்கீட்டில் இது ரூ.545.43 கோடியாக இருந்தது’ என்று கிருஷ்ணமாச்சாரி தெரிவித்தார்.

அவர் நிதி மந்திரியாக இருந்தபோது, 3 இரும்பு உருக்காலைகளை பொதுத்துறையில் உருவாக்கினார். ஐ.டி.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் யு.டி.ஐ ஆகிய நிதி நிறுவனங்களை துவக்கினார். பல நீர் மின் திட்டங்களையும் உருவாக்கினார். ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக, டி.டி.கே குழுமத்தை உருவாக்கிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஊழல் குற்றச்சாட்டுகளினால், பதவி விலகிய முதல் மத்திய மந்திரி ஆவார். 1963-ம் ஆண்டு அவர் மீண்டும் நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவில் பசுமை புரட்சியை உருவாக்கியவருமான சிதம்பரம் சுப்பிரமணியம் பொள்ளாச்சியில் பிறந்தவர். இந்திரா காந்தியின் சோசியலிசம் உச்சத்தில் இருந்த காலத்தில், 1975-1976 மற்றும் 1976-1977ம் ஆண்டுகளில் பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். அவர் தனது முதல் பட்ஜெட்டில் விவசாயத்திற்கும், அதிக விளைச்சல் கொடுக்கும் உயர் ரக விதைகள் உற்பத்திக்கும் முன்னுரிமை அளித்தார்.

விளைச்சலை அதிகரிக்க, உர உற்பத்தி திட்டங்களை துரிதப்படுத்தினார். விவசாய கடன்களுக்கான கூட்டுறவு சங்கங்களை தொடங்கி, கடன் உதவிகள் அளிக்கவும், விளைபொருட்களை சந்தைப்படுத்தவும் ஊக்கம் அளித்தார். அவரின் பட்ஜெட் உரையில் இருந்து “மத்திய திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.2,558 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.2,129 கோடியை விட ரூ.429 கோடி அதிகம். நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்காக, திட்ட முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம், 5-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்குகளை அனைத்து துறைகளிலும் எட்ட முடியும்“ என்று தெரிவித்தார்.

கூடுதல் வருமானமாக ரூ.239 கோடியை ஈட்ட திட்டமிட்டதன் மூலம், பற்றாக்குறையை ரூ.464 கோடியில் இருந்து ரூ.225 கோடியாக குறைத்தார். பட்ஜெட் உருவாக்கத்தில் இது அரிதான சாதனையாகும். கடந்த 1998-ம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் உச்சபட்ச விருதான பாரத ரத்னா அளிக்கப்பட்டது.

மாநில அரசியலில் புகழ்பெற்ற ராமசாமி வெங்கட்ராமன் பின்னர் மத்திய தொழில்துறை மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும், பின்னர் பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார். பிறகு துணை ஜனாதிபதியாகவும், இறுதியாக ஜனாதிபதியாகவும் ஆனார். தஞ்சை மாவட்டத்தில் ராஜமடம் என்ற கிராமத்தில் பிறந்த வெங்கட்ராமன், 2 முழுமையான பட்ஜெட்டுகளையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்தார். சமூகப்பொருளாதார முன்னேற்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார்.

அவருடைய முதல் பட்ஜெட்டில், ரேடியோ லைசென்ஸ் கட்டணத்தை ஒழித்தார். இதன் மூலம் அரசுக்கு ரூ.4 கோடி இழப்பு ஏற்பட்டது. தொலைக்காட்சி பெட்டிகள் மீதான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. 1980-1981-க்கான திட்ட செலவுகளுக்காக ரூ.7,340 கோடி ஒதுக்கப்பட்டது.

பட்ஜெட் ஆவணங்களில் இதை பற்றி, ‘இதற்கான நிதியாக பட்ஜெட்டில் இருந்து ரூ.5,322 கோடியும், பொதுத்துறை நிறுவனங்களின் சொந்த நிதியில் இருந்து ரூ.2,018 கோடியும் அளிக்கப்படும்.“ மாநிலங்களுக்கு அளிக்கப்படும் உதவிகளுக்காக ரூ.3,094 கோடி ஒதுக்கப்படுகிறது. மலைவாழ் மற்றும் பழங்குடி மக்களுக்கான திட்டங்களுக்கும், பட்டியலின மக்களுக்கான சிறப்பு திட்டங்களுக்கும்,

வட கிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களுக்கும், நிதி ஒதுக்கப்பட்டது.

வெங்கட்ராமன் தனது பட்ஜெட் உரையில், ‘கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, தகுதியானவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க முடிந்த வரை முயற்சி செய்துள்ளேன். புதிய முதலீடுகளை ஊக்குவிக்க முயற்சி எடுத்துள்ளேன். பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம், உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். எனது பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தி, சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும்“ என்று நிறைவு செய்கிறார்.

ஜி.கே.மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் அன்று இருந்த ப.சிதம்பரம், 1997-ம் ஆண்டு அளித்த முதல் பட்ஜெட், ஒரு ‘கனவு பட்ஜெட்‘ என்று கருதப்படுகிறது. அதில், தாராளமயமாக்கல் கொள்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவை ஒரு பெரும் பொருளாதார பலம் கொண்ட நாடாக உருமாற்ற பாதை வகுக்கப்பட்டது. பலவீனமான ஐக்கிய முன்னணி அரசினால் இந்த ‘கனவு பட்ஜெட்‘ உருவாக்கப்பட்டது. நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களை அதிரடியாக குறைத்ததன் மூலம் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டார்.

வருமான வரி 40 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், உச்சபட்ச சுங்க வரி 40 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. உற்பத்தி வரி எளிமைப்படுத்தப்பட்டது. திறந்த பொருளாதார கொள்கைகளை ஊக்குவிப்பதன் மூலம், அன்னிய நேரடி முதலீடுகள் பெரிய அளவில் அதிகரித்தன. அதிக வளர்ச்சி கொண்ட ஆசிய பொருளாதார வல்லரசுகளான ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவை நிலைநிறுத்த திட்டமிட்ட சிதம்பரம், தனது பட்ஜெட் உரையில், “இந்நாடுகள் தைரியம், ஞானம், யதார்த்தமான கொள்கைகள் மூலம் முன்னணி உலக நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன“ என்றார்.

அவரின் முதல் பட்ஜெட்டுக்கு பிறகு, 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்திருக்கிறார். இதன் மூலம் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த, தமிழகத்தை சேர்ந்த ஒரே நிதி மந்திரி என்ற பெயரை எடுத்தார். அவரின் பட்ஜெட் உரைகள் தெளிவாகவும், கூர்மையாகவும் இருக்கும். திருக்குறளில் இருந்தும், ரவீந்திரநாத் தாகூர், சீனப் புரட்சியாளர் மாவோ சே துங் ஆகியோரின் எழுத்துக்களையும் மேற்கோள் காட்டுவார்.

மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன், சரியான பாதையில் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான வலுவான அஸ்திவாரத்தை பெற்றுள்ளார். உலகில் மிக வேகமாக வளரும் பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 7 சதவீத வளர்ச்சி விகிதமும், 2.7 லட்சம் கோடி டாலர்கள் அளவுக்கு ஜி.டி.பி.யும் கொண்டுள்ளது. நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 3 லட்சம் கோடி டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கிறார்.

2019 பட்ஜெட்டில், ரூ27,86,349 கோடி அளவுக்கு செலவுகள் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு உள்ளது. உள்கட்டமைப்பு, வீடுகளுக்கான உள்கட்டமைப்பு, உயர் கல்வித்துறை, வேலைவாய்ப்புகளை பெருக்க பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் ஆவணங்களை நாடாளுமன்றத்திற்கு ஒரு தோலிலான பெட்டியில் எடுத்து செல்லும் பாரம்பரியத்தை உடைத்த நிர்மலா சீதாராமன், அவற்றை ‘பஹி காதா‘ எனப்படும் சிவப்பு நிற துணியில் சுற்றி, கொண்டு வந்தார். இதன் மூலம் காலனிய காலவழக்கத்தை உடைக்க முயற்சி செய்தார் என்று ஒரு சில பார்வையாளர்கள் புகழ்ந்தனர். வேறு சிலர், இது நிலப்பிரபுத்துவ அடக்குமுறையின் சின்னம் என்கிறார்கள்.

1947 முதல், தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர்கள் தமிழகத்தில் சேர்ந்த அனைத்து நிதி மந்திரிகளும், பெரும் ஆளுமைகளாக உருவெடுத்தது, இந்திய பொருளாதாரத்தில் புரட்சிகரமான மாற்றங்களை முன்னெடுத்துள்ளனர். பட்ஜெட் தாக்கல் பாரம்பரியத்தை உடைத்த நிர்மலா சீதாராமன், பட்ஜெட் ஆவணங்களை, சூட்கேசுக்கு பதிலாக, சிகப்பு நிற துணிப் பையில் எடுத்து சென்று சர்ச்சைகளை கிளப்பினார்.