"கமல் மிரட்டபட்டாரா" "விடியல முடிவு பண்றது நான்" கவனம் ஈர்த்த விக்ரம் பட விழா…!
விக்ரம் படத்திலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த 'பத்தல பத்தல' என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பும் சர்ச்சைகளையும் சந்தித்தது.
சென்னை
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்'.திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.
இந்த திரைப்படத்திலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த 'பத்தல பத்தல' என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பும் சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்த நிலையில் நேற்று விக்ரம் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நேற்று நடந்த விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இப்போது இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
இதில், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விக்ரம் பட விழாவில் உதயநிதி ஸ்டாலின்பேசும் போது கூறியதாவது:-
“நான் மிரட்டுகிறேன் என்றார்கள், கமலை மிரட்டி இப்படத்தை வாங்கிவிட்டீர்களா என கேட்டார்கள், யார் மிரட்டினாலும் அவர் பயப்படக்கூடியவர் அல்ல, அவரை யாரும் மிரட்ட முடியாது. கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கமல் நடிப்பை பார்த்து வளர்ந்தவன் நான். அரசியல் கட்சி தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள், ஆனால் ஒன்னே ஒன்னு வருடத்திற்கு ஒரு படமாவது கமல்ஹாசன் நடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி ,மாஸ்டர் படங்கள நான் பாத்துருக்கேன் என்று பேசினார்.
'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 1 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் முதல் இடத்தில் உள்ளது. அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story