கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாறு படைக்கும் முனைப்பில் நியூசிலாந்து..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Feb 2022 9:23 PM GMT (Updated: 23 Feb 2022 9:23 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்று நியூசிலாந்து அணி வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ளது.

கிறைஸ்ட்சர்ச், 

டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

தொடக்க டெஸ்டில் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 95 மற்றும் 111 ரன்களில் சுருண்ட தென்ஆப்பிரிக்கா சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. அந்த அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒரு போதும் இழந்ததில்லை. அந்த பெருமையை தக்கவைக்க வேண்டும் என்றால் இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இதற்கு டீன் எல்கர், பவுமா, மார்க்ராம், வான்டெர் துஸ்சென் போன்ற பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமாகும்.

ஆனால் உள்ளூர் சூழல் நியூசிலாந்துக்கே சாதகமாக உள்ளது. தொடக்க டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி முதல் இன்னிங்சிலும் (7 விக்கெட்), டிம் சவுதி 2-வது இன்னிங்சிலும் (5 விக்கெட்) தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை அலற வைத்தனர். இந்த டெஸ்டில் ‘டிரா’ செய்தாலே போதும் நியூசிலாந்து தொடரை வசப்படுத்திவிடலாம். நியூசிலாந்து அணி தங்களது கிரிக்கெட் பயணத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. 

முந்தைய 16 முயற்சியும் ஏமாற்றத்திலேயே முடிந்திருக்கிறது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்க டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்துக்கு தற்போது அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. அத்துடன் இந்த டெஸ்டிலும் வெற்றி கண்டால் டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு நியூசிலாந்து ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story