வேலழகன் கொலையில் கைதான தொழிலதிபருக்கு திடீர் நெஞ்சுவலி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி


வேலழகன் கொலையில் கைதான தொழிலதிபருக்கு திடீர் நெஞ்சுவலி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 6 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-07T02:41:56+05:30)

வேலழகன் கொலையில் கைதான தொழிலதிபர் திடீர் நெஞ்சுவலி காரணமாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலாப்பட்டு,

புதுவை மாநிலம் திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் வேலழகன். இவர் பழைய இரும்புகளை வாங்கி தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வந்தார். இதனால் ஏற்பட்ட அறிமுகத்தை தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். சில தொழிற்சாலைகளில் உணவகமும் நடத்தியதாக தெரிகிறது.

வேலழகன் தனது குடோனில் இருந்தபோது கடந்த மாதம் 19–ந்தேதி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியதில் தொழில்போட்டி காரணமாக வேலழகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

திடீர் நெஞ்சுவலி

இதுதொடர்பாக திருபுவனை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் உதயகுமார் உள்பட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தொழில் அதிபர் உதயகுமாருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டார். தீவிர இதயநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அங்கு வரும் நோயாளிகளின் உறவினர்களை போலீசார் விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.


Next Story