உடல்நலக்குறைவு காரணமாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு பணப்பலன்களை வழங்க மறுக்கக்கூடாது


உடல்நலக்குறைவு காரணமாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு பணப்பலன்களை வழங்க மறுக்கக்கூடாது
x
தினத்தந்தி 6 May 2017 10:15 PM GMT (Updated: 2017-05-07T03:16:11+05:30)

உடல்நலக்குறைவு காரணமாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு பணப்பலன்களை வழங்க மறுக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை,

சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டையை சேர்ந்தவர் தனம். இவர் கடந்த 1993–ம் ஆண்டு சிங்கம்புணரியை அடுத்த அய்யாபட்டி அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக சேர்ந்தார். இந்தநிலையில் கடந்த 2011–ம் ஆண்டு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் 3 மாத மருத்துவ விடுப்பு எடுத்து, சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ விடுப்பு முடிவதற்கு முன்பாகவே அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். சில நாட்களில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதைதொடர்ந்து அவருக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்கக்கோரி அவரது மகள் விஜயலட்சுமி, மாவட்ட திட்ட அதிகாரியிடம் விண்ணப்பித்தார். ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு பணப்பலன் வழங்க முடியாது என்று கூறி, அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து தனது மனுவை நிராகரித்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து, பணப்பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் விஜயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மனுதாரரின் தாயார் மருத்துவ விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது உடல்நலக்குறைவு காரணமாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஒழுங்கு நடவடிக்கையின்கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு தான் பணப்பலன்கள் மறுக்கப்படும். ஆனால் மனுதாரரின் தாயார் உடல்நலக்குறைவால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு சேர வேண்டிய பணப்பலன்களை வழங்க மறுக்க கூடாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி, 8 வாரங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story