நெல்லிக்குப்பம், விருத்தாசலம் பகுதியில் மணல் கடத்தல்; 11 மாட்டு வண்டிகள் பறிமுதல் 5 பேர் கைது


நெல்லிக்குப்பம், விருத்தாசலம் பகுதியில் மணல் கடத்தல்; 11 மாட்டு வண்டிகள் பறிமுதல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2017 11:00 PM GMT (Updated: 6 May 2017 11:00 PM GMT)

நெல்லிக்குப்பம், விருத்தாசலம் பகுதியில் மணல் கடத்தல்; 11 மாட்டு வண்டிகள் பறிமுதல் 5 பேர் கைது; 6 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் போலீசார் நேற்று நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிவந்தவர்களை, போலீசார் மறித்து விசாரித்தனர். அதில் நெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கீழ்அருங்குணம் மாணிக்கவேல்(42), மாயகிருஷ்ணன்(49) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதைபோல், நடுவீரப்பட்டில், அந்த பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 3 மாட்டுவண்டிகளை நடுவீரப்பட்டு போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக நடுவீரப்பட்டை சேர்ந்த குப்புசாமி(55), பி.என்.பாளையம் முருகன்(44), எஸ்.முருகன்(40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

புதுப்பேட்டை போலீசார் அங்குச்செட்டிப்பாளையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, அந்த வழியாக மணல் ஏற்றிவந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி, அதனை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் பண்ருட்டி கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கோட்லாம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் (45), காசிநாதன் (50), மணிவேல் (30) ஆகியோரது 3 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் அங்குள்ள மணிமுக்தாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த, 3 மாட்டு வண்டிகளை கம்மாபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோபாலபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சத்தியசீலன், ஆரோக்கியராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story