வாணாபுரம் அருகே பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
வாணாபுரம் அருகே பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். பள்ளி மாணவி தண்டராம்பட்டு தாலுகா வாணாபுரம் அருகேயுள்ள மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பண்டாரிநாதன் (வயது 35)
திருவண்ணாமலை,
தண்டராம்பட்டு தாலுகா வாணாபுரம் அருகேயுள்ள மழுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பண்டாரிநாதன் (வயது 35), விவசாயி. இவர் கடந்த 2016–ம் ஆண்டு ஜூலை 2–ந் தேதி அக்கிராமத்தில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அருகேயுள்ள வயலுக்கு வாழை இலை வெட்டி கண் பார்வையற்ற தந்தையுடன் 13 வயது பள்ளி மாணவி நடந்து சென்றாள். இதைக்கண்ட பண்டாரிநாதன், கண்பார்வையற்ற தந்தையிடம் ‘நீங்கள் சிரமப்பட வேண்டாம். உங்கள் மகளை நான் அழைத்து சென்று வாழை இலை வெட்டி கொடுக்கிறேன்’ என்று கூறி அவரை வயல் வரப்பில் உட்கார வைத்து விட்டு, அருகே உள்ள வாழை தோட்டத்திற்கு மாணவியை அழைத்து சென்றார்.
கற்பழித்து கொலைஅங்கு வைத்து பண்டாரிநாதன், மாணவியை கற்பழித்துள்ளார். வலி தாங்காத மாணவி அலறி துடித்துள்ளார். மாணவி சத்தம் போட்டால் தான் மாட்டி கொள்வேன் என்று நினைத்த பண்டாரிநாதன் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அங்கு மாணவி அலங்கோலமான நிலையில் இறந்து கிடந்தாள். அங்கிருந்து தப்பி ஓடிய பண்டாரிநாதனை பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து, வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பண்டாரிநாதனை கைது செய்தனர்.
ஆயுள்தண்டனைஇதுதொடர்பான விசாரணை திருவண்ணாமலை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மகளிர் கோர்ட்டு நீதிபதி மேரிஅன்செலம் பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த விவசாயி பண்டாரிநாதனுக்கு ஆயுள் தண்டனையும், மாணவியை கடத்தி சென்றது (366 ஏ) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். மேலும் தண்டனையை ஏககாலத்தில் பண்டாரிநாதன் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சாந்தகுமாரி ஆஜரானார்.
இதையடுத்து பண்டாரிநாதன் பலத்த போலீஸ் காவலுடன் வேனில் வேலூர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.