தாராபுரம் அருகே ஒப்பந்ததாரரிடம் ரூ.22 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை


தாராபுரம் அருகே ஒப்பந்ததாரரிடம் ரூ.22 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 May 2017 5:00 AM IST (Updated: 11 May 2017 10:46 PM IST)
t-max-icont-min-icon

ஒப்பந்ததாரரிடம் ரூ.22 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 56). இவர் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். தாராபுரம் பகுதியில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். குடிநீர் கேட்டு தொடர்ச்சியாக பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். எனவே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, லாரி மூலமாக பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

ஒப்பந்தம்

இதற்காக குமாரபாளையத்தை சேர்ந்த ராமசாமி (51) என்பவருக்கு, லாரி மூலம் குடிநீர் வழங்க கொளத்துப்பாளையம் பேரூராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு லாரி குடிநீர் ரூ.2 ஆயிரத்து 150 –க்கு வழங்குவதாக ராமசாமிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. அதன்படி கடந்த ஒரு மாதமாக லாரி மூலம் ராமசாமி குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்.

இதற்காக அவருக்கு பேரூராட்சி நிர்வாகம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் வழங்க வேண்டும். இதையடுத்து ஒப்பந்ததாரர் ராமசாமி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து தனக்கு வரவேண்டிய தொகையை வழங்குமாறு கேட்டுள்ளார்.

லஞ்சம்

அதற்கு செயல் அலுவலர் திருமலைசாமி, ஒரு லாரி குடிநீருக்கு ரூ.650 வீதம் தனக்கு லஞ்சமாக ரூ.22 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும், முழு பணத்தையும் கொடுத்தால் தான் உங்களுக்குச் சேரவேண்டிய தொகையை தரமுடியும் என்றும் கூறியதாக தெரிகிறது.

ஒரு லாரி குடிநீருக்கு ரூ.650 லஞ்சமாக கொடுத்தால் தனக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் ராமசாமி லஞ்சம் கொடுக்க மறுத்து விட்டார். ஆனால் திருமலைசாமியும் லஞ்சம் வாங்காமல் முழுத்தொகையையும் தரமாட்டேன் என பிடிவாதமாக இருந்துள்ளார்.

கைது

அதைத் தொடர்ந்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் இதுபற்றி ராமசாமி புகார் செய்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி மற்றும் போலீசார் கொளத்துப்பாளையம் வந்தனர். பின்னர் ராமசாமியிடம் ரசாயனம் தடவிய ரூ.22 ஆயிரத்தை கொடுத்து, அதை திருமலைசாமியிடம் கொடுக்குமாறு கூறினார்கள். அந்த ரூபாய் நோட்டுக்களை திருமலைசாமியிடம், ராமசாமி கொடுத்தார். இதை மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விரைந்து சென்று திருமலைசாமியை கையும், களவுமாக பிடித்தனர். அப்போது திருமலைசாமி, ராமசாமியிடம் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் திருமலைசாமியை கைது செய்து திருப்பூருக்கு அழைத்துச் சென்றனர். ஒப்பந்ததாரரிடம், பேரூராட்சி செயல் அலுவலர் லஞ்சம் வாங்கியதாக கைதுசெய்யப்பட்ட சம்பவம் கொளத்துப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story