ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்ட அமைச்சர் சரோஜா பதவி விலக வேண்டும்
ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்ட அமைச்சர் சரோஜா பதவி விலக வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு,
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக அமைச்சர் சரோஜா மீது அரசு பெண் அதிகாரி ராஜ மீனாட்சி போலீசில் புகார் கொடுத்ததுடன் வெளிப்படையாக பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்து உள்ளார். அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் சமீபகாலத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொடர்ந்து கொலை, தற்கொலை நடந்து உள்ளது. எனவே அரசு அதிகாரி ராஜமீனாட்சிக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் நியாயமாக இருக்காது. சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். மேலும், அமைச்சர் சரோஜா பதவி விலக வேண்டும்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ்இதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் இடைத்தேர்தலின்போது ரூ.89 கோடி பணம் வினியோகம் செய்ததற்கான புகார் எழுந்தது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அமைச்சர்களுக்கு தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விஜயபாஸ்கர் நண்பரான காண்டிராக்டர் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் நியாயமான விசாரணை நடக்க சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களில் இருக்கும் மர்மம் பேய் படக்கதை போல உள்ளது. ஆனால் பேய் எங்கிருந்து வருகிறது என்றுதான் தெரியவில்லை.
‘ரேங்க்’ பட்டியல்பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவில் ‘ரேங்க்’ பட்டியல் அகற்றப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ‘ரேங்க்’ பட்டியல் இருந்தால்தான் மாணவ–மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும். இல்லையென்றால் சிறப்பாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து விடும்.
தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முற்பட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் கடுமையாக எதிர்ப்போம்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.