கோடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கு: கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு
கோடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கு: கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடந்தது
கோவை
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் காவலாளி கிருஷ்ணபகதூர் அடையாளம் காட்டினார்.
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்குமறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் பங்களாவுக்குள் கடந்த மாதம் 24–ந் தேதி ஒரு கும்பல் புகுந்தது. அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்த கும்பல், மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரை தாக்கி விட்டு பங்களாவுக்குள் இருந்த கைக்கெடிகாரம் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்து சென்றது.
இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மனோஜ் சாமியார், சந்தோஷ் சாமி, சதீசன், திபு, உதயகுமார், சங்கனாச்சேரியை சேர்ந்த சாமி என்கிற மற்றொரு மனோஜ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜம்ஷீர் அலி, ஜிதின் ராய் ஆகியோர் கேரளாவில் நடந்த மோசடி வழக்கில் கைதாகி கேரள சிறையில் உள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜிஜின் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
அடையாள அணிவகுப்புஇந்த நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரில் 4 பேரின் அடையாள அணிவகுப்பு நேற்று நடந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மாஜிஸ்திரேட்டு தமிழ் செல்வன் முன்னிலையில் நடந்த இந்த அடையாள அணிவகுப்பில் சந்தோஷ் சாமி, சதீசன், திபு, உதயகுமார் ஆகிய 4 பேரையும் காவலாளி கிருஷ்ணபகதூர் நேரில் அடையாளம் காட்டினார். அடையாள அணிவகுப்பு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனோஜ் சாமியார், சாமி என்கிற மற்றொரு மனோஜ் ஆகியோரின் அடையாள அணிவகுப்பு பின்னர் நடத்தப்படும் என்று கோவை சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோர்ட்டில் ஆஜர்இதனை தொடர்ந்து சாமி என்கிற மனோஜ் தவிர, மற்ற 5 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, அவர்களுக்கு மேலும் 15 நாட்களுக்கு காவலை நீட்டித்து வருகிற 26–ந் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் 5 பேரும் கோவை மத்திய சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டனர்.