தொழில் அதிபர் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி சாலை மறியல்
தொழில் அதிபர் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி சாலை மறியல் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருபுவனை,
தொழில் அதிபர் வேலழகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி நேற்றுக்காலை புதுச்சேரி–விழுப்புரம் ரோட்டில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் சுமார் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொழில் அதிபர் கொலைதிருபுவனையை சேர்ந்த தொழில் அதிபர் வேலழகன். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவரை கடந்த மாதம் 19–ந் தேதி ஒரு கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. இந்த கொலை குறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வழக்கு விசாரணையில் தாமதம் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில் தொழில் போட்டியில் வேலழகன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு தொழில் அதிபர் உதயக்குமார் மற்றும் பிரபல ரவுடி ஜனா ஆகியோர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
குற்றச்சாட்டுஆனால் வேலழகன் கொலை செய்யப்பட்டதில் மேலும் சில தொழில் அதிபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஆனால் போலீசார் அவர்களை கைது செய்யவில்லை என்றும் கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். எனவே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் ஆரம்பத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்ட போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொலையின் பின்னணியில் உள்ளவர்களை பற்றிய விவரங்களையும் வெளியிட வேண்டும், வழக்கு விசாரணையை சி.பி.ஐ. போலீசுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
சாலை மறியல் போராட்டம்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனை சின்னபேட், பெரியபேட் பகுதிகளைச் 150–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து புதுச்சேரி–விழுப்புரம் மெயின்ரோட்டில் திருபுவனை 4 முனை சந்திப்பு பகுதியில் நேற்றுக் காலை 7 மணி அளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் அதனால் அந்த வழியாக நடைபெற்ற போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து நடைபெறும் சாலை என்பதால் நீண்ட தூரத்துக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மறியல் நடந்த சாலை வழியாக திருவண்டார்கோவில் மற்றும் அதை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது வழக்கம். அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். திடீர் மறியல் போராட்டம் காரணமாக திருபுவனை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை கிராமங்களை சேர்ந்தவர்கள் விழுப்புரத்துக்கும், புதுச்சேரிக்கும் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்மறியல் போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்களை திருவண்டார்கோவில் கிராமத்தில் இருந்து கலிதீர்த்தாள்குப்பம் வழியாக திருப்பிவிட்டனர்.
அதேபோல் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி சென்ற வாகனங்களை மதகடிப்பட்டில் இருந்து கலிதீர்த்தாள் குப்பம் வழியாக திருப்பிவிட்டனர். ஆனால் அந்த சாலை குறுகிய சாலை என்பதால் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்றுவிட்டன.
போலீஸ் சூப்பிரண்டு சமரசம்இதற்கிடையே மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போலீசாரின் சமரசத்தை மறியலில் ஈடுபட்டவர்கள் ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையும் கிராம மக்கள் ஏற்கவில்லை.
அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களில் சிலரை போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து மற்றவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பிறகு காலை 10–30 மணி அளவில் மறியல் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டம் காரணமாக சுமார் 3½ மணி நேரமாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து அதன் பிறகு சீரானது.