சேலத்தில் வங்கி துப்புரவு பணியாளர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது


சேலத்தில் வங்கி துப்புரவு பணியாளர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2017 3:52 AM IST (Updated: 1 Jun 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வங்கி துப்புரவு பணியாளர் கொலையில் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சேலம்,

சேலம் குகை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவருக்கு மஞ்சுளா, லட்சுமி என்ற 2 மனைவிகள். இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். சீனிவாசன் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பகுதிநேர துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து சேலம் செவ்வாய்பேட்டை அப்சரா இறக்கம் அருகே திருமணிமுத்தாறு கரையோரத்தில் மது குடித்தார். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் சீனிவாசன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

நண்பர்கள் 3 பேர் கைது

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சீனிவாசனுடன் மது குடித்தது கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த குப்புராஜ் (38), சேலம் கோட்டை அண்ணாநகரை சேர்ந்த தஸ்தகீர் (41), ஊமையன் என்கிற சாதிக்ஷா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் நண்பர்களான அவர்கள் சீனிவாசனை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குப்புராஜ், தஸ்தகீர், ஊமையன் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:– சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்புராஜிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் குப்புராஜ் தான் கொடுத்த பணத்தை சீனிவாசனிடம் அடிக்கடி கேட்டுள்ளார். அப்போது அவர், தன்னிடம் பணம் திரும்ப கேட்கக்கூடாது என்பதற்காக நண்பர்கள் முன்னிலையில் குப்புராஜை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.

கொலை செய்ய முடிவு

இதனால் மனமுடைந்து காணப்பட்ட குப்புராஜ், சீனிவாசனை கொலை செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அவர் தஸ்தகீர், ஊமையன் ஆகியோரிடமும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மது அருந்தும் போது சீனிவாசனுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு குப்புராஜ், தஸ்தகீர், ஊமையன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சீனிவாசனை கொலை செய்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story