பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது


பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2017 4:15 AM IST (Updated: 2 Jun 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார்.

செஞ்சி,

செஞ்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

பட்டா மாற்றம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் அன்புசெழியன் (வயது 48), விவசாயி. இவர் காங்கிரஸ் கட்சியில் விவசாய அணி தலைவராக உள்ளார். இவருடைய அக்காள் தனலட்சுமியின் கணவரான ஊரணித்தாங்கலை சேர்ந்த பிரகலாதனுக்கு பாகப் பிரிவினையின்போது 3½ ஏக்கர் நிலம் கிடைத்தது.

இந்த நிலம் பிரகலாதனின் தந்தை பெயரில் இருந்தது. அதை பிரகலாதன் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் தனது மைத்துனர் அன்புசெழியனின் உதவியை நாடினார்.

லஞ்சம்

அதன்படி நிலத்தை அளந்து உட்பிரிவு மற்றும் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி பிரகலாதன் சார்பில் அன்புசெழியன், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் வட்ட நில அளவையராக பணியாற்றி வரும் சங்கீதமங்கலத்தை சேர்ந்த சங்கர் (38) என்பவரை அணுகினார்.

அப்போது அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அன்புசெழியன், தன்னிடம் ரூ.12 ஆயிரம்தான் இருப்பதாக கூறி, அந்த பணத்தை கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட சங்கர், மீதமுள்ள 8 ஆயிரம் ரூபாயை உடனே கொடுத்தால்தான் நிலத்தை அளக்க முடியும் என்றார். அதற்கு அன்புசெழியன் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்றும், தொகையை குறைக்குமாறும் கேட்டார்.

ரசாயன பொடி தடவிய பணம்

இதையடுத்து ஆயிரம் ரூபாயை குறைத்து ரூ.7 ஆயிரம் மட்டும் கொடுக்கும்படியும், பணம் கொடுத்தால் மட்டுமே நிலத்தை அளந்து தர முடியும் எனவும் சங்கர் கண்டிப்புடன் கூறினார்.

இதுகுறித்து அன்புசெழியன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரசாயன பொடி தடவிய பணத்தை அன்புசெழியனிடம் கொடுத்து அதை சங்கரிடம் கொடுக்குமாறு போலீசாரிடம் கூறினார்கள். போலீசாரின அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்துடன் அன்புசெழியன் நேற்று காலை செஞ்சி தாலுகா அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த சங்கரிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார்.

நில அளவையர் கைது

அந்த பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, சதீஷ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன் ஆகியோர் விரைந்து சென்று சங்கரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

அதனை தொடர்ந்து சங்கரை போலீசார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான சங்கர், முன்னாள் ராணுவ வீரர் என்பதும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று நில அளவையர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(பாக்ஸ் செய்தி...)

ஜமாபந்தி நிகழ்ச்சியில் சிக்கிய நில அளவையர்

நிலத்தை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்ய மீதமுள்ள தொகையை செஞ்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சியின்போது கொடுத்தால், அந்த நிகழ்ச்சியிலேயே பட்டா மாற்றம் செய்து தருவதாக நில அளவையர் சங்கர் கூறியுள்ளார். அதன்படி அன்புசெழியன், லஞ்சப்பணத்தை எடுத்துக்கொண்டு செஞ்சி தாலுகா அலுவலகம் சென்றார். அங்கு ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அந்த பொதுமக்கள் கூட்டத்தின் கூட்டமாக அன்புசெழியன், அங்குள்ள நில அளவையர் சங்கரை சந்தித்து லஞ்சப்பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சங்கரை மடக்கிப்பிடித்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்தனர். இந்த சம்பவத்தால் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story