முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகன் கைது தலைமறைவானவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகன் கைது தலைமறைவானவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Jun 2017 4:06 AM IST (Updated: 2 Jun 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பார் மேலாளர் தாக்கப்பட்டார்.

கன்னிவாடி,

இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகன் கைதானார். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கிராம மக்கள் மறியல்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் திண்டுக்கல்– பழனி சாலையில் மதுக்கடை இருந்தது. கோர்ட்டு உத்தரவு காரணமாக இந்த மதுக்கடை, அதே பகுதியில் ஸ்ரீராமபுரம் செல்லும் சாலைக்கு மாற்றப்பட்டது. அந்த சாலையின் ஓரத்தில் சிறிது தூரம் தள்ளி கடை அமைக்கப்பட்டது. இதற்கு எல்லப்பட்டி, கட்டச்சின்னம்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், 2 கிராமத்தை சேர்ந்த சுமார் 50 பேர், மதுக்கடை அருகே ஸ்ரீராமபுரம் சாலையில் திரண்டு மறியல் செய்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மதுக்கடை பார் மேலாளரான ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மோதினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் முருகனை தாக்க தொடங்கினர். அங்கு இருந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவரை மீட்டனர். அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மூடப்பட்டது

இதைத்தொடர்ந்து, மதுக்கடையை முற்றுகையிட்ட கிராம மக்கள், அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றும்படி கோ‌ஷம் போட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க உடனடியாக அந்த மதுக்கடை மூடப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால், அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்கொடி பழனிசாமியின் மகன் கணேஷ்பிரபு, சாக்ரடீஸ், மொக்கசாமி என்ற கருப்பையா, ரெங்கநாதன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில், கணேஷ்பிரபு கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். முன்னதாக மூடப்பட்ட மதுக்கடை போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது.


Next Story