கொள்ளிடம் காவிரியில் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் கூடுதல் மோட்டார்கள் பொருத்த தடை கோரி வழக்கு
கொள்ளிடம் காவிரியில் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் கூடுதல் மோட்டார்கள் பொருத்த தடை கோரி வழக்கு திருச்சி கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
மதுரை,
திருச்சி லால்குடியை சேர்ந்த கருணாநிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
பெரம்பலூர் மாவட்டத்திற்கு தண்ணீர் வழங்குவதற்காக காவிரி ஆற்றின் கொள்ளிடம் தாளக்குடி கிராம பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் மோட்டார்கள் பொருத்தப்படமாட்டாது என திருச்சி கலெக்டர் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். இந்தநிலையில், சமீபத்தில் அதிக வேக திறன் கொண்ட 2 மோட்டார்களை தாளக்குடி ஆழ்துளை கிணறுகளில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி மோட்டார்கள் பொருத்தப்பட்டால் தாளக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விவசாயமும் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்று விடும்.
ஏற்கனவே அதிக திறன் கொண்ட மோட்டாரை 24 மணி நேரமும் இயக்கி நாள்தோறும் 86 லட்சம் லிட்டர் தண்ணீர் பெரம்பலூர் மாவட்டத்துக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும்பட்சத்தில் கூடுதலாக 2 மோட்டார்கள் பொருத்தினால் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தாளக்குடி கிராமத்தில் புதிதாக ஆழ்துளை கிணறுகளோ அல்லது கூடுதல் மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் எடுக்கவோ தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்பொறியாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 6–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.