நாமக்கல்லில் பெண் டாக்டர் உள்பட 3 பேர் கொலை: கொள்ளையர்கள் 2 பேர் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பு
நாமக்கல்லில் பெண் டாக்டர் உள்பட 3 பேரை கொலை செய்து, 28 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கொள்ளையர்கள் 2 பேர் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது.
நாமக்கல்,
நாமக்கல்–மோகனூர் ரோடு முல்லைநகர் வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வந்தவர் டாக்டர் சிந்து (வயது 32). இவரது தாயார் சத்தியவதி (50), பாட்டி விசாலாட்சி (68). இவர்கள் 3 பேரையும் கடந்த 2011–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13–ந் தேதி 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பட்டப்பகலில் கழுத்தை அறுத்து கொலை செய்தது. மேலும் வீட்டில் இருந்த 28 பவுன் நகைகளையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த சந்தானம் (28), வாணியம்பாடி காமராஜ் (33), பரமத்திவேலூர் இளங்கோ (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் மீதும் நாமக்கல் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.சிறையில் சாவு
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 3 பெண்களை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே அந்த வழக்கிலும் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட கோர்ட்டு 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2014–ம் ஆண்டு இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சந்தானம் சிறையில் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து காமராஜ், இளங்கோ ஆகிய 2 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கிடையே நாமக்கல் கோர்ட்டில் பெண் டாக்டர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 59 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கின் விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வரன் உள்பட 10 போலீஸ் அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சிகளின் விசாரணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
2 பேர் குற்றவாளிகள்இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. அப்போது பெண் டாக்டர் உள்பட 3 பேர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காமராஜ், இளங்கோ ஆகிய இருவரையும் போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இறுதி விசாரணைக்கு பிறகு நீதிபதி சம்பத்குமார், இந்த வழக்கில் காமராஜ், இளங்கோ ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறினார். மேலும் இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.